»   »  பொறுக்கி, கெட்டவனுக்கு ஆபத்து!

பொறுக்கி, கெட்டவனுக்கு ஆபத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்க் கலாச்சாரத்தை பிரதிபலிக்காத வகையில் வைக்கப்படும் படத் தலைப்புகளுக்கு ஆபத்து வந்துள்ளது. இதுபோன்ற தலைப்புகளைக் கொண்ட படங்களுக்கு வரி விலக்கு தர வேண்டாம் என முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

ஆய், ஊய், ஏய் என்ற ரீதியில் வந்து கொண்டிருந்த தமிழ்ப் படங்கள், இதையடுத்து தமிழ்ப் பெயர்கள் தாங்கி வெளியாக ஆரம்பித்தன. ஆனால் போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தமிழ் என்ற பெயரில் வினோதமான பெயர்களில் படங்களுக்குப் பெயர் வைக்கப்பட ஆரம்பித்தது.

விஜய் நடித்த படத்திற்கு போக்கிரி என பெயரிட்டனர். பொறுக்கி என்று சுந்தர்.சி. நடிக்கும் படத்துக்கு பெயர் சூட்டப்பட்டது. தனுஷ் நடிக்கும் படத்திற்கு பொல்லாதவன் என பெயர் சூட்டப்பட்டது. சிம்புவின் படத்துக்கு கெட்டவன் என்று பெயர் வைக்கப்பட்டது.

இதுபோன்ற பெயர்களை வைத்துக் கொண்டு இதுவும் தமிழ்தான் என்று கூறி கேளிக்கை வரி விலக்கை அனுபவித்து வந்தனர் திரையுலகினர் (உண்மையில் இந்த கேளிக்கை வரி விலக்கால் அப்பாவி ரசிகர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதுதான் கொடுமை).

தமிழ்த் திரையுலகினரின் போக்கு குறித்து கருணாநிதிக்கு புகார்கள் போயின. இதையடுத்து எந்தெந்த படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இந்தக் குழு பரிந்துரைக்கும் படங்களுக்குத்தான் இனி கேளிக்கை வரி விலக்கு கிடைக்குமாம்.

தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத, முரண்பாடான பெயர்களுக்கு கேளிக்கை வரி விலக்கை அளிக்க வேண்டாம் என்று முதல்வர் இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதன் காரணமாக பொறுக்கி, கெட்டவன், பொல்லாதவன் போன்ற தலைப்புகளைக் கொண்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு கிடைக்காது என்று தெரிகிறது.

ஏற்கனவே கெட்டவன் என்ற படத் தலைப்பை மாற்ற வேண்டும் என சிம்புவிடம் தமிழ்த் திரைப்பட கவுன்சில் வலியுறுத்தியது. ஆனால் பெயரை மாற்றுவதில்லை என்ற பிடிவாதத்துடன் உள்ளார் சிம்பு. அதேசமயம், பொறுக்கி படத்தின் பெயர் மாற்றி விடுவோம் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்த நிலையில் முதல்வரின் அதிரடி நடவடிக்கையால் கெட்டவன் உள்ளிட்ட படங்களின் தலைப்புகளுக்கு சிக்கல் வந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil