»   »  நெஞ்சம் மறப்பதில்லை: 'தெய்வப்பிறவி'.. சிவாஜி சொன்னது நடந்தது!

நெஞ்சம் மறப்பதில்லை: 'தெய்வப்பிறவி'.. சிவாஜி சொன்னது நடந்தது!

Subscribe to Oneindia Tamil

-பெரு துளசிபழனிவேல்

ஒரு படத்தை எடுத்து முடித்து வெளியிடும்போது அந்தப் படத்தில் கதையுமிருந்து, பொருத்தமான கலைஞர்களும் இருந்துவிட்டால் நிச்சயம் அந்தப் படம் வெற்றிப் படமாகும். அதே படம் வேறு மொழியில் படமாகின்றபோது அந்த மொழியிலும் பொருத்தமான கலைஞர்கள் இருந்தால் தான் படம் வெற்றிப் பெறும். இல்லையென்றால் படுதோல்வியை சந்தித்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலை தெய்வப்பிறவி படத்திற்கு ஏற்பட்டது.

தெய்வப்பிறவி (1960) படத்தை கமால் பிரதர்ஸ் நிறுவனம், ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது. கதை வசனத்தை டைரக்டர் ஸ்ரீதரிடம் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முறையாக எழுதினார். 'கிருஷ்ணன் பஞ்சு' படத்தை இயக்கியிருந்தார்கள்.

Deiva Piravi and its Hindi remake

இந்தப் படத்தில் கட்டடம் கட்டும் மேஸ்திரியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். அவரிடம் வேலை செய்யும் சித்தாளாக நாட்டியப் பேரொளி பத்மினி நடித்தார். சிவாஜியின் தம்பியாக கள்ளபார்ட் நடராஜனும், பத்மினியின் தம்பியாக இலட்சிய நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரனும் நடித்திருந்தார்கள். ஒரு கட்டத்தில் மேஸ்திரி சித்தாளை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து வரும் போது இவர்களது குடும்பத்தில் சிவாஜி அவர்களின் சொந்தம் என்று சொல்லிக் கொண்டு சிலர் நுழைகிறார்கள்.

மேஸ்திரியாக இருந்த சிவாஜி காண்ட்ராக்ட்ராக உயருகிறார். வசதி வாய்ப்புகள் கூடுகிறது. இந்தச் சூழ்நிலையில் சிவாஜி பத்மினியை சந்தேகப்படுகிறார். பத்மினி சிவாஜியை சந்தேகிக்கிறார் இவர்கள் சந்தேகத் தீயை கொழுந்து விட்டு எரிய வைத்தவர்கள் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

'தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்'என்ற பாடலுக்கு ஏற்ப இந்தச் சந்தேகத் தீ நாளுக்குநாள் கொழுந்துவிட்டு எரிந்து அவர்கள் குடும்பத்தையே எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அவர்களின் சந்தேகம் தீர்ந்ததா? உண்மையான நிலைதான் என்ன? இதுபற்றி முக்கியத்துவம் கொடுத்துதான் இந்தப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட படங்களை இதற்குரிய கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களால் தான் காப்பாற்ற முடியும். இவர்கள் நடிப்பில் கொஞ்சம் சோடைப்போனாலும் படம் படுதோல்வியடைந்துவிடும். எனது கணவருக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பா? இது உண்மை தானா? இதை எப்படி சரி செய்வது? என் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் போய்விடுமோ? என்று போராடிக் கொண்டிருக்கும் வேடத்தில் பத்மினி நடித்தார்.

Deiva Piravi and its Hindi remake

எனது மனைவிக்கும் வேறொரு நபருக்கும் தப்பான உறவா? இது எப்படி ஏற்பட்டது? இதை எப்படி சரி செய்வது எனது வாழ்க்கையில் ஏன் இந்த நிம்மதியற்ற சூழ்நிலை? வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தார். எனது அக்காவை எதற்காக சந்தேகப்படுகிறார் மாமா? அக்கா மீது ஏன் இப்படி ஒரு பழி சுமத்துகிறார்? அக்காவை புரிந்துக் கொள்ளாமல் வேதனைப்படுத்துகிறாரே மாமா? இவர்களின் பிரச்சனையை எப்படி தீர்ப்பது? அக்காவின் வாழ்க்கைச் சந்தேகத் தீயிலேயே எரிந்து கருகிவிடுமோ? இப்படி இவர்கள் இருவருக்காக உள்ளுக்குள்ளேயே குமுறி, தவித்து துடித்துக் கொண்டிருக்கும் வேடத்தில் எஸ்.எஸ்.ஆர்.

இவர்கள் மூவரையும் முக்கியத்துவப்படுத்த தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. அனுபவம் வாய்ந்த மூன்று கலைஞர்களின் நடிப்பாற்றலினால் தான் இந்தப் படத்தை ரசிகர்களால் முழுமனதோடு ஏற்றுக் கொள்ள முடிந்தது, ரசிக்க முடிந்தது.இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியயமான காட்சிக்காக சிவாஜி தனது மனைவி பத்மினியை சந்தேகத்தின் பேரில் ஓங்கி அறைந்துவிடுவார். அதைப் பார்த்த பத்மினியின் தம்பி எஸ்.எஸ்.ஆர். சிவாஜியின் சட்டையைப் பிடித்து இழுத்து அவரும் ஆவேசமாக திருப்பி அடித்துவிடுவார்.

இதைப் பார்த்த பத்மினி தனது தம்பி எஸ்.எஸ்.ஆரை இழுத்து தனது கணவரை அடித்தற்காக தனது கையில் உள்ள குடை உடைகின்ற அளவிற்கு கண்மூடித்தனமாக அடிப்பார். இந்தக் காட்சி எடுக்ககப்பட்டபோது உண்மைச் சம்பவத்தை பிரதிபலிப்பதைப் போல உணர்ச்சிகரமாக நடித்தார்கள். படப்பிடிப்பு குழுவினரும் இப்பொழுது நடந்துக் கொண்டிருப்பபது படப்பிடிப்பு தான் என்பதை மறந்து ஓடிப்போய் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு அவர்களின் நடிப்பாற்றல் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட்டது.

படம் பார்த்தவர்கள் இந்தக் காட்சியைப் பார்த்த போது பதறிப் போனார்கள். அந்த அளவிற்கு காட்சி தத்ரூபமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் சிவாஜி & பத்மினி & எஸ்.எஸ்.ஆர். நடித்த உணர்ச்சிப்பூர்வமான காட்சியை புகைப்படமாக எடுத்திருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்தில் மூன்று பேரும் முறைத்துக் கொண்டு நிற்பார்கள். அந்த சூழ்நிலைக்கான காட்சியை புகைப்படமும் அழகாக வெளிப்படுத்தியிருக்கும்.

இந்தப் படம் முழுவதும் இவர்களின் நடிப்பு உணர்ச்சிகரமாகவே இருக்கும். இந்தப் படத்தை பொருத்தவரை கதையைவிட கதாபாத்திரங்களை ஏற்று நடித்த கலைஞர்களின் நடிப்பாற்றல்தான் படத்தை சிறப்பாக்கியிருக்கும். இந்தப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், 'பிந்தியா' என்ற பெயரில் இந்தியில் எடுத்தார்கள். சிவாஜி வேடத்தில் பால்ராஜ் சஹானி என்ற நடிகர் நடித்திருந்தார். இந்தப்படம் இந்தியில் வெளிவந்து படுதோல்வியை தழுவியது.

இந்தப்படம் இந்தியில் எடுப்பதை கேள்விப்பட்ட சிவாஜி இந்தப் படத்தை இந்தியில் எடுக்காதீர்கள். சரியாக வராது. தமிழில் நான் எஸ்.எஸ்.ஆர்., பப்பி (பத்மினி) எல்லாம் கொடுத்த பர்ஃமென்ஸ்ல தான் அந்தப்படம் நின்னுது. இந்த பர்ஃமென்ஸ் இந்தியிலே பண்ணமாட்டாங்க படம் நிக்காது எதுக்கு வீணா எடுக்குறிங்க என்று சொன்னாராம். அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையானது. நமது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ்.எஸ்.ஆர். போன்ற ஒப்பற்ற தலைச்சிறந்த கலைஞர்கள் எந்த

மொழியிலுமில்லை. அப்படி இருந்தாலும் இவர்களைப் போல் நடிப்பாற்றல் கொண்டவர்களாக இல்லை. அதைத்தான் 'தெய்வப்பபிறவி' படம் இந்தியில் போய் நிரூபித்தது

தொடரும்...

    English summary
    Though Sivaji Ganesan warned people not to remake Deiva Piravi in Hindi, it was done against his wish and was a dud at the box office.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more