»   »  'கவிச்சக்கரவர்த்தி' 'மெல்லிசை மன்னரின் பிறந்தநாள் சிறப்புப் பதிவு

'கவிச்சக்கரவர்த்தி' 'மெல்லிசை மன்னரின் பிறந்தநாள் சிறப்புப் பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கவிச்சக்கரவர்த்தி' கண்ணதாசன் 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் என்னும் இரு இமயங்களின் பிறந்த தினம் இன்று.

இருவரும் உற்ற நண்பர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இருவரின் பிறந்த நாளும் ஒரே தினத்தில்(ஜூன் 24) அமைந்ததாக சொல்வார்கள்.

கண்ணதாசன்+எம்.எஸ்.விஸ்வநாதன் இருவரும் இணைந்த பாடல்கள் அனைத்துமே தேன்தான் என்று, இன்றைய தலைமுறையும் பாராட்டும் படியான பாடல்களை இவர்கள் இருவரின் கூட்டணியும் நமக்கு விட்டுச் சென்றுள்ளது.

காதல், சோகம், சந்தோஷம் என்று எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக் கூடிய பாடல்களை இயற்றி காலத்தால் தாங்கள் என்றும் அழியாதவர்கள் என்பதை நிரூபித்தவர்கள்.

பிறந்தநாளை முன்னிட்டு இருவரின் கூட்டணியில் வெளியான சில பாடல்களை இங்கே காணலாம்.

உள்ளத்தில் நல்ல உள்ளம்

கர்ணன் படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலின் ஒவ்வொரு வரியுமே மகாபாரதக் கதையை எடுத்துக் கூறும் விதமாக கண்ணதாசன் எழுதியிருப்பார்.

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழுந்தாயடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா கர்ணா
வஞ்சகன் கண்ணனடா

என்ற வரிகளில் கண்ணனின் தந்திரத்தையும், கர்ணனின் நட்பையும் ஒருசேர எடுத்துக் கூற கவிஞரால் மட்டும்தான் முடியும்.

மலர்ந்து மலராத

அண்ணன்-தங்கை பாசத்தை இன்றளவும் சொல்வதற்கு பாசமலர் படத்தைத் தான் எடுத்துக்காட்டாகக் கூறுகின்றனர். அதில் இடம்பெற்ற இப்பாடல் உலகில் உள்ள எல்லா அண்ணன்-தங்கைகளின் பாசத்திற்கும் எடுத்துக்காட்டாக கூறலாம்.

கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா- இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்க முடியாதடா

இப்படி ஒரு வரிகளையும், பாடலையும் ஏன் அண்ணன்-தங்கை பாசத்தைக் கூட பார்க்க முடிவதில்லை என்பது காலத்தின் சாபம்.

ஆறு மனமே ஆறு

ஆன்டவன் கட்டளை படத்தில் சிவாஜி இந்தப் பாடலைப் பாடும்போது நம்மையும் அறியாமல் கண்ணில் தண்ணீர் வரும். அப்படி வரிகளில் விளையாடி கவிஞர் பாட்டெழுத, மெல்லிசை மன்னர் தமது இசையால் நம்மை சோகத்தில் ஆழ்த்தியிருப்பார்.

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

இந்த வரிகள் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே நமது வாழ்க்கைக்கு பொருந்தக் கூடியதுதான்.

கண்ணே கலைமானே

கமல்-ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற இப்பாடலை தமிழை நினைத்து கண்ணதாசன் எழுதியதாகக் கூறுவர். கவிஞரின் வரிகளும், மெல்லிசை மன்னரின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு எல்லா விதத்திலும் பக்க பலமாக அமைந்தன என்று சொன்னால் அது மிகையாகாது.

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி

இந்த வரிகளை எங்கே கேட்டாலும் நம்மையறியாமல் நம் கால்கள் நின்று விடும்.

இதேபோல நூற்றுக்கணக்கான பாடல்களால் இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சத்தில் இந்த இருவரும் குடி கொண்டுள்ளனர்.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை....என்று கூறிய கவிஞரின் தொலைநோக்குப் பார்வையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

English summary
Music Composer M.S.Viswanathan and Lyricist Kannadasan Birthday Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil