»   »  ஜீவா உடல் அடக்கம்:திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

ஜீவா உடல் அடக்கம்:திரையுலகம் கண்ணீர் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

ரஷ்யாவில் மரணமடைந்த இயக்குநர் ஜீவாவின் உடல் நேற்று மாலை சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. திரையுலகம் திரண்டு வந்து ஜீவாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.

தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக ரஷ்யா சென்றிருந்த இயக்குநர் ஜீவா அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று ரஷ்யாவிலிருந்து மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது.

மும்பை சென்று ஜீவாவின் உடலை இயக்குநரும், ஜீவாவின் மைத்துனருமான வசந்த் பெற்றுக் கொண்டார். பின்னர் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட இந்தி நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் ஜீவாவின் உடல் சென்னைக்கு பிற்பகலில் கொண்டு வரப்பட்டு. ஸ்டெர்லிங் சாலையில் உள்ள ஜீவாவின் உடல் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஜீவாவின் உடலைப் பார்த்து மனைவி அனீஷா, மகள்கள் ஆல்யா, சானா ஆகியோர் கதறி அழுதனர். உடலுடன் கூடவே வந்திருந்த நடிகர் ஜெயம் ரவியும் அடக்க முடியாமல் கதறி அழுதார்.

பின்னர் சவப் பெட்டிக்குள் மிகவும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த உடலை வெளியே எடுத்து குளிப்பாட்டி வேறு ஒரு பெட்டிக்குள் வைத்தனர். பின்னர் இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்தப்பட்டது.

ஜீவாவின் உடலுக்கு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு (கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் மீது கொண்ட பற்றால்தான் தனது இயற்பெயரை மாற்றி ஜீவா என வைத்துக் கொண்டார் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது), நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர்கள் விஜயக்குமார், சூர்யா, அப்பாஸ், பார்த்திபன், அர்ஜூன், நரேன், ஜீவா, ஜெயராம், ஆர்யா, பிரசன்னா, ஷாம், சிபிராஜ், கார்த்தி, உதயா, கரண், விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும்.

நடிகைகள், குஷ்பு, ஆசின், தபு, திரிஷா, லட்சுமி ராய் உள்ளிட்டோரும், இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்தனம், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண், தங்கர்பச்சான், எஸ்.ஜே.சூர்யா, சேரன், லிங்குச்சாமி, ராஜ்கபூர், பிரியதர்ஷன், வசந்தபாலன், சசி, ஜனநாதன், ராதா மோகன் உள்ளிட்டோரும், ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், பாபு, கே.வி.ஆனந்த், பி.என்.சுந்தரம் உள்ளிட்டோரும் ஜீவா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையில் தயாரிப்பாளர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலை 6 மணியளவில் ஜீவாவின் உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து ராயப்பேட்டை மசூதியில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil