»   »  பாரீஸ் அழகிகள்-செலவு ரூ.2 கோடி!

பாரீஸ் அழகிகள்-செலவு ரூ.2 கோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shanthanu with Ishitha
சக்கரக்கட்டி படத்துக்காக ரூ. 2 கோடி செலவில் பத்து பாரீஸ் அழகிகளை வைத்து படு பிரமாண்டமாக ஒரு பாட்டைப் படமாக்கியுள்ளாராம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

தாணுவின் தயாரிப்பில் உருவாகும் படம் சக்கரக்கட்டி. பாக்யராஜின் மகன் சாந்தனு இப்படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். அவருக்கு இப்படத்தில் இரண்டு ஜோடிகள். ஒருவர் இஷிதா, இன்னொருவர் வேதிகா.

முனி படத்திற்கு முன்பாக வேதிகா நடிக்க வந்த படம் சக்கரக்கட்டிதான். ஆனால் முனி முன்னாடி எடுக்கப்படவே, அவர் 'முனி' நாயகி வேதிகா என்று அழைக்கப்படலானார். இப்போது காளை படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்த பின்னர் 'காளை' வேதிகா என்று அவருக்கு புது நாமகரணம் கிடைத்துள்ளது.

இந்த வேதிகாவும், இஷிதாவும் சேர்ந்து சக்கரக்கட்டியில் செமையாக நடித்துள்ளனராம். கிளாமரில் வேதிகா சூறாவளி என்றால், இஷிதா சுனாமியாக மாறியிருக்கிறாராம். இப்படத்துக்காக ஒரு ஆடம்பரமான பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

அதாவது 500 வருடத்திற்குப் பிறகு நியூயார்க் நகரம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து, அந்த கற்பனையை செட் போட்டு அதில் இந்தப் பாடலை படமாக்கினார்களாம்.

பாடல் படு ரிச் ஆக இருக்க வேண்டும் என்பதற்காக பாரீஸிலிருந்து பத்து 'பப்ளி' அழகிகளை கூட்டி வந்து ஆட விட்டுள்ளனர். அவர்களும் பம்பரமாக சுழன்று, 'பப்பளபளவென' ஆட்டம் போட்டுள்ளனராம்.

இந்தப் பாடலில் ஆடியவர்கள் சாந்தனுவும், வேதிகாவும். 'ஐ மிஸ் யூ டா' என்று ஆரம்பிக்கும் இந்த 'தமிழ்' பாடலை எழுதியவர் நா. முத்துக்குமார் (முழுக்க முழுக்க தமிழ்ல்லேயே பாட்டு எழுதினா வரி விலக்கு தருவாங்களாண்ணே?).

இப்படி ஒரு பாட்டை எடுத்தால் எவ்வளவு செலவாகும். ஆனதாம், கிட்டத்தட்ட ரூ. 2 கோடி செலவாகி விட்டதாம். செட்டுக்கே ஏகப்பட்ட லட்சங்கள் ஆனாதம், பாரீஸிலிருந்து வந்த அழகிகளுக்கும் கணிசமான லட்சங்களை வாரி விட நேரிட்டதாம்.

ஏன் இந்த 'கோடி வெறி' என்று இயக்குநர் கலாபிரபுவிடம் கேட்டால், பாடல் ரிச் ஆக இருக்க வேண்டும், பிரமிப்பாக இருக்க வேண்டும், இளைஞர்களை சட்டென்று கவர வேண்டும். அதனால்தான் செலவைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்து விட்டோம் என்று விளக்கினார்.

கலாபிரபு வேறு யாருமல்ல தாணுவின் செல்லப் புதல்வன்தான். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் முழுக்க முழுக்க இளைஞர்களுக்கானதாம். எனவே துள்ளலும், துடிப்புமாக இளசுகளை கிறங்கடிக்குமாம்.

படம் 'கெட்டி'யா இருந்தா சரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil