»   »  கமல் படத்தையும் வாங்கிய கலைஞர்

கமல் படத்தையும் வாங்கிய கலைஞர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜியை வாங்கிய சூடு கூட குறையாத நிலையில் இன்னும் எடுத்தே முடிக்கப்படாத தசாவதாரம் படத்தையும் திமுகவின் கலைஞர் டிவி பெரும் தொகை கொடுத்து வாங்கி விட்டதாம்.

சன் டிவிக்கும், திமுகவுக்கும் ஏடாகூடமாகி விட்ட நிலையில்,புதிதாகப் பிறக்கப் போகிறது கலைஞர் டிவி.பெயர் வைத்துவிட்ட நிலையில் குழந்தை எப்போது பிறக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் குழந்தை ஊட்டமாக வளரத் தேவையான வேலைகளில் கலைஞர் டிவி நிர்வாகம் படு தீவிரமாக இறங்கி விட்டது. சாட்டிலைட் சேனல்கள் நிலைத்து நீடிக்க வேண்டுமானால் சினிமாதான் முதல் பலம் என்பதை உணர்ந்த கலைஞர் டிவி முதல் வேலையாக சிவாஜி படத்தை பெரும் தொகை கொடுத்த விலைக்கு வாங்கியது.

இந்த நிலையில், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து வரும் தசாவதாரம் படத்தையும் பெரும் தொகை கொடுத்து வாங்கி விட்டதாம் கலைஞர் டிவி. இதை அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

சிவாஜிக்குக் கொடுத்த விலையை விட கூடுதல் தொகைக்கு கமல் படம் விலை போயுள்ளதாம். இந்தியத் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 10 வேடங்களில் கமல் அசத்தலாக நடிக்கும் படம்தான் தசாவதாரம். ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் கணக்குப்படி படத்தின் பட்ஜெட் ரூ. 42 கோடியாகும்.ஆனால் இதை விட கூடுதலாக இருக்கும் என ஒரு தகவல் கூறுகிறது.

பட்ஜெட்டின் பெரும் பகுதியை ஐடிபிஐ வங்கி கடனாக கொடுத்துள்ளதாம். படத்தின் பெரும்பகுதி ஷூட் செய்யப்பட்டு விட்ட நிலையில், இன்னும் சில கோடிகள் இருந்தால்தான் படத்தை முடிக்க முடியுமாம். இந்த நிலையில்தான் தசாவதாரம் பெரும் தொகைக்கு விலை போயுள்ளது.

சிவாஜியைப் போல உலகத் தமிழர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் தசாவதாரம். இந்த இரு படங்களையும் விலை கொடுத்து வாங்கி விட்ட கலைஞர் டிவி, பகாசுரப் பசியோடு, விஜய்யின் அழகிய தமிழ் மகன், போக்கிரி ஆகிய படங்களையும் வாங்க முயற்சித்து வருகிறதாம்.

ஏற்கனவே அஜீத்தின் கிரீடம், விக்ரமின் பீமா ஆகிய படங்களையும் கலைஞர் டிவி வாங்கி விட்டது நினைவிருக்கலாம்.

முன்பு சன் டிவி, இப்போது கலைஞர் டிவி. பெயர் மட்டும்தான் வித்தியாசம், செயல்பாடுகள் அப்படியே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil