»   »  படைப்பாளி… துடைப்பாளி!

படைப்பாளி… துடைப்பாளி!

Posted By: Muthu
Subscribe to Oneindia Tamil

-முத்து சிவா

சுந்தர்.சியோட சண்டை படத்துல விவேக்க பாத்து அவர் ஒரு வசனம் சொல்லுவாரு, "சொந்தமா யோசிக்காம பழைய படத்துலருந்து சீன உருவுனா இப்புடித்தான் சொதப்பும்" ன்னு.

அதுக்கு விவேக், "நானாவது பழைய படத்துலருந்து ஒரு சீனத்தான் உருவுனேன். ஆனா சில பேரு மொத்த பழைய படத்தையும் உருவி அதுக்கு புது டைட்டில் வச்சி ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க," ம்பாறு. அது நூற்றுக்கு நூறு உண்மையும் கூட.

Copy cats of Tamil cinema

இது இன்னிக்கு நேத்து நடக்குற விஷயம் இல்லை. ஆதிகாலத்துலருந்து நம்ம இயக்குனர்கள் செஞ்சிக்கிட்டு வர்ற விஷயம் தான். ஆங்கிலப் படங்களையும், பிற மொழி உலகப் படங்களையும் பார்க்குறவங்க எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்த காலத்துல இவங்க இதெல்லாம் பண்ணும்போது கண்டுபிடிக்க ஆள் இல்லை.

ஆனா இப்பல்லாம் ஒரே ஒரு போஸ்டர் போதும். எந்த மொழிப் படமா இருந்தாலும் அடிவரை இறங்கி அலசி டீட்டெய்ல கொண்டு வர்ற அளவுக்கு நம்மூர்ல ஆட்கள் இருக்காங்க.

இயக்குனர்கள் மட்டும் இல்லாம இசையமைப்பாளர்களும் இதுக்கு விதிவிலக்கு இல்லை.

ஒரு பத்துவருஷம் முன்னால ஒரே சமயத்துல இரண்டு இசையமைப்பாளர்களிடமிருந்து ஒரே ட்யூன்ல ரெண்டு பாட்டு ரிலீஸ் ஆகுது. அந்த ரெண்டு இசையமைப்பாளர்கள்ல ஒருத்தர் நம்ம 'தேனிசைத் தென்றல்'. இந்த ஒரே ட்யூன் விவகாரத்தப் பத்தி அவர்கிட்ட கேக்குறாங்க. அதுக்கு அவர் சிம்பிளா, "அட அது ஒண்ணும் இல்லீங்க.. துபாய்லருந்து ஒரு சிடி எனக்கு கிடைச்சிது. அதே சிடி அந்த இசையமைப்பாளருக்கும் கிடைச்சிருச்சி போல" ன்னு சிரிச்சிட்டே சொல்லிட்டுப் பொய்ட்டாரு.

காப்பியடித்ததை தேனிசைத் தென்றல் போல பகிரங்கமா ஒப்புக்கொள்றவங்களும் உண்டு. 'ஏன் ஒரே சமயத்துல ரெண்டு பேருக்கு ஒரே ட்யூன் தோணிருக்கக்கூடாதா' ன்னு எகத்தாளமா எதிர் கேள்வி கேட்டு எஸ்கேப் ஆகுறவங்களும் உண்டு.

Copy cats of Tamil cinema

இப்டி அடுத்த படத்துலருந்து ஆட்டையப் போடும்போது நாம அத பொதுவா 'காப்பி'ன்னு சொல்ல முடியாது.

ஒவ்வொரு இயக்குனர்களையும், பிரபலங்களையும் பொறுத்து இது மாறுபடும்.

ஒரு புதுமுகம் பிறமொழிப் படங்கள்லருந்து சுடும் போது அத நாம 'காப்பி'ன்னு சொல்லலாம். ஆனா ஏற்கனவே நமக்கு நன்கு பரிட்சையமான பிரபலம் ஒரு விஷயத்த சுடும்போது அத காப்பின்னு சொன்னா அது தெய்வ குத்தமாயிடும். அதுக்கு டீசண்ட்டா இன்னொரு பேரு வச்சிருக்காங்க.

அதுதான் Inspiration. அட ரெண்டும் ஒண்ணுதானப்பான்னு நாம கேட்டா 'காப்பி வேறு இன்ஸ்பிரேஷன் வேறுடன்னு நாட்கணக்கா நமக்கு க்ளாஸ் எடுக்கக்கூட நிறைய பேர் இருக்காங்க. டைட்டில் கார்டுல இது இந்தப் படத்துலருந்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்டதுன்னு போட்டு மொத்தப் படத்தையும் அப்படியே சுட்டுகூட எடுத்து வைக்கலாம்.

சிலர் பட்டும் பாடாம சுடுறது உண்டு. சிலர் கண்ணுல படுறதெல்லாத்தையும் சுடுறதும் உண்டு. தெய்வத் திருமகள் படம் ரிலீஸ் ஆகி நல்லா போயிட்டு இருக்கு. அது I am Sam படத்துலருந்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்டதுன்னு எல்லாருக்கும் தெரியிது.

சிலர் 'இதெல்லாம் ஒரு பொழப்பா' ன்னு திட்டித் தீர்க்குறாங்க. சிலர் 'ஏன் பிறமொழில உள்ள நல்ல படங்களை நமக்கு எடுத்து போட்டுக் காட்டுறாங்க.. இதுல என்ன தப்பு?' ன்னு ஒரு மாதிரியா நியாயம் பேசுறாங்க.

அந்த சமயத்துல 'கத்தி', 'துப்பாக்கி' ன்னு ஆயுதங்களா யூஸ் பண்ற இன்னொரு ஃபேமஸான இயக்குநர்கிட்ட கருத்து கேக்குறாங்க.

'ஏன் சார் இப்டி அடுத்த மொழிப் படங்கள அப்புடியே காப்பியடிச்சி நம்மூர்ல

எடுக்குறது ஒரு ஆரோக்யமான விஷயமா சார்?'

அதுக்கு அவர் சொல்றாரு பாருங்க... "பிறமொழிப் படங்கள்லருந்து கதைக் கருவ மட்டும் எடுத்துக்கலாம். ஆனா மொத்தத்தையும் எடுக்குறது தப்பு!"

ஏம்பா கருத்து கேக்க வேற ஆளே இல்லையா உங்களுக்கு.. அதாவது அவரு "கஜினி" படத்துக்கு 'memento' லருந்து கருவை ஆட்டையப் போட்டது தப்பில்லையாம். ஆனா ஏஎல். விஜய் பண்ணது தப்பாம். அதாவது ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்.

கேமரா ஆங்கிள வச்சே எந்த படத்துலருந்து எடுத்ததுன்னு கண்டுபுடிக்கிற நம்ம ஆட்கள் இருக்க, உலக ஃபேமஸான ஒரு படத்துலருந்து மொத்தத்தையும் ஆட்டையப் போட்டு , 'கதை, திரைக்கதை' ன்னு தான் பேரப் போட்டுக்குறதுக்கும் ஒரு தைரியம் வேணும்ப்பா..

அந்த மாதிரி தில்லுக்கு சொந்தக்காரர் நம்ம ஆக்‌ஷன் கிங். ரசல் க்ரோவ் நடித்த க்ளாடியேட்டர் படத்தைப் பார்க்காதவங்க ரொம்ப கம்மி. ஒரு சில ஆங்கிலப் படங்கள் மட்டுமே பார்த்தவங்களா இருந்தாலும் அந்த லிஸ்டுல க்ளாடியேட்டர் கண்டிப்பா இருக்கும்.

ஆக்‌ஷன் கிங்கோட கதை திரைக்கதையில, ஏ.வெங்கடேஷோட இயக்கத்துல வெளிவந்த படம் துரை. தனக்கப்புறம் தன்னோட தளபதிய நாட்டுக்கு அரசனாக்கனும்னு நினைக்கிற அரசர, அவரோட பையன் நைட்டோட நைட்டா போட்டுத் தள்ளிட்டு தளபதி குடும்பத்தையும் மொத்தமா அழிச்சி தளபதிய கைதியாக்குற கதைய, அப்படியே இப்ப இருக்க சூழலுக்கு மாத்திருப்பாரு பாருங்க.. திறமை வேணும்யா அதுக்கெல்லாம்.

நாடுங்குறதுக்குப் பதிலா கட்சி. அரசர்ங்குறதுக்குப் பதிலா கட்சித் தலைவர். அவரோட அள்ளக்கை அர்ஜூன். தனக்கப்புறம் தன்னோட கட்சிய அர்ஜூன் தான் வழிநடத்தனும்னு அந்த கட்சித் தலைவர் நினைக்க, மேல சொன்ன மாதிரியே அவரோட மகன் அவர போட்டுத்தள்ளிட்டு அர்ஜுன் குடும்பத்தையும் அழிச்சி அர்ஜூன டீல்ல விடுறதுதான் கதை.

க்ளாடியேட்டர்ல ரசல் க்ரோவ் தன்னோட குடும்பத்தை நினைவுபடுத்துற மாதிரி கையில சின்ன சின்ன பொம்மைங்கள வச்சிருப்பார். அதக்கூட அச்சி பிசகாம 'துரை'யில அள்ளிப் போட்டு ஆக்‌ஷன் கிங் 'ரொம்ப அழாகா' பண்ணிருப்பாரு..

க்ளாடியேட்டர் ஒரு மெகாஹிட் படம். வெற்றிபெற்ற அந்தப் படத்தோட கதைய வச்சி நம்மூர்ல எடுத்த படம் நாலு நாளைக்கு கூடத் தாங்கல.

ஒரு மொழியில், இல்ல ஒரு நாட்டில் வெற்றி பெற்ற படங்கள் எல்லா இடங்களிலேயும் வெற்றி பெறுவதில்லை. எப்படி அந்தந்த ஊர் மக்களுக்கு பிடிக்கிற வகையில ஒரு விஷயத்த பிரசன்ட் பண்றாங்கங்குறதப் பொறுத்து இதெல்லாம் மாறும். மேலும் ஒரு சாதாரண விஷயம் ஒரு ஃபேமஸான ஆள் சொல்லும்போது பல அடுக்கு மக்களுக்கு சென்றடையும். ஆனா எவ்வளவு நல்ல விஷயமா இருந்தாலும் பரிட்சையம் இல்லாத ஒரு புது ஆள் சொல்லும்போது குடத்திலிட்ட விளக்கு போல ஒரு குறிப்பிட்ட மக்களுக்குள்ளயே சுருங்கிடுது.

என்ன இது எப்பப் பாத்தாலும் ஹாலிவுட்லருந்து தமிழ்ல காப்பி அடிச்சிட்டாங்க, கொரியன் படத்துலருந்து தமிழ்ல காப்பி அடிச்சிட்டாங்கன்னே சொல்லிக்கிட்டு இருக்கோமே.. நம்ம படங்கள்லருந்து யாரும் எதுவுமே எடுக்கலையா? இல்ல நம்ம படங்கள்ல வந்த கதைகளத் தழுவி எதுவும் படங்கள் உலக சினிமாவுல வரலயான்னு நமக்கே சில சமயம் தோணும். அப்படி எதாவது படங்கள் இருக்கா?

இருக்கு. இன்னிக்கு உலக சினிமா வரலாற்றுல இருக்க அனைத்து சாதனைகளையும் முறியடிச்சி முன்னுக்கு நிக்கிற ஒரு படத்தோட கதை நம்ம தமிழ் படத்தோட கதையோட அப்படியே ஒத்துப் போகுதுன்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகனும்.

அது என்ன படம்? கொஞ்சம் காத்திருங்க.. அப்புறமா சொல்றேன்!

English summary
Muthu Siva's Padaippali Thudaippali article discusses on copycats of Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil