twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தசாவதாரம்: ஐகோர்ட்டில் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு

    By Staff
    |

    K. S. Ravikumar
    சென்னை: தசாவதாரம் படத்தில் இந்துக்களின் உணர்வை கேலிக்கூத்தாக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்படவில்லை. தலைப்பும் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வெளியாக உள்ள படம் தசாவதாரம்.

    இப்படத்தில் சைவ- வைணவர்களின் மோதல் குறித்த அவதூறு காட்சிகள், ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் மீதும், பகவத் கீதை மீதும் கால் பதித்து ஏறுவது, ராமானுஜரை ஸ்ரீரங்கநாதர் சிலையில் வைத்து கட்டி கடலில் தள்ளுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவற்றை நீக்காமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சர்வதேச ஸ்ரீ வைஷ்ணவ தர்மா சம்ரக்ஷண சங்க தலைவர் ஸ்ரீசுவாமி கோவந்த ராமானுஜ தாசர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலளிக்கும்படி சென்ஸார் போர்டு, ஆஸ்கர் பிலிம்ஸ் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பு நீதிபதிகள் ராஜசூர்யா மற்றும் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.

    இதற்கு சென்ஸார் போர்டு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது: தசாவதாரம் என்ற தலைப்பு எப்படி இந்துக்களின் உணர்வுகளை அவமதிப்பதாகவும், கேலிக் கூத்தாக்குவதாகவும் உள்ளது என்பதை மனுதாரர் விளக்கவில்லை. சைவ-வைணவ சமயத்துக்கு இடையே மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. 2ம் குலோத்துங்க சோழன் சமய வேறுபாடு காரணமாக வைணவர்களை துன்புறுத்திய வரலாற்று உண்மையைத்தான் படத்தில் காட்டியுள்ளனர்.

    இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படத்தில் எந்த காட்சிகளும் இல்லை. படத்தின் தலைப்பு, ஒளிப்பதிவு சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இல்லை. தலைப்புக்கு ஆட்சேபணை தெரிவிக்க எந்த காரணமும் இல்லை. படத்தின் முன்னோட்ட காட்சிகளை பொறுத்த வரையில் கமல் ஓம் எனும் பிரணவ மந்திரம் மற்றும் கீதையின் மீது ஏறுவது போன்ற காட்சிகள் இல்லை.

    இதுபோன்ற காட்சிகளுக்கு சென்ஸார் போர்டு சான்றிதழ் தர முடியாது. கமல் ராமானுஜர் வேடத்தில் நடிக்கவில்லை. அவர் ரங்கராஜ நம்பி என்ற பெயரில்தான் நடித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி படத்தை பார்வையிட்டு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளோம். படம் இன்னும் வெளியாகாத நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்ஸார் போர்டு பதிலளித்துள்ளது.

    இதேபோல படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: தகுதி வாய்ந்த அமைப்பான சென்ஸார் போர்டு யூ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் இந்த வழக்கை தாக்கல் செய்ய மனுதாரருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. படத்தலைப்பு இந்துக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாக்குவது போல் இல்லை.

    படத்தின் முழுக் கதையும் தெரியாமல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சைவ-வைணவர்களுக்கு இடையிலான மோதல் குறித்து ஆட்சேபகரமான எந்த காட்சிகளும் படத்தில் இல்லை. 12ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. தசாவதாரம் படத்தின் தலைப்பை நாங்கள் தவறாக பயன்படுத்தவில்லை.

    அதற்கு யாரும் காப்புரிமை பெற்றிருக்கவில்லை. நடிகர் கமல் வைணவத்துக்காக தனது உயிரையும் தியாகம் செய்யும் வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் ராமானுஜர் பற்றியோ ஸ்ரீரங்கம் கோயில் பற்றியோ காட்சிகள் அமைக்கப்படவில்லை. நானும் ஒரு விஷ்ணு பக்தன்தான். படத்தின் தலைப்பை மாற்ற எந்த அவசியமும் இல்லை என்று கே.எஸ்.ரவிக்குமார் பதில் மனுவில் கூறியுள்ளார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜசூர்யா மற்றும் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X