For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அரசியல்-ரஜினியை நெருக்கும் ரசிகர்கள்: 27ல் அவசர கூட்டம்!

  By Staff
  |

  Rajini
  தமிழகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னையில் வரும் 27ம் தேதி கூடி அவசர ஆலோசனை நடத்த உள்ளனர்.

  அரசியல் மற்றும் ரசிகர் மன்றங்களை புணரமைக்க வேண்டிய கட்டாயம் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என மன்றத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

  குசேலன் திரைப்படத்துக்கு எதிராக வேண்டுமென்றே பிரச்சாரம் நடப்பதாகவும், அதை முறியடிக்கவும், இனி மீண்டும் அவ்வாறு நடக்காமல் தடுக்கவும் வகைசெய்யும் முக்கிய முடிவுகளை இக்கூட்டத்தில் எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

  ரஜினி ரசிகர் மன்றத்தினர் சொல்லும் கணக்குப்படி, பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத மன்றங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாம்.

  இதில் அங்கீகரிக்கப்பட்ட மன்றங்களின் எண்ணிக்கை மட்டும் அறுபதாயிரத்து எண்ணூறு உள்ளனவாம். தமிழகம் தவிர மஹாராஷ்டிரம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஜப்பான், மலேசியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளனவாம்.

  மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மன்றங்களை புணரமைத்தல் மற்றும் புதுப்பித்தல், நிறுத்தப்பட்ட பதிவு எண்களை உடனடியாக வழங்குதல், புதிதாக மன்றம் வைக்க விரும்புபவர்களுக்கு அனுமதியளித்தல், காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக நிர்வாகிகளை நியமித்தல்,

  மன்ற பிரமுகர்கள் ரஜினியைச் சந்திக்க மாதம் ஒருமுறை தேதி ஒதுக்குதல், ரசிகர் மன்ற கொடியினை அங்கீகரித்தல், மாணவரணி, வழகறிஞர் அணி, விவசாயிகள் அணி என மன்றங்களில் பல்வேறு கிளைகளை அதிகாரபூர்வமாக துவக்க அனுமதி கோருதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி ரஜினியிடமும் தலைமை மன்றத்திடமும் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

  இது குறித்து, சென்னையில் உள்ள மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

  தனது பலம் என்னவென்று தலைவருக்கு தெரியவில்லை. மன்ற சீரமைப்பு மற்றும் பதிவு எண் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றினால் அது அவருக்குப் புரியும். மேலும் போவோர் வருவோர் எல்லாம் ரஜினியை விமர்சனம் என்ற பெயரில் புழுதி வாரி தூற்றுவதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனவே அமைப்பு ரீதியிலான பலம் தற்போது மிகவும் அவசியமாகிறது.

  ரசிகர் பலமே இல்லாத நடிகர்கள் கூட கட்சி ஆரம்பித்து உலா வரும் நிலையில், தனது பின்னால் லட்சோப லட்சம் ரசிகர்படை மற்றும் மக்கள் சக்தி உள்ள ரஜினி இப்படி அமைதியாய் இருப்பது ஏன் என்று புரியவில்லை. இருப்பினும் வருங்காலத்தில் அவர் நல்லதொரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.

  விஜயகாந்த், சரத்குமார் போன்ற நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியும் கட்சி ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  அரசியல் குறித்தும் மன்ற சீரமைப்பு குறித்தும் தெளிவான ஒரு முடிவை அறிவிக்கும்படி சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

  ஏற்கெனவே இதே போன்று ரஜினியின் மன்றப் பிரமுகர்கள் ஒன்று கூடி ரஜினி மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போதைக்கு அவர்களை சமாதானப்படுத்தி அமைதியாக்கி வைத்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X