»   »  அமீரை ஒதுக்குகிறோமா?-கார்த்தி மறுப்பு

அமீரை ஒதுக்குகிறோமா?-கார்த்தி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

இயக்குநர் அமீரை நாங்கள் யாரும் ஒதுக்கவும் இல்லை, ஓரம் கட்டவும் இல்லை. பருத்தி வீரன் பட விழாவில் கலந்து கொள்ள அவருக்கும் அழைப்பு போனது. ஆனால் வரவில்லை, கூப்பிடவில்லை என்று அவர் கூறுவது நியாயமற்றது என்று அமீரால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் ஆசிய-அரபு திரைப்பட விழா நடைபெற்றது. இதில் அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியா மணி நடிப்பில் உருவான பருத்தி வீரன் படத்துக்கு சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. கார்த்திக்கு விருது கிடைக்கவில்லை.

இந்தப் பட விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று படத் தயாரிப்பாளர் பொறுப்பில் தற்போது இருப்பவர்களைக் குறை கூறியிருந்தார் அமீர். மேலும் இதேபோலத்தான் கேன்ஸ் பட விழாவுக்கு பருத்தி வீரன் போனபோதும் தன்னை ஓரம் கட்டி விட்டார்கள் என்று குமுறியிருந்தார் அமீர்.

இதற்கு பட நாயகனும், தயாரிப்பாளர் தரப்பைச் சேர்ந்தவருமான நடிகர் கார்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பருத்தி வீரன் விழாவுக்கு இமெயிலில்தான் அழைப்பு விடுத்திருந்தனர். எனக்கும், அமீருக்கும் அப்படித்தான் அழைப்பு போனது. எல்லோருக்கும் அப்படித்தான் அழைப்பு விடுத்திருந்தனர்.

ஆனால் தன்னை அழைக்கவில்லை என்று அமீர் சொல்வது நியாயமற்றது. தன்னை அவர் ஓரம் கட்டுவதாக கூறியிருப்பதும் நியாயமற்றது. யாரும் அவரை ஒதுக்கவில்லை, ஓரம் கட்டவில்லை.

கேன்ஸ் விழாவுக்கும் கூட நான் அவருக்கு இமெயில் மூலம் அழைப்பு அனுப்பியிருந்தேன். எனவே அழைப்பு வரவில்லை என்று அவர் கூறுவது வேதனையாக இருக்கிறது.

இதுபோன்ற பட விழாக்களுக்குப் படம் அனுப்பும்போது படத்தின் கதை, கேரக்டர்கள், வசனம் உள்ளிட்டவற்றை விளக்கி ஆங்கிலத்தில் எழுதி தனிப் புத்தமாக கொடுக்க வேண்டும். இப்படிப் படத்தை அனுப்ப ரூ. 15 ஆயிரம் வரை செலவாகும். இதை நான் ஒரு ஆளாகத்தான் செய்து அனுப்பியிருந்தேன்.

அமீர் மீது நான் நிறைய மதிப்பு வைத்துள்ளேன். அப்படிப்பட்ட நிலையில் அவரிடமிருந்து இப்படிப்பட்ட விமர்சனம் வருவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

பருத்தி வீரன் படம் குறித்த அத்தனை தகவல்களும் அவருக்குத் தவறாமல் அனுப்பப்படுகிறது. டெல்லி விழாவில் பருத்தி வீரனை அனைவரும் பாராட்டினர். குறிப்பாக ப்ரியா மணியை புகழ்ந்து தள்ளினர். இப்படிப்பட்ட பெருமைகள் எல்லாம் பட விழாவுக்கு அனுப்பியதால்தானே வந்தது என்றார் கார்த்தி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil