For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டென்மார்க்கிலிருந்து ஒரு இளம்புயல்!

  By Staff
  |

  Poornitha
  குறைந்த செலவில் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக ஒரு மிரட்டலான தமிழ்ப் படத்தை எடுத்து வருகிறார் டென்மார்க் தமிழர் ஒருவர்.

  டென்மார்க் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழரான கே.எஸ்.துரை கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்குப் பெயர் இளம்புயல். இந்தப் படத்தில் நாயகனாக தன் மகன் வசந்த்தையே நடிக்க வைத்துள்ளார். இதற்காகவே ஆண்டுக்கணக்கில் மகனைத் தயார் செய்துள்ளார் துரை.

  இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் இயக்குநர் துரை நேற்று கூறியதாவது...

  உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தமிழன் தன் அடையாளத்தை இழப்பதே இல்லை. தமிழால் ஒன்றுபடுவோம் என்பதுதான் இந்தப் படத்தின் தத்துவம்.

  யாதும் ஊரே... என்று கூறி உலக வரைபடத்தின் எல்லைக் கோடுகளை என்றோ அழித்துப் போட்டவன் தமிழன். இந்தப் பெருமையை நாம் உணர்ந்திருக்கிறோமோ இல்லையோ... வெளிநாட்டவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

  இன்று உலகமே எல்லைகளற்ற வலைதளத்துக்குள் சுருங்கிவிட்டது. இணையதளம் என்ற அற்புதமான இந்த சக்தியைக் கொண்டே உலகை ஆளலாம்.

  அந்த எண்ணத்தில் கடலில் ஒரு தனித் தீவை ஏற்படுத்துகிறான் ஒரு விஞ்ஞானி. அதை அழிக்க முற்படுகிறான் அந்தத் தீவைக் கைப்பற்ற முயலும் இன்னொருவன். அதாவது நல்ல சக்தியை ஒரு தீய சக்தி அழிக்கப் பார்க்கும் அதே கதைதான். ஆனால் விஞ்ஞானத்தின் வீரியத்தை விளக்கும் விதத்தில் காட்சிகளை அமைத்து பிரமாண்டப் படுத்தியிருக்கிறோம்.

  இந்தப் படத்தின் தொன்னூறு சத காட்சிகள் டென்மார்க்கிலேயே எடுக்கப்பட்டுள்ளன. இங்கே படப்பிடிப்பு நடத்த முற்றிலும் இலவசமாகவே அனுமதிக்கிறார்கள். எங்களுக்கு அந்நாட்டு ஏர்போர்ட்டையே திறந்து விட்டு விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  மீதி பத்து சதவிகித காட்சிகளை விருதுநகருக்கு அருகே எடுத்தோம். இந்தக் காட்சிகள் ஈழப் பின்னணியில் வருபவை என்பதால் அதே மாதிரி இடத்தைத் தேர்வு செய்தோம்.

  படம் முழுவதுமாக முடிந்துவிட்டது. படத்தைப் பார்த்த ஸ்டார் மியூசிக் யாஹியா பாய் மிகவும் பிரமித்துப் போய் உடனடியாக வாங்கிக் கொண்டார். ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் நாங்களே ரிலீஸ் செய்கிறோம். மற்ற நாடுகளில் யாஹியா பாயே ரிலீஸ் செய்கிறார்.

  இந்தப் படம் எங்களுக்கு இப்போதே லாபம் தந்துவிட்டது. தமிழ்நாட்டில் எப்படிப் போகப் போகிறது என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும, என்றார் துரை.

  படத்தின் நாயகன் வசந்த் இசையில் முறையாகத் தேர்ச்சி பெற்றவர். எனவே அவரே இந்தப் படத்தின் இசையைக் கவனிக்கிறார். அலைகள் எனும் இணையதளத்தையும் இவர்தான் நிர்வகித்து வருகிறாராம்.

  வசந்துக்கு ஜோடியாக நடிக்கிறார் பூர்ணிதா. நாயகனுக்கு தோழியாக இருந்து காதலியாக மாறும் வேடம்தான் அவருக்கு. நெருக்கமான காதல் காட்சிகளும் உண்டாம். சமீப காலமாக படங்களே இல்லாமல் வாடிக் கொண்டிருந்த பூர்ணிதாவுக்கு இந்த இளம்புயல் ஆறுதலாக அமைந்துள்ளதாம்.

  கருணாஸ், சிந்துராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். செப்டம்பரில் திரைக்கு வருகிறது இளம்புயல்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X