»   »  'வாலிப கவி' வாலி!

'வாலிப கவி' வாலி!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
வாலிபக் கவிஞர் வாலி கவிதை வடிவில் எழுதிய 'கலைஞர் காவியம்' நூல், சி.டி வடிவம் பெற்றுள்ளது. இதை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் வெளியிடவுள்ளார்.

முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை தனது கவித்துவம் மிகுந்த கவிதை வரிகளில் கலைஞர் காவியம் என்ற பெயரில் நூலாக வடித்துள்ளார் வாலி. இந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த கவிதை நூல் இசை வடிவம் பெற்று சி.டியாக மாறியுள்ளது. வாலியின் கவிதை வரிகளை, அவரே படிக்க அழகான இசையுடன், எழிலுடன் சிடி வடிவம் பெற்றுள்ளது. வருகிற 28ம் தேதி இந்த சிடி வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து வாலி கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் காவியம் நூலாக வந்தது. இதிலிருந்து சில குறிப்பிட்ட கவிதைகளை மட்டும் சிடியில் சேர்த்துள்ளேன். இதற்கு முன்னுரை எழுதியவர்தான் விசேஷமானவர். அவர் வேறு யாருமல்ல, எழுத்தாளர் சோதான்.

கருணாநிதியின் தீவிர விமர்சகர் அவர். ஆனால் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

இந்த முயற்சியில் எந்த அரசியல் சாயமும் கிடையாது. முழுக்க முழுக்க தமிழ் மீதும், கலைஞர் மீதும் நான் கொண்ட அன்பின் வெளிப்பாடுதான் இது என்றார் வாலி.

மொத்தம் 23 பகுதிகளைக் கொண்ட இரு சிடிக்களாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் ஓடக் கூடியதாக உள்ளது.

C-VAA EXX பவுண்டேஷனைச் சேர்ந்த கமல்ராஜ் இதைத் தயாரித்துள்ளார். இந்த சிடி குறித்து அவர் கூறுகையில், இதை விநியோகஸ்தர்கள் மூலம் விற்காமல் நேரடியாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் திருட்டு சிடி பிரச்சினையைத் தவிர்க்க முடியும் என்றார்.

இரு சிடிக்கள் இணைந்த தொகுப்பின் விலை ரூ. 123 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சிடி வடிவத்திற்கு மறைந்த கவிஞர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகத்தின் மகன் சங்கரா இசையமைத்துள்ளார்.

வருகிற ஞாயிற்றுக்கிழமை காமராசர் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்த சிடி வெளியீட்டு விழாவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கலந்து கொண்டு சிடியை வெளியிடுகிறார். தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார்.

தி.க. தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

முதல்வர் கருணாநிதியும் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: vali
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil