»   »  நாயகன் தொடங்கி தசாவதாரம் வரை உலகநாயகனின் சிறந்த 10 படங்கள்

நாயகன் தொடங்கி தசாவதாரம் வரை உலகநாயகனின் சிறந்த 10 படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கமலஹாசன் இந்திய சினிமாவின் அடையாளம் என்று உலக அளவில் போற்றக் கூடிய நடிகராகத் திகழ்கிறார், 61 வயதாகும் கமல் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 56 வருடங்களை சினிமாவில் கழித்திருக்கிறார்.

உலகநாயகன் என்று ரசிகர்களால் அங்கீகாரம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால் அந்தப் பட்டத்தை சரியான ஒருவருக்குத் தான் வழங்கி இருக்கின்றோம் என்று ரசிகர்கள் எண்ணுகின்ற அளவிற்கு தனது படங்களின் மூலம் உலகநாயகனாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக தொடங்கி நாயகனாக வளர்ந்து இன்று வரை தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் கமல் அவர்களின் சிறந்த 10 படங்களை( ஒவ்வொருவர் பார்வையிலும் இது வேறுபடலாம்) இங்கே பார்க்கலாம்.

நாயகன் 1987

நாயகன் 1987

கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் சற்று அதிகமாகவே நடித்திருக்கும் கமலின் சிறந்த படங்களில் நாயகன் படத்திற்கு ஒரு சிறந்த இடம் எப்போதும் உண்டு. 1987 ம் ஆண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல், சரண்யா, ஜனகராஜ் நடித்து வெளிவந்த நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக இன்றளவும் திகழ்கின்றது, சக்திவேலு நாயக்கர் என்ற பாத்திரமாகவே படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் கமல். இந்தியாவின் மிகச்சிறந்த 20 படங்களில் நாயகன் படத்திற்கு ஒரு இடமுண்டு.

மூன்றாம் பிறை 1982

மூன்றாம் பிறை 1982

விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார். அவரை சந்திக்கும் நல்ல மனம் கொண்ட சீனுவாசன் (கமலஹாசன்) காப்பாற்றி அவரை தனது வீட்டிற்கு வீட்டிற்கு அழைத்துச் செல்வார். பின்னர் விஜிமீது காதல் கொள்ளும் சீனுவாசன், அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்வதுடன் அவரைக் காதலிக்கவும் செய்வார். ஆனால் பைத்தியம் தெளிந்த ஸ்ரீதேவி கடைசியில் கமலைப் பைத்தியம் என்று நினைத்துக் கொள்வதுடன் படத்தை முடித்திருப்பார் இயக்குநர் பாலு மகேந்திரா.இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமலஹாசன் 1984 இல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேவர் மகன் 1992

தேவர் மகன் 1992

லண்டனில் படிப்பை முடித்து சக்தி தனது சொந்த ஊருக்குத் தனது காதலியுடன் திரும்பி வருகின்றார். அங்கு தந்தையான பெரியத் தேவரைச் சந்தித்து தனது காதலியை அறிமுகமும் செய்து வைக்கின்றார்.ஆரம்பத்தில் கோபம் கொள்ளும் பெரிய தேவர் பின்னர் அமைதி கொள்கின்றார். இதற்கிடையில் அவ்வூரில் இருக்கும் சின்ன தேவரின் மகனான மாயனால் பல பிரச்சனைகள் உருவாகிறது. ஒரு பஞ்சாயத்தில் ஊர் பெரியவரான பெரிய தேவரை மாயன் வார்த்தைகளால் அவமானப்படுத்த, பெரியத்தேவர் காலமாகிறார். 'நம்மையே நம்பியிருக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்' என்று பெரியத்தேவர் சொல்லியதை நினைத்துப் பார்க்கும் அவரின் மகன் சக்தி, அந்த ஊரிலேயே தங்கி மக்களுக்காக வாழ்கிறார். அதே சமயம் மாயன் மூலமாக பல பிரச்சனைகள் வந்தாலும் பொறுத்துக்கொள்ளும் சக்தி, மாயனால் ஊர்மக்களுக்கு பிரச்சனையை வர, சக்திவேல் என்ன செய்தார் என்பதை மிகவும் அருமையாக சொல்லியிருக்கும் படம் இந்த கமல்ஹாசனின் 'தேவர் மகன்' திரைப்படம்.

பாக்ஸ் ஆபிசில் 14 கோடிகளை வசூலித்த இத்திரைப்படம் 5 தேசிய விருதுகளையும் 2 பிலிம்பேர் விருதுகளையும் வென்றது, கமலின் நடிப்பிற்கு மட்டுமின்றி திரைக்கதைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இதிரைபடத்தைக் கூறலாம்.

மகாநதி 1994

மகாநதி 1994

மகாநதி - கமல்ஹாசன் பல பரிணாமங்களில் ஜொலித்த படங்களில் முதன்மையானது, மகாநதி வந்த போது ஜூனியர் விகடனில் பல வாரங்களுக்கு அந்த படத்தின் பல பரிமாணங்கள் அலசப்பட்டது. மேலும் படத்திற்கு 60 மதிப்பெண்களை வாரி வழங்கியிருந்தது விகடன். மனதை வருடும் மென்சோகக் கதையாக மகாநதி 1994 ம் ஆண்டில் வெளிவந்தது,கமலின் மிகச்சிறந்த படங்களில் மகாநதிக்கு ஒரு சிறந்த இடமுண்டு.

குருதிப்புனல் 1995

குருதிப்புனல் 1995

இந்தியத்திரை மேதைகளுள் ஒருவரான கோவிந்த் நிகாலனி உருவாக்கிய ‘துரோக்கால்' என்ற திரைப்படத்தின் கதையை வாங்கி கமல் திரைக்கதை அமைத்து வெளியிட்ட படம்தான் ‘குருதிப்புனல், இயக்கம் & ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.பாடல்கள் இல்லாமலும், முதன் முதலாக டால்பி ஸ்டீரீயோ [ 4 டிராக்] ஒலியுடனும் தயாரித்து வெளியிட்டார் கமல். கமலுடன் இணைந்து அர்ஜுன் நடித்திருந்த இந்தப் படத்தில் இருவருமே நாட்டிற்காக போராடி உயிர் துறக்க, அவர்களின் மனைவிகள் இருவரும் வீரப் பதக்கங்களை பெறுவது போன்று கதையை முடித்திருப்பார் கமல். இந்த மாதிரி படத்தில் நடிக்க மட்டுமல்ல தயாரிக்கவும் பெரிய தைரியம் வேண்டும் அந்த தைரியம் கமலிடம் நிறையவே உள்ளது. அதனால் தான் அவர் உலகநாயகன் என்று போற்றப்படுகிறார்.

இந்தியன் 1996

இந்தியன் 1996

கமல் நடித்த படத்திலேயே மறக்க முடியாத மற்றும் இன்றும் விரும்பி பார்க்கும் வண்ணம் உள்ள ஒரு படம் என்றால் அது ‘இந்தியன்' திரைப்படம் தான். இந்த படத்தில் நடிகர் கமல் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் அவரது மகன் சந்துருவாகவும் 2 வேடங்களில் நடித்து கலக்கியிருப்பார். 1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1996 ம் ஆண்டில் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் மொத்தம் 28 கோடிகளை வசூலித்தது.

ஹேராம் 2௦௦௦

ஹேராம் 2௦௦௦

கமலின் ஹேராம்(2௦௦௦) படம் கமர்ஷியல் ரீதியான படமாக இல்லாமல் சமகால அரசியலைக் குறியீடுகளாக வைத்து வெளிவந்த ஒரு சிறந்த திரைப்படம்.1947 ம் ஆண்டு நடந்த ஹிந்து முஸ்லிம் கலவரங்களை அடிப்படையாக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தை தயாரித்து இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார் கமல், போட்ட பணம் கைக்கு வருமா? வராதா என்ற கவலை எதுவும் இல்லாமல் தரமான படைப்பை திரையுலகிற்கு அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கமலால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஹேராம். ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் ஹேராமில் முக்கிய வேடமேற்று நடித்திருந்தார்.

அன்பே சிவம் 2003

அன்பே சிவம் 2003

2003 ல் சுந்தர்.சி இயக்கத்தில் கமல், மாதவன், கிரண் நடித்து வெளிவந்த அன்பே சிவம் திரைப்படம், கமலின் நடிப்பை தத்ரூபமாக வெளிக்காட்டும் படங்களில் ஒன்றாக விளங்குகின்றது.இரண்டு நண்பர்களைச் சுற்றிச் சுழலும் கதை அன்பே சிவம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஒவ்வொரு ப்ரேமிலும் கமல் நிற்கிறார். இது கமல் படமா, சுந்தர்.சி. படமா என்ற பட்டிமன்றம் தேவையில்லை, உறுதியாக இது கமல் படம்தான்.முகம் முழுக்கபடுகாயக் கீறல்களுடன்-வடுக்களுடன் ஆரம்பத்தில் தோன்றிட, எந்த ஹீரோவுக்கும் துணிச்சல் வராது. கதாபாத்திரமாகவே ஆகிவிடுவது கமலுக்குக்கை வந்த கலை, மீண்டுமொருமுறை நடிப்புப் பரிணாமத்தின் எல்லையை அன்பே சிவத்தில் தொட்டிருப்பார் கமல்.

வேட்டையாடு விளையாடு 2006

வேட்டையாடு விளையாடு 2006

கமல் & பிரகாஷ்ராஜ் என இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள் இருக்கும் நட்பையும், கஷ்டம் வந்து உலுக்கும்போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக நிற்கிற விதத்தையும், மென்சோகக் கவிதை போலச் சொல்லியிருப்பார் இயக்குநர் கௌதம் மேனன்.இரண்டு சைக்கோ மாணவர்கள்தான் வில்லன்கள் என்பது மிகவும் புதிதான ஒன்றாக இருக்கும்.கமல் பற்றி சொல்லவே வேண்டாம் அவருக்கே உரித்தான தோற்றமும், கம்பீரமும் நம்மை பிரமிக்க வைக்கும். காக்கி காதல் இரண்டிலும் புகுந்து விளையாடியிருப்பார் கமல். வேட்டையாடு விளையாடு கமல் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைந்தது. படம் பாக்ஸ் ஆபிசில் 60 கோடி வரை வசூலித்து வெற்றிவாகை சூடியது.

தசாவதாரம்

தசாவதாரம்

2008 ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த தசாவதாரம் கமலின் ஒட்டு மொத்த நடிப்பையும் சிறப்பாக வெளிக்கொணர்ந்த ஒரு திரைப்படமாகும், 10 வேடங்களில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார் கமல். 12 ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 21 ம் நூற்றாண்டில் முடிவது போன்ற கதையில் 10 அவதாரங்கள் எடுத்து படத்தில் வாழ்ந்திருந்தார் கமல், 60 கோடியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் சுமார் 200 கோடிகளை உலகம் முழுவதும் வசூலித்தது.

உலகநாயகனின் நடிப்புக்கு இணையாக இன்னொருவரைக் கூறுவது கடினமே,...

English summary
Kamal Completed 56 Years in Film Industry - Top 10 Evergreen Movies List.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil