twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கண்ணீர் தேசத்தின் 'காதல் வானம்'!

    By Staff
    |

    Vaseeharan with VS Udhaya
    இலங்கை கவிஞர்கள் யாராக இருந்தாலும் கண்ணீரை மட்டும்தான் பதிவு செய்வார்கள் என்ற கூற்றைப் பொய்யாக்கியிருக்கிறார் ஒருவர். அவர் வசீகரன்... தமிழ் திரையுலகுக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்தான் இவர். காதல் கடிதம் எனும் அர்த்தமுள்ள படத்தைத் தயாரித்தவர்.

    ஈழத்திலிருந்து நார்வேக்குப் புலம்பெயர்ந்து அங்கே சம்பாதித்ததைக் கொண்டு, தன் சினிமா - இலக்கிய ஆர்வத்துக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பவர்.

    வெறும் சப்தங்களே இசையாகிவிட்ட இன்றைய சூழலில் 'காதல் வானம்' எனும் ஒரு இனிய இசைத் தொகுப்பைத் தந்திருக்கிறார் வசீகரன், இசையமைப்பாளர் வி.எஸ். உதயாவுடன் இணைந்து.

    'கண்டேன் சீதை', 'பீஷ்மர்', 'காதல் கடிதம்' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் உதயா. சினிமாவில்தான் ஜூனியரே தவிர, ஆல்பங்களை உருவாக்குவதில் சீனியர். இவருக்கு இது இருபதாவது ஆல்பமாம்!

    காதல் வானம் தொகுப்பில் மொத்தம் எட்டு பாடல்கள். அனைத்துமே அர்த்தமுள்ள, மனதை வருடும் இனிய கீதங்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

    மதுபாலகிருஷ்ணன், கிருஷ்ணராஜ், பல்ராம் போன்ற திரை இசை பிரபலங்களுடன் டென்மார்க்கை சேர்ந்த இளம்பெண் ஜனனி, இலங்கையின் சிவகுமார், சாம்.பி.கீர்த்தன் மற்றும் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா ஆகியோரும் பாடல்களுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.

    சுப்ரமணியபுரம் படத்தின் சூப்ப்பர் ஹிட் பாடலான கண்கள் இரண்டால்.... பாடிய தீபா மிரியம் இந்த ஆல்பத்தில் 'சின்ன சின்ன மழைத்துளி...' என்ற பாடலுக்கு குரல் தந்துள்ளார்.

    ஒரு தந்தைக்கும் மகனுக்குமான பாசப்பிணைப்புதான் எத்தனை சிறப்புமிக்கது! இந்த ஆல்பத்தில் தன் தந்தைக்கு ஒரு மகன் வைக்கும் கவிதைப் படையலாக ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. அப்பா எனும் ஓர் உருவம்... என்ற அந்தப் பாடலை கேட்கும்போதே கண்கள் பனிக்கின்றன.

    பெரும்பாலும் பெண்கள் தங்கள் முப்பதுகளைத் தாண்டியபிறகுதான் தொலைத்த இளமையைத் தேடத் தொடங்குவார்கள். அந்தத் தேடலின் புள்ளி அநேகமாக அவர்களின் பள்ளிப் பருவம் அல்லது அந்தரங்கம் பகிரந்து கொண்ட அன்புத் தோழியாகத்தான் இருக்கும். இதை, சாந்து பொட்டு வைத்து... என்ற பாடலில் பதிவு செய்துள்ளார் வசீகரன். அதற்கு இனிமையாய் சுருதி கூட்டியுள்ளார் உதயா.

    வி.எஸ்.உதயா பாடியிருக்கும் சின்னமணி அக்கா...., கிருஷ்ணராஜ் பாடியுள்ள பொங்கலோ பொங்கல்... பாடல்கள் சந்தேகமில்லாமல் இன்றைய சினிமாவுக்கேற்ற சூப்பர் ஹிட் மெட்டுக்கள்.

    'இன்னும் இதுபோன்ற 10 ஆல்பங்களை உருவாக்கப் போகிறேன். அனைத்துமே காதலைக் கவுரவிக்கும் வகையில்தான் இருக்கும். காரணம் ஈழத் தமிழர்களுக்கு கண்ணீரையும் வலிகளையும் மட்டுமே பதிவு செய்யத் தெரியும் என்று கூறுபவர்களுக்கு எங்கள் காதலையும், இனிய மலரும் நினைவுகளையும் இசையாய் பதிந்து தரும் ஆர்வம்தான், என்கிறார் கவிஞர் வசீகரன்.

    தமிழுக்கு இப்படி இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X