»   »  யுவன்சங்கருக்கு விவாகரத்து கிடைத்தது

யுவன்சங்கருக்கு விவாகரத்து கிடைத்தது

Subscribe to Oneindia Tamil
Yuvan Shankarraja with sujoya
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், அவரது மனைவி சுஜயா சந்திரனுக்கும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று விவாகரத்து வழங்கியது.

இசைஞானி இளையராஜாவின் 2வது மகன் யுவன் ஷங்கர் ராஜா. பூவெல்லாம் கேட்டுப் பார் படம் மூலம் தந்தை வழியில் இசையமைப்பாளரான யுவன், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

கடந்த 2002ம் ஆண்டு அவருக்கும், லண்டனைச் சேர்ந்த சுஜயா சந்திரனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2003ம் ஆண்டு இருவரும் லண்டனில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னரே அவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.

இதையடுத்து 2005ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி சென்னையில் யுவன், சுஜயா சந்திரனுக்கு முறைப்படி திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தனித் தனியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

இருவரும் மீண்டும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உள்ளதா என்பதை அறிவதற்காக இருவருக்கும் சட்டப்பட்டி 6 மாத கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியது. அதன் பிறகும் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றால் தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தேவதாஸ் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இக்காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது யுவனும், சுஜயாவும் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி பிரியும் முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இருவரும் ஒருமித்த குரலில் விவாகரத்தில் உறுதியாக இருந்ததால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil