»   »  ரவியுடன் இணையும் ஹரிணி

ரவியுடன் இணையும் ஹரிணி

Subscribe to Oneindia Tamil

ஜெயம் ரவியுடன் இணைகிறார் ஜெனீலியா என்ற ஹரிணி. தெலுங்கு சூப்பர் ஹிட்டான பொம்மரிலுவின் ரீமேக்கில்தான் இருவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ரீமேக் கிங்குகளான ஜெயம் ராஜாவும், அவரது தம்பி ரவியும் இணைந்து அடுத்த படத்திற்கு அஸ்திவாரம் இட்டுள்ளனர். தெலுங்கில் மெகா ஹிட் ஆன பொம்மரிலு படத்தை இருவரும் தமிழுக்குக் கொண்டு வருகின்றனர்.

திருட்டுப் பயலே தயாரிப்பாளர் கல்பாதி அகோரம் இப்படத்தைத் தயாரிக்கிறார். ராஜா இயக்குகிறார், ரவி நடிக்கிறார்.

இதற்கு முன்பு ராஜாவும், ரவியும் இணைந்த ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனவை. அதேபோல பொம்மரிலு ரீமேக்கும் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் ராஜா அண்ட் கோ உள்ளது.

இதுவரை தங்களது தந்தை எடிட்டர் மோகனின் தயாரிப்பில் மட்டுமே ராஜாவும், ரவியும் படங்கள் செய்து வந்தனர். தற்போது முதல் முறையாக வெளித் தயாரிப்பாளருக்காக ஒரு படம் செய்ய முன்வந்துள்ளனர்.

தமிழில் தோற்று, ஆந்திராவில் ஹிட் ஆகி, அட்டகாசம் செய்து வரும் ஜெனீலியா, ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ், இதிலும் அதே ரோலில் வருகிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

பொம்மரிலு குறித்து ராஜா கூறுகையில், ரீமேக் செய்வது ஈசியான வேலை கிடையாது. ரொம்பக் கஷ்டம். ரீமேக் படங்கள் செய்வதால் ஒரு இயக்குநரை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

ரீமேக் என்பதும் ஒரு முக்கியமான வேலைதான். ஒரு படத்தை உருவாக்க என்னவெல்லாம் கஷ்டங்கள் இருக்கிறதோ, அதே கஷ்டம்தான் ரீமேக் படங்களை இயக்கும்போதும் ஏற்படும்.

இதற்கு முன்பு நான் கொடுத்த ரீமேக் படங்கள் சிறப்பாக ஓடி வெற்றி பெற்றன. பொம்மரிலுவை ஜூன் மாத மத்தியில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஜெனீலியாவை நாயகியாகப் போட்டது குறித்து பலரும் எங்களை பாவமாக பார்க்கிறார்கள். நடிப்பைத்தான் பார்க்க வேண்டுமே தவிர ஒருவரின் ராசியைப் பார்க்கக் கூடாது. ஜெனீலியா தன் மீதான பெயரை இந்தப் படத்தின் மூலம் மாற்றிக் கொள்வார் என்றார் ராஜா.

Please Wait while comments are loading...