For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  காலத்தால் அழியாத பி.பி.ஸ்ரீனிவாஸ்.... சில நினைவுகள்...

  By Mayura Akilan
  |

  மென்மையான குரலால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கிறங்க வைத்த பழம்பெரும் பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஏப்ரல் 14ம் தேதி மதியம் மாரடைப்பினால் மரணமடைந்துவிட்டார்.

  82 வயதானாலும் உற்சாகமாக வலம் வந்த பாடகர் ஸ்ரீனிவாஸ். ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவில் பிறந்த அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு என 12 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

  காலங்களில் அவள் வசந்தம்... என்ற பாடலை கேட்கும் போது அந்த குரலில் இளையோடும், காதல் அனைவரையும் ரசிக்கவைக்கும். தேன் கூட்டில் உள்ள தேன் துளிகளில் எந்த துளிக்கு சுவை அதிகம் என்பதை கூற முடியாது என்றாலும் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ஒலித்த காலத்தால் அழியாத சில பாடல்களையும், அவரைப் பற்றிய சில நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.

  மனசுக்கு ஏது வயது?

  மனசுக்கு ஏது வயது?

  பி.பி.ஸ்ரீனிவாஸ் பின்னணி பாடாவிட்டாலும் அவரைப் பற்றிய நேர்காணல்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும். சமீபத்தில் டிவி 9 தொலைக்காட்சியில் கடைசியாக பேட்டியளித்த பி.பி.ஸ்ரீனிவாஸ் சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருந்தார். அவரை பேட்டி கண்ட இளம் பெண், இந்த வயதிலும் எப்படி இளமையாக இருக்கிறீர்கள்? என்று கேட்டார் அதற்கு பதிலளித்த ஸ்ரீனிவாஸ், உடம்புக்குதானே வயதாகிறது. மனதிற்கு வயதில்லையே, நான் என்றைக்கும் இளமையாக உணர்கிறேன். எல்லாம் கடவுளின் கிருபை என்றார்.

  மென்மையான குரலோன்...

  மென்மையான குரலோன்...

  தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் தனது மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர்.

  பேனா ரசிகர் பி.பி.எஸ்

  பேனா ரசிகர் பி.பி.எஸ்

  பி.பி.எஸ் எப்போதுமே தனது பாக்கெட்டில் 5 அல்லது 6 பேனாக்களை வரிசையாக சொருகி வைத்திருப்பார். அவருக்கு பேனாவின் மீது அலாதியான காதல் இருந்தது.

  காதலாய் கசிந்துருகிய குரல்...

  காதலாய் கசிந்துருகிய குரல்...

  காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு பல பாடல்களைப் பாடியுள்ளார் பி.பி.எஸ். அவரது குரலில் ராமு படத்திற்காக நிலவே என்னிடம் நெருங்காதே, சுமை தாங்கி படத்திற்காக மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... மயக்கமா கலக்கமா... போன்ற பாடல்களில் சோகத்தை குழைத்திருப்பார்.

  பாவமன்னிப்பு படத்தில் பாடிய காலங்களில் அவள் வசந்தம்... காதலோடு காலத்தால் அழியாத பாடலாக நிலைத்துவிட்டது.

  அனுபவம் புதுமை....

  அனுபவம் புதுமை....

  ரவிச்சந்திரன், முத்துராமன் நடித்த காதலிக்க நேரமில்லை படத்தில் சுசீலா உடன் இணைந்து பாடிய அனுபவம் புதுமை....பாடல் காதல் இளையோடும் அந்த பாடல் தனக்கு பிடித்தமானது என்று தன்னுடைய கடைசி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் பி.பி.எஸ். நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா... என்று காதலிக்க நேரமில்லை படத்தில் பாடிய பி.பி.எஸ், ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்து விட்டவர்.

  மகளின் பாசத்தை உணர்த்தியவர்...

  மகளின் பாசத்தை உணர்த்தியவர்...

  சிவாஜிகணேசனுக்கா பார் மகளே பார் படத்தில் பாடிய, அவள் பறந்து போனாளே... பாடலில் மகளின் பாசத்தை உணர்த்தியிருப்பார். அதேபோல் எதிர் நீச்சல் படத்தில் நாகேசுக்காக பாடிய காதல் பாடலான தாமரைக்கன்னங்கள் தேன்மலர் கின்னங்கள்... ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவை.

  நெஞ்சம் மறப்பதில்லை...

  நெஞ்சம் மறப்பதில்லை...

  நெஞ்சம் மறப்பதில்லை... என்று அவர் பாடிய பாடல் அவரை என்றைக்கும் மறக்க முடியாத அளவிற்கு செய்துவிட்டது. அதேபோல் ரோஜா மலரே ராஜ குமாரி.... நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்... போன்ற பாடல்கள் ரசிகர்களை கிறங்கடித்த பாடல்கள்.

  ராஜ்குமார் உடன் நட்பு

  ராஜ்குமார் உடன் நட்பு

  தமிழில் ஜெமினி கணேசனுக்கு அதிக அளவில் பாடல்களைப் பாடியதைப் போல கன்னடத்தில் நடிகர் ராஜ்குமாருக்கு அதிக அளவில் பாடல்களைப் பாடியுள்ளார். அதோடு இருவருக்கும் இடையே அலாதியான நட்பு உண்டு. சரீரம்தான் என்னது... சாரீரம் ஸ்ரீனிவாஸ் உடையது என்று பல மேடைகளில் புகழ்ந்துள்ளார் ராஜ்குமார்.

  ஆயிரத்தில் ஒருவனில்...

  ஆயிரத்தில் ஒருவனில்...

  பி.பி.எஸ் கடைசியாக தமிழில், கார்த்தி, ஆன்ட்ரியா நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜி.பி.பிரகாஷ் இசை அமைக்க "பெண்மானே பேர் உலகின் பெருமானே..." என்ற பாடலை பாடியிருந்தார். பி.பி.எஸ் பற்றி எழுதினால் பக்கங்கள் போதாது... எழுதிக்கொண்டே போகலாம். மண்ணை விட்டு அவர் மறைந்தாலும் அவர் பாடிய 3000 பாடல்கள்... என்றைக்கும் ரசிகர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது உண்மை.

  English summary
  Veteran playback singer PB Srinivas who rendered more than 3,000 songs in 12 languages is no more.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X