For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மணிவண்ணன்... ஒரு மகத்தான மக்கள் கலைஞன்!

  By Shankar
  |

  -எஸ் ஷங்கர்

  கலைகள் மக்களுக்காகவே என்ற இடதுசாரி கருத்தில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் அமரர் மணிவண்ணன்.

  தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை, பெரும்பாலானவற்றில் மக்கள் பிரச்சினைகளை, கிராமங்களின் அவலங்களை எளிமையும் எள்ளலுமாக சொல்லிய மக்கள் கலைஞன்.

  எண்பதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர். ஆனால் இன்றைய தலைமுறை அவரை வெறும் நடிகராக மட்டுமே அறிந்திருந்தது.

  அந்த நினைப்பை உடைக்க 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கிய படம்தான் அமைதிப்படை 2. அரசியல் கழிசடைகளை மீண்டும் அம்பலப்படுத்தியதோடு, இந்த நாட்டின் இயற்கை வளங்கள் எப்படிக் கொள்ளை போகின்றன என்பதை மிக எளிமையாக உலகுக்குக் காட்டியிருந்தார். இது அவருக்கு 50வது படம்.

  கிழக்கே போகும் ரயில் ஏற்படுத்திய பாதிப்பு...

  கிழக்கே போகும் ரயில் ஏற்படுத்திய பாதிப்பு...

  கோவையில் பெரிய அரிசி வியாபாரியும் அரசியல்வாதியுமான டிஎஸ் மணியத்தின் மகனாகப் பிறந்த மணிவண்ணன், கோவையில் பிஎஸ்ஜி கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே அவர் பார்த்த படம் கிழக்கே போகும் ரயில். அந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பில், இயக்குநர் பாரதிராஜாவுக்கு 16 பக்கங்களுக்கு ஒரு கடிதம் எழுதினாராம் மணிவண்ணன். அதைப் படித்துவிட்டுத்தான், மணிவண்ணனை தன்னுடன் சேர்த்துக் கொண்டாராம் பாரதிராஜா.

  நிழல்கள்...

  நிழல்கள்...

  பாரதிராஜாவுக்கு மணிவண்ணன் சொன்ன முதல் கதையே பிடித்துப் போய்விட்டது. இதையே படமாக்கலாம் என முடிவெடுத்து அதற்கு நிழல்கள் என்று பெயரிட்டனர். இளையராஜா இசையில் இந்தப் படத்தில் ஒரு பாடலையும் எழுதினார் மணிவண்ணன். வாலி வருவதற்கு தாமதமானதால், மணிவண்ணனையே எழுத வைத்தாராம் ராஜா. அதுதான் 'மடை திறந்து...' பாடல். இந்தப் பாடலை எழுதி முடித்த பிறகு வாலி வந்திருக்கிறார். அதற்குள் பாதிப் பாடலை மணிவண்ணன் எழுதிவிட்டாராம். ஆனாலும் வாலி பெயரிலேயே அந்தப் பாடல் வரட்டும் என்று கூறியிருக்கிறார்.

  அலைகள் ஓய்வதில்லை

  அலைகள் ஓய்வதில்லை

  கதை - வசனம் எழுதிய முதல் படமே தோல்வி. ஆனால் பாரதிராஜா, இதே மணிவண்ணனை வைத்து ஒரு வெற்றிப் படம் தருவேன் என்று நண்பர்களிடம் சவால்விட, அந்த சவாலில் ஜெயிக்க மணிவண்ணன் உருவாக்கிய கதைதான் அலைகள் ஓய்வதில்லை. அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை கார்த்திக் வர்ணிக்கும் ஒரு காட்சியில் மணிவண்ணன் வசனங்கள் அத்தனை அழகாக அமைந்திருக்கும். காதல் ஓவியம் படத்துக்கும் மணிவண்ணன்தான் கதை வசனம். பாக்யராஜுக்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு பிடித்த வசனகர்த்தாவாக மணிவண்ணன் திகழ்ந்தார்.

  கோபுரங்கள் சாய்வதில்லை...

  கோபுரங்கள் சாய்வதில்லை...

  மணிவண்ணன் இயக்கிய முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. இந்தப் படத்துக்கு இயக்குநராக அவரை சிபாரிசு செய்தவர் இளையராஜா. கதை ரொம்பவே வித்தியாசமானது. இந்த முதல் படத்திலேயே தான் மக்களுக்காக கலைஞன் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பார் மணிவண்ணன்.

  சிங்கத் தமிழன் பூதலிங்கம்

  சிங்கத் தமிழன் பூதலிங்கம்

  ஒரு காட்சியில் தெருவில் வட்டி கொடுக்காமல் ஏமாற்றும் பட்டாணியைத் துரத்திக் கொண்டு வருவார் வினுசக்ரவர்த்தி. அப்போது எதிரில் வரும் அவரது சம்பந்தி டிகேஎஸ் சந்திரனுக்கும் அவருக்குமான உரையாடல் இது:

  டிகேஎஸ் சந்திரன்: என்னடா வழக்கமா நம்மாளுங்கள பட்டாணிதான் துரத்துவான். நீ பட்டாணிய துரத்துறே...

  வினு சக்ரவர்த்தி: 'சிங்கத் தமிழனாச்சே... டேய் பட்டாணி, சிங்கத் தமிழன் பூதலிங்கம் வாழ்க..ன்னு பத்துவாட்டி சொல்றா... வட்டிய தள்ளுபடி பண்ணிடறேன்"

  பட்டாணி: "சிங்கத் தமிழன் பூதலிங்கம் வாழ்க..."

  வினு: "ஆஹா... அசலே வேணாம் போடா... பாத்தியாடா, வட்டின்னதும் வராம போன தமிழ் கூட வருது"!

  முதல் படத்திலேயே காவிரிப் பிரச்சினை

  முதல் படத்திலேயே காவிரிப் பிரச்சினை

  இன்னொரு காட்சி... பெங்களூரு தெருவில் நடந்து கொண்டே பாட்டில் தண்ணீர் குடிக்கிறார் வினு சக்ரவர்த்தி (கவனிக்க, வருஷம் 1981)..

  டிகேஎஸ் சந்திரன்: 'என்னடா நீ மட்டும் குடிக்கிறே.. வெந்நீரா..?"

  வினு சக்ரவர்த்தி: அட நீ வேற பச்ச தண்ணிடா

  டிகேஎஸ் சந்திரன்: அட பாவி, இவ்ளோ பெரிய ஊர்ல குடிக்க தண்ணியாடா கிடைக்காது...

  வினு சக்ரவர்த்தி: பேப்பரே படிக்கிறதில்லையாடா பேப்பய மவனே... தண்ணி குடுக்க தகராறு பண்ற ஊர்றா இது.. தன்மானமுள்ள தமிழன்டா நான்!

  -காவிரிப் பிரச்சினையை இதைவிட போல்டாக யாராவது திரையில் சொல்லியிருக்கிறார்களா... அதுதான் மணிவண்ணன். தனது அத்தனைப் படங்களிலும் இப்படி சமூகப் போராட்டத்துக்கான கருத்துகளை முன்வைத்தார் துணிச்சலுடன்.

  வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்

  வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்

  மணிவண்ணனின் முதல் படமே வெள்ளிவிழா கண்டது. அடுத்த படத்தை முற்றிலும் வேறுபட்ட கதைக் களத்தில் எடுத்தார். அதுதான் வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்.

  மணிவண்ணனின் வில்லன்கள் அலாதியானவர்கள். வில்லன்களில் இத்தனை வித்தியாசம் காட்ட முடியுமா என்பதை இவர் படங்களில்தான் பார்க்க முடியும். வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் படத்தில் வரும் எம்ஆர்கே அடிக்கடி சொல்லும் 'தட் ஈஸ் சுப்பாராவ்' அன்றைக்கு பிரபலமான பஞ்ச்!

  12 நாட்களில் 'நூறாவது நாள்'..

  12 நாட்களில் 'நூறாவது நாள்'..

  மணிவண்ணனை சிகரத்தில் வைத்த படம் என்றால் அது நூறாவது நாள். மிகச் சொற்ப பட்ஜெட்டில், மிகக் குறைந்த நாட்களில்... ஜஸ்ட் 12 நாட்களில் இந்தப் படத்தை மணிவண்ணன் எடுத்திருந்தார். இதை அன்றைக்கு இளையராஜாவிடம் சொன்னபோது அவர் நம்பவே முடியவில்லையாம். 'என்னய்யா சொல்ற.. 12 நாளில் ஒரு படமா... சரி படத்தைக் காட்டு' என்றாராம்.

  நானும் ஏதாவது செய்யணுமே - இளையராஜா

  நானும் ஏதாவது செய்யணுமே - இளையராஜா

  படத்தைப் பார்த்ததும், "பிரமாதம்... அசத்தியிருக்கேய்யா... இதுக்கு நானும் ஏதாவது செய்யணுமே..." என்றவர், இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத அளவு மிகச் சிறப்பாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்தாராம். படத்தில் மூன்று பாடல்கள்தான். 'இந்தப் படத்துல அதிகமா பாட்டு வச்சா, அந்த க்ரிப் குறைஞ்சிடும். இதுவே போதும். பின்னணி இசைதான் இந்தப் படத்துக்கு ஹைலைட்டா இருக்கணும்...' என்றாராம் இளையராஜா. அந்தப் பின்னணி இசையை இசைத் தட்டிலும், கேசட்டுகளிலும் தனியாக பதிவு செய்து கொடுத்ததெல்லாம் தனிக் கதை.

  விடிஞ்சா கல்யாணம், பாலைவன ரோஜாக்கள்

  விடிஞ்சா கல்யாணம், பாலைவன ரோஜாக்கள்

  இவர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் வெளியான படங்கள் பாலைவன ரோஜாக்கள் மற்றும் விடிஞ்சா கல்யாணம். பாலைவன ரோஜாக்களுக்கு கலைஞர்தான் கதை வசனம். வண்ணப் பட காலகட்டத்தில் கலைஞர் கதை வசனம் எழுதி மிக அழகாகவும் சிறப்பாகவும் வந்த படங்களில் என்றும் முதலிடம் இந்த பாலைவன ரோஜாவுக்குதான். இரண்டுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. இரண்டிலுமே சத்யராஜ்தான் ஹீரோ. இதையெல்லாம் இன்றைக்கு யாராலாவது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

  இனி ஒரு சுதந்திரம்

  இனி ஒரு சுதந்திரம்

  இனி ஒரு சுதந்திரத்துக்குப் பிறகு மணிவண்ணன் இயக்கிய தீர்த்தக் கரையினிலே, ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் நன்றாக ஓடின. குறிப்பாக தீர்த்தக் கரையினிலே...

  பழ கருப்பையா தயாரித்த இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் புதுப் புது அர்த்தங்கள் கிடைக்கின்றன. கிராமத்து மனிதர்கள், அவர்களின் குடும்ப பிரச்சினை, அதற்கு இந்த நாடு எப்படி காரணமாகிறது என்பதையெல்லாம் வெகு எளிமையாக வசனங்களில் சொல்லியிருப்பார் மணி.

  கூடவே இளையராஜாவின் இசை. இந்தப் படத்தில்தான் உஷாரய்யா உஷாரு என்ற பாடலை அவரே எழுதிப் பாடியிருந்தார். அதில் ஒரு வரி... "பொருளுக்காக சொல்லும் வாக்கு அருளு வாக்கு ஆகாது.. அருளு வாக்கு சொல்லிப் போடும் சாமியாரு உஷாரு!!'

  வாழ்க்கைச் சக்கரம்

  வாழ்க்கைச் சக்கரம்

  இந்தப் படங்களுக்குப் பிறகு மணிவண்ணன் எடுத்த சில படங்கள் அவருக்கு தோல்வியைத் தந்தன. அப்போதுதான் திருப்பூர் மணிக்காக வாழ்க்கைச் சக்கரம் என்ற படத்தை எடுத்தார். மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி மூவருக்குமே அந்தப் படம் பெரிய ஆறுதலைத் தந்தது எனலாம்.

  அமைதிப்படை

  அமைதிப்படை

  மணிவண்ணன் மிகப் பெரிய வெற்றிப் படம் என்றால் அது அமைதிப்படைதான். தரம், வசூல் என அனைத்திலுமே அந்தப் படம் க்ளாஸ்-ஆக அமைந்துவிட்டது. இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தனர். அங்கும் வெற்றியைக் குவித்தது அமைதிப்படை.

  ஆண்டான் அடிமை...

  ஆண்டான் அடிமை...

  மணிவண்ணனின் 49வது படம் இது. அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இயக்குவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் நடிகராக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 2002ல் மணிவண்ணன் இல்லாத தமிழ்ப் படமே இல்லை எனும் அளவுக்கு எல்லாப் படங்களிலும் காமெடியன், வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கலக்கினார்.

  அதிக வெற்றிப் படங்கள்

  அதிக வெற்றிப் படங்கள்

  ஒரு இயக்குநராக அதிக வெற்றிப் படங்கள் தந்த பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. அதேபோல ராம நாராயணனுக்குப் பிறகு ஒரு ஆண்டில் அதிக படங்களை இயக்கியவரும் மணிவண்ணன்தான்.

  இளையராஜாவுடன்

  இளையராஜாவுடன்

  மணிவண்ணன் இயக்கியுள்ள 50 படங்களில் முக்கால்வாசி இளையராஜா இசையமைத்தவைதான். இவர் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும். இங்கேயும் ஒரு கங்கை, முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, தீர்த்தக் கரையினிலே, அம்பிகை நேரில் வந்தால் போன்ற படங்களில் பாடல்கள் மிக அருமையாக வந்திருந்தன. நூறாவது நாளில் விழியிலே மணி விழியிலே என்ற பாடலை தமிழ் சினிமா பாடல்களில் ஒரு மைல் கல் என்று அன்றைக்குப் பாராட்டப்பட்டது.

  மூன்று படங்கள்

  மூன்று படங்கள்

  அமைதிப் படை 2-க்குப் பிறகு, தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தை இயக்குவதாக அறிவித்திருந்த மணிவண்ணன், அடுத்து நூறாவது நாளின் இரண்டாம் பாகம், மற்றும் சத்யராஜுன் இணைந்து பணம் படுத்தும் பாடு ஆகிய படங்களை இயக்கத் திட்டமிட்டிருந்தார். அனைத்துக்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர். காரணம் அமைதிப்படை 2 கொடுத்த லாபம் அப்படி. அமைதிப்படை 2ன் தொலைக்காட்சி உரிமையே ரூ 3.5 கோடிக்கு போனதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

  ரஜினி அறிமுகப்படுத்திய வில்லன்

  ரஜினி அறிமுகப்படுத்திய வில்லன்

  சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொடிபறக்குது படத்தில்தான் முதன் முதலாக நடித்தார் மணிவண்ணன். இந்தப் படத்துக்காக வேறு வில்லன் நடிகரை பாரதிராஜா தேடிக் கொண்டிருந்தபோது, "எதுக்கு பாரதி வேற ஆள்... நம்ம மணி இந்த வேடத்துக்கு அம்சமா இருப்பார்... நீங்க தைரியமா நடிக்க வைங்க" என்றாராம்.

  அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 450 படங்களில் நடித்தார். ரஜினியுடன் தொடர்ந்து பெரிய படங்கள் பலவற்றிலும் நடித்தார். கடைசியாக சிவாஜியில் ரஜினியின் தந்தையாக நடித்தார். சினிமாவைத் தாண்டி இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். மணிவண்ணன் மகள் திருமணத்தையே ரஜினிதான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

  இவர் போல இனி யார் வருவார்?

  இவர் போல இனி யார் வருவார்?

  மணிவண்ணனுக்கு நிகராக ஒரு திரைக்கலைஞர்... வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தவர் மணி. அவரிடமிருந்து உருவான விக்ரமன், சுந்தர் சி, சீமான், பிரபு சாலமன், ராசு மதுரவன் என அத்தனை இயக்குநர்களும் வெற்றிகரமான இயக்குநர்களாகத் திகழ்கின்றனர்.

  தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டுமென்றால் ஒரு முறையாவது மணிவண்ணனுடன் பணியாற்ற வேண்டும் என்பார் இயக்குநர் விக்ரமன். இனி இப்படியொரு மகத்தான மக்கள் கலைஞனுக்கு எங்கே போவது!!

  English summary
  Late legend Manivannan was a multi talented person who contributed to Tamil cinema a lot in his 30 years old career.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X