»   »  ஜீவா ஆரம்பித்தார் ..ஜெயம் ராஜா முடிக்கிறார்!

ஜீவா ஆரம்பித்தார் ..ஜெயம் ராஜா முடிக்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜீவாவின் இயக்கத்தில் வளர்ந்து வந்த தாம் தூம் படத்தின் மீதப் பகுதியை ஹீரோ ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கவுள்ளார்.

திறமையான கேமராமேனாக மட்டுமல்லாமல் நல்ல இயக்குநராகவும் ஜொலித்த ஜீவா யாரும் எதிர்பாராத வகையில், தாம் தூம் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது மரணமடைந்தார்.

அவரது திடீர் மரணத்தால் திரையுலகமே அதிர்ந்து போனது. இந்த நிலையில் தாம் தூம் படத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியும் கூடவே எழுந்தது.

ஆனால் ஜீவா இயக்கி வந்த தாம் தூம் படத்தை ஜெயம் ரவியின் அண்ணனான இயக்குநர் ஜெயம் ராஜா முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜீவாவின் உதவி இயக்குநர் ஒருவர் கூறுகையில், படத்தின் 60 சதவீதப் பகுதி முடிவடைந்து விட்டது. அத்தனைக் காட்சிகளும் ரஷ்யாவிலேயே படமாக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ளப் பகுதியை இந்தியாவில் படமாக்க திட்டமிட்டிருந்தார் ஜீவா. ஆனால் ஜீவா மரணமடைந்து விட்டதால் அது முடியாமல் போய் விட்டது. இப்போது அந்தப் பகுதியை ஜெயம் ராஜா இயக்கக் கூடும். ஆனால் இந்தியாவுக்குப் பதில் அமெரிக்காவில் சில காட்சிகளை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

ஜெயம் ராஜாவும், ரவியும் இணைந்த படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளன. ஜெயம், எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் ஆகியவை அவை.

இந்த நிலையில் தாம் தூம் படத்தின் மீதப் பகுதியையும் ராஜாவே இயக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து ரவியும், ராஜாவும் இணைந்து பொம்மரிலு தெலுங்குப் படத்தின் ரீமேக்கில் பணியாற்றவுள்ளனர்.

தாம் தூம் படத்தின் மீதப் பகுதியை இயக்கப் போவதாக அடிபடும் செய்திகள் குறித்து ராஜாவிடம் கேட்டபோது, இதுகுறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை. படம் குறித்த ஐடியாவுக்குள் வர எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. ஆனால் மறைந்த ஜீவா நினைத்தபடி நல்ல படமாக தாம் தூம் வெளிவரும் என்றார் ராஜா.

ஜீவாவின் ஆத்மா திருப்திப்படும் வகையில் தாம் தூம் இருக்கும் என்று நம்புவோம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil