»   »  நெஞ்சம் மறப்பதில்லை- 19: புன்னகை அரசி கே.ஆர். விஜயா

நெஞ்சம் மறப்பதில்லை- 19: புன்னகை அரசி கே.ஆர். விஜயா

Subscribe to Oneindia Tamil

-பெரு துளசிபழனிவேல்

'அத்தைமடி மெத்தையடி', 'தேடினேன் வந்தது', 'மலர்கள் நனைந்தன பனியாலே', 'வெள்ளி மணி ஒசையிலே', 'தமிழுக்கு அமுதென்றுபேர்', 'முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்துவரும்', 'சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு', 'ஆசை மனதில் கோட்டைக்கட்டி', 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' இந்த இனிமையான பாடல்களை கேட்கும் போது நமது நினைவுக்கு வருபவர் யார்? என்று கேட்டால் புன்னகை அரசி கே.ஆர். விஜயா என்று படம் பார்ப்பவர்கள் அனைவரும் சொல்லிவிடுவார்கள். அந்தளவிற்கு மக்கள் மனதில் இன்றுவரை நிறைந்திருப்பவர், நிலைத்திருப்பவர் நடிகை கே.ஆர்.விஜயா.

நமது தமிழ் சினிமாவில் நாயகியர்களாக வந்தவர்களில் கதாநாயகர்களுக்கு நிகராக தனக்கென்று தனிக் கம்பெனி, தனிக்கதையாசிரியர்கள், டைரக்டர்கள் என்று உருவாக்கி படங்களை எடுத்தவர் கே.ஆர். விஜயா.

Nenjam Marappathillai 19

இவருக்காக கதைகளை எழுதியவர்கள் மதுரை திருமாறன், பாலமுருகன், ஆரூர்தாஸ், வியட்நாம் வீடு சுந்தரம் போன்றவர்களாவார்கள். இவர்களில் சிலரை டைரக்டராகவும் உயர்த்தியிருக்கிறார்.

எல்லாவிதமான கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். சில படங்களுக்கு பைனான்ஸ் உதவியும் செய்திருக்கிறார். எல்லா முன்னணி ஹீரோக்களும் இவருடன் இணைந்து நடிப்பதை விரும்பினார்கள்.

எம்.ஜி.ஆர். அவர்களுடன் 'விவசாயி', 'பணம் படைத்தவன்', 'தாழம் பூ', 'தொழிலாளி', 'நான் ஆணையிட்டால்', 'நான் ஏன் பிறந்தேன்', 'நல்லநேரம்' போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார்.

Nenjam Marappathillai 19

சிவாஜி அவர்களுடன் 'செல்வம்', 'தங்கை', 'திருடன்', 'இருமலர்கள்', 'ஊட்டிவரை உறவு', 'ராமன் எத்தனை ராமனடி', 'தவப்புதல்வன்', 'ரிஷிமூலம்', 'எதிரொலி', 'நான் வாழவைப்பேன்', 'கிரகப்பிரவேசம்', 'பாரத விலாஸ்', 'தங்கப்பதக்கம்', 'திரிசூலம்' போன்ற படங்களில் இணைந்து நடித்து பொருத்தமான ஜோடி என்று அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

ஜெமினியுடன் 'கற்பகம்', 'ராமு', 'சங்கமம்', 'குறத்திமகன்', 'மாணிக்கத் தொட்டில்', 'தேன்மழை' போன்ற படங்களில் இணைந்து நடித்தார்.

ஜெய்சங்கருடன் 'கௌரி கல்யாணம்', 'பஞ்சர்வணக்கிளி', 'பெண்ணை வாழவிடுங்கள்', 'பட்டணத்தில் பூதம்', 'சூதாட்டம்', 'வாயாடி', 'திருடி', 'அஸ்திவாரம்', 'மேயர் மீனாட்சி' போன்ற படங்களில் நடித்தார்.

Nenjam Marappathillai 19

நடிகர் ரவிச்சந்திரனுடன் 'இதயக்கமலம்', 'நினைவில் நின்றவள்', 'சபதம்' போன்ற படங்களிலும், நடிகர் ஆர்.முத்துராமனுடன் 'சர்வர்சுந்தரம்', 'நாணல்', 'நம்ம வீட்டு தெய்வம்', 'கண்ணம்மா', 'முருகனடிமை', 'சொந்தம்', 'இதோ எந்தன் தெய்வம்', 'கண்ணேபாப்பா', 'நத்தையில் முத்து', 'தீர்க்க சுமங்கலி', போன்ற படங்களிலும், ஏவிஎம் ராஜனுடன் 'துணைவன்' படத்திலும், சிவகுமாருடன் 'கந்தன் கருணை' படத்திலும், கே.பாலாஜியுடன் 'காட்டுரோஜா', 'அக்கா' படத்திலும், எஸ்.எஸ்.ஆருடன் 'கைகொடுத்த தெய்வம்' படத்திலும், நாகேஷுடன் 'கல்யாண ஊர்வலம்' படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார்.

கே.ஆர்.விஜயா நடித்து அறிமுகமான படம் 'கற்பகம்'. இந்தப் படத்தில் நடிப்பதற்கு துணை நடிகர் ஏஜெண்ட் அச்சுதன் டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் அறிமுகப்படுத்தினார். ஒரு நாடகத்தில் நடந்த நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற கே.ஆர். விஜயாவை பார்த்த ஜெமினி கணேசன் டைரக்டர் கே.எல். கோபாலகிருஷ்ணனிடம் 'கற்பகம்' கேரக்டருக்கு இவர் பொருத்தமானவராக இருப்பார் என்று கே.ஆர்.விஜயாவை சிபாரிசு செய்தார். டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் 'கற்பகம்' படத்தில் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். கே.ஆர்.விஜயாவின் 100வது படமான 'நந்தையில் முத்து' படத்தையும், டைரக்டர் கே.எஸ்.ஜியே இயக்கினார் என்பது சிறப்பான செய்தியாகும்.

Nenjam Marappathillai 19

கே.ஆர்.விஜயா முன்னணி கதாநாயகியாக வளர்ந்துக் கொண்டிருக்கும் போது வேலாயுதம் நாயரை திருமணம் செய்துக் கொண்டார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து ஒதுங்கியவரை சாண்டோ சின்னப்பா தேவர் வேலாயுதம் நாயரை நேரில் சந்தித்து பேசி தனது 'அக்கா தங்கை' படத்தின் மூலம் மறுபடியும் நடிக்க வைத்தார்.

நல்ல கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டும தான் நடிப்பேன்¢என்று மீண்டும் ஒதுங்கி நின்றவரை தனது 'தீர்க்க சுமங்கலி' படத்தின் மூலம் மறுபடியும் வரவழைத்து நடிக்க வைத்தவர் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர்.

நடிகர் கே.பாலாஜி தயாரிப்பாளராகி ஒரு படத்தை தயாரித்தார். அந்தப்படம் படுதோல்வியடைந்தது. துவண்டு போன அவருக்கு பைனான்ஸ் உதவி செய்து படங்களைத் தயாரிக்க வைத்தார் கே.ஆர்.விஜயா. மறுபடியும் சுஜாதா சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி சிவாஜி - கே.ஆர்.விஜயா நடித்த 'தங்கை' படத்தை இந்தியிலிருந்து தமிழில் ரீமேக் செய்தார். அந்தப்படம் வெற்றிப்படமானது அதிலிருந்து அவருடைய படங்கள் இந்திப்படங்களை தழுவி எடுக்கப்பட்ட படங்களாக தான் வெளிவந்தன.

கே.ஆர்.விஜயா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று 250 படங்களுக்கும் மேல் நடித்து அனைவரையும் தனது புன்னகை சிரிப்பால் கவர்ந்து புன்னகை அரசி கே.ஆர்.விஜயா என்று அனைவரும் சொல்லும்படியாக உயர்ந்தார்.

Nenjam Marappathillai 19

மறைந்த ஜேப்பியார் கே.ஆர்.விஜயாவின் நீண்டகால கலையுலக பணியைப்பாராட்டி தனது ஜேப்பியார் கல்லூரியின் மூலம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

கே.ஆர்.விஜயா இறுதியாக நடித்த படம் கமலஹானின் 'தசாவதாரம்'. தமிழ் சினிமா கதாநாயகியர்களில் வீட்டிற்குள்ளே தியேட்டர், நீச்சல் குளம், ரேஸ்குதிரைகள், பைனான்ஸ் கம்பெனி, தயாரிப்பு நிறுவனம், சொந்தமாக ஃபிளைட் வைத்திருந்தவர் கே.ஆர்.விஜயா மட்டும்தான்.

இப்பொழுது கேரளாவில் வாழ்ந்து வரும் கே.ஆர். விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் சமீபத்தில் காலமானார். இவருக்கு ஹேமலதா என்ற ஒரே ஒரு பெண் உண்டு. அந்தப் பெண்ணை பாண்டிச்சேரியிலுள்ள ஒரு டாக்டருக்கு திருமணம் செய்து வைத்தார்.

தமிழ்சினிமாவிலேயே தனது மகளின் திருமணத்தின் போதும், 'நத்தையில் முத்து' 100வது படம் நடித்து முடித்த போதும் அதற்கான விழாவெடுத்து அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பத்திரிகையாளர்களை நேரில் சென்று வரவழைத்து கலந்துக்கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தவர் நடிகை கே.ஆர்.விஜயா மட்டும்தான்.

கே.ஆர்.விஜயாவின் பிளாஷ்பேக்... அப்பா ராமச்சந்திரன் ஆந்திராவிலுள்ள சித்தூரைச் சேர்ந்தவர். அம்மா கல்யாணி கேரளாவிலுள்ள திருச்சூரைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்.

Nenjam Marappathillai 19

அப்பா இராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஓய்வுப் பெற்றதும் வைர வியாபாரம் செய்யத் தொடங்கினார் அதில் நஷ்டம் ஏற்படவே குடும்பத்தை பழனிக்கு அழைத்துவந்தார்.

அம்மன் கோயிலில் நடந்த நாடகத்தில் கே-.ஆர்.விஜயாவை நடிக்க வைத்தார். கே.பி.தங்கமணி என்பவரின் நாடகக் குழுவில் சேர்த்துவிட்டு பல ஊர்களுக்கு போய் நாடகம் நடிக்க வைத்தார்.

ஜீபிடர் பிக்சர்ஸ் 'அபிமன்யூ' படத்தில் நடித்த நடிகர் எஸ்.எம்.குமரேசன் பொருட்காட்சியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். அதில் நடிக்க கே.ஆர்.விஜயாவிற்கு சிறியவேடம் கிடைத்தது.

அங்கு வந்திருந்த நடிகர் கே.ஏ.தங்கவேலும் மெட்ராஸுக்கு வாங்க நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். பிரபல கதாசிரியர் விருதை ராமசாமி நாடகத்குழு நடத்திய நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 'முத்துமண்டபம்', விளக்கேற்றியவள்' படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.

பி.ஏ.குமார் தயாரித்த 'மகளே உன் சமத்து' படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்-. அப்பொழுதுதான் நடிகவேல் எம்.ஆர். ராதா அவர்களின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
உன்பேர் என்னம்மா என்று அவர் கேட்டிருக்கிறார். அதற்கு தெய்வநாயகி என்று இவர் கூறியிருக்கிறார். 'அதென்னம்மா தெய்வநாயகினு பேர் வெச்சிக்கிட்டு சினிமாவுக்கு அது பொருந்தி வராது விஜயானு பேர் வெச்சிக்கோ' என்று கூறியிருக்கிறார். அதையே அவரது தந்தையின் இனியலையும் சேர்த்து கே.ஆர்.விஜயா என்று பெயரை மாற்றிவிட்டார். அன்றுமுதல் கே.ஆர்.விஜயா என்ற பெயரிலேயே நடித்து பிரபலமானார்.

250 படங்ககளுக்குமேல் தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமே நடித்து சாதனைப் புரிந்திருக்கிறார் கே.ஆர்.விஜயா. இது இன்றைய கதாநாயகிளுக்கு கனவில் நடக்கும் சம்பவமாக மட்டுமே இருக்கும்!

-தொடரும்...

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Peru Thulasi Palanivel's Nenjam Marappathillai series 19th episode.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more