»   »  'கேப்டன்' ரசிகர்கள் - தொண்டர்கள் மோதல்!

'கேப்டன்' ரசிகர்கள் - தொண்டர்கள் மோதல்!

Subscribe to Oneindia Tamil
Vijaykanth
விஜயகாந்த்தைப் பார்ப்பதற்காக வண்டி போட்டுக் கொண்டு வந்த ரசிகர்களை, அவரது பாதுகாப்புக்காக நின்றிருந்த தேமுதிக தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ரசிகர்கள், தொண்டர்களுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயகாந்த நடிக்கும் 150வது படமான அரசாங்கம் படத்தின் பாடல் காட்சிகள் குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகின்றன.

பழைய குற்றாலம், கல்லிடைகுறிச்சி ஆகிய பகுதிகளை தொடர்ந்து மேக்கரை கேரள வனத்துறை செக்போஸ்ட் அருகே ஒரு பள்ளதாக்கில் சிறிய மண்டபம் போன்று செட் அமைக்கப்பட்டு அவரும், நாயகி நவ்னீத் கெளரும் நடனமாடும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

ஏற்கனவே விஜயகாந்த் பட ஷூட்டிங் நடப்பது குறித்து தகவலறிந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் ஏராளமாக திரண்டிருந்தனர்.

ஆனால் விஜயகாந்துக்கு பாதுகாப்பு அளிக்கும் தேமுதிக பாதுகாப்புப் படையினர் அவர்களை அருகே வந்து விஜயகாந்த்தை சந்திக்க அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்களை படப்பிடிப்பு குழுவினர் சமரசம் செய்தனர்.

படபிடிப்பு இடைவெளியின் போது விஜயகாந்திடம் நிருபர்கள் பேட்டி கேட்டதற்கு, இப்ப வேண்டாம். ரெண்டு நாளா எந்த பேப்பரையும் படிக்க வில்லை. மதுரை அல்லது சென்னை சென்று பத்திரிக்கையாளர்களை சந்திப்பேன் என்றார்.

இந்த நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200 பேர் தேமுதிகவில் இணைய, ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கும் விஜயகாந்த் அனுமதி கொடுக்கவில்லை.

படப்பிடிப்பு முடிந்தபோது படப் பிடிப்பு சாதனங்களை தேமுதிகவினர், ரசிகர்கள், தொண்டரணியினரை எடுத்துச் செல்லுமாறு விஜயகாந்த் உத்தரவிட்டார். இதனால் அவர்களும் அவற்றை தலைச் சுமையாகவும், கைச் சுமையாகவும் சுமந்து சென்றனர்.

மேலும் படப்பிடிப்புக் குழுவினருக்காக கட்சிக்காரர்கள் சிலர் வாகனங்களைக் கொடுத்திருந்தனராம். அதற்குக் கூட படப்பிடிப்புக் குழுவினர் டீசல் போடவில்லையாம். வண்டியைக் கொடுத்தவர்களே டீசலையும் போட வேண்டியதாயிற்றாம்.

இந்தப் படம் கேப்டனின் மச்சான் சுதீஷ் தயாரிக்கும் படம் என்பது நினைவிருக்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil