ஒரே மகனை பறித்துக்கொண்ட இறைவன்.. அக்காவால் தெருவுக்கு வந்த.. நடிகை வாணிஸ்ரீயின் கண்ணீர் கதை!
சென்னை: 1970களில் தென்னிந்திய சினிமாவின் ஸ்டைல் குயினாக வலம் வந்தவர் நடிகை வாணி ஸ்ரீ. அப்போது இருந்த பெரும்பாலான நடிகைகள் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில், நடிகை வாணிஸ்ரீ மட்டும் தன்னுடைய ஸ்டைலாலும், அலங்காரத்தாலும், பாந்தமான முகத்தாலும் அனைவரையும் கவரும் நடிகையாக இருந்தார். நடிகை வாணிஸ்ரீயின் அலங்காரமும், ஹேர் ஸ்டைலும் அன்றைய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால், தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெற்றி கொடிகட்டி பறந்த நடிகை வாணி ஸ்ரீ, ஆரம்பத்தில் காமெடி நடிகையாக பல படங்களில் நடித்து பின் குறுகிய காலத்திலேயே கதாநாயகியாக உயர்ந்து, இன்றளவும் நம் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றுள்ளார். பல படங்களில் தைரியமான, துணிச்சலான பெண்ணாக நடித்து மனதில் இடம் பிடித்த வாணி ஸ்ரீ, நிஜத்திலும் அப்படிப்பட்டவர் தான் என பல விஷயத்தில் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வாழ்க்கையில் சந்தித்த இழப்புகள், சங்கடங்கள் என்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகை வாணி ஸ்ரீ: ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1948 ஆம் ஆண்டு ரத்தினகுமாரி என்ற பெயரில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் நடிகை வாணிஸ்ரீ. இவரின் தந்தை விவசாய தொழில் செய்து வந்த நிலையில், தாயார் ஆடு மாடுகளை கவனித்து வந்துள்ளார். இந்த நேரத்தில் தான் வாணிஸ்ரீயுடன் பிறந்த மூன்று சகோதர, சகோதரிகளும் காசநோயால் பாதிக்கப்பட்டு, ஒரே மாதத்திற்குள்ளே அடுத்தடுத்து உயிரிழக்க வாணிஸ்ரீயின் குடும்பம் முற்றிலும் நிலைகுலைந்து போனது. அதன் பின், வாணிஸ்ரீயின் தந்தையும் இறந்து போக வாணிஸ்ரீயும், அவரது சகோதரியையும் வளர்ப்பதற்கு வாணிஸ்ரீயின் அம்மா மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். ஆடு மாடுகளை வைத்துக்கொண்டு அதிலிருந்து கிடைக்கும் பாலை விற்று இரண்டு பேரையும் தந்தையின் விருப்பப்படி படிக்க வைத்துள்ளார்.
கன்னட படத்தில் நடித்தார்: வாணிஸ்ரீயின் அக்கா நன்கு படித்து மேற்படிப்பிற்காக சென்னை வந்து கல்லூரிக்கு செல்ல, வாணிஸ்ரீக்கு படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்துள்ளார். அப்போது, பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதில் நடனமாடி உள்ளார். அந்த நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த கன்னட பட இயக்குனர் ஒருவர் வாணிஸ்ரீயின் தோற்றத்தை பார்த்துவிட்டு, கன்னட படம் ஒன்றில் நடிக்க அழைத்துள்ளார். ஆனால், வாணி ஸ்ரீயின் அம்மா, சினிமாவில் நடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எதிர்ப்பை மீறி 'வீர சங்கப்' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகளை தேடி வந்தன.
திறமையான நடிகை: சினிமா மட்டுமில்லாமல் நாடகங்களிலும் நடிக்க துவங்கிய வாணிஸ்ரீக்கு சிறிது காலத்திலேயே பீஷ்மா என்ற தெலுங்கு படம் ஒன்றின் சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் வாணிஸ்ரீ. அதன் பின் எஸ்பி ரங்காராவ், ரத்னகுமாரி என்ற பெயரை வாணிஸ்ரீ என மாற்றினார். இவ்வாறாக தெலுங்கு திரை துறையில் தன் பிரவேசத்தை ஆரம்பித்த வாணிஸ்ரீ, பெரும்பாலும் காமெடி ரோல்களிலும், துணை கதாபாத்திரங்களுமே நடித்து வந்தார். வாணிஸ்ரீயின் நடிப்பு ஆந்திர மக்களுக்கு சாவித்திரியின் நடிப்பை நினைவுபடுத்தும் விதமாக இருக்க ஆந்திர மக்களின் அதீத கவனத்தை வாணிஸ்ரீ குறுகிய காலத்திலேயே பெற்று விட்டார்.
உயர்ந்த மனிதன்: தமிழில் முதன் முதலாக ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தமிழ் திரை துறையில் கதாநாயகியாகி அடி எடுத்து வைத்து தமிழ் சினிமாவில் தன் திரை பயணத்தை தொடங்கினார். 1968 ஆம் ஆண்டு வெளியான கண்ணனின் காதல் என்ற படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி அதே ஆண்டு வெளியான உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜியுடன் சேர்ந்து நடித்தார். அந்த படம் வாணிஸ்ரீக்கு மிகப்பெரும் திருப்புமுனை படமாக அமைந்ததோடு, அந்த படத்தில் இடம் பெற்ற, 'நாளை இந்த வேலை பார்த்து ஓடிவா நிலா' பாடல் இன்று வரை நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
வசந்த மாளிகை: அதன் பின்னர் தமிழில் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய வாணிஸ்ரீக்கு மேலும், புகழை சேர்க்கும் படமாக இருந்தது 1972 ஆம் ஆண்டு வெளியான வசந்த மாளிகை படம். இந்த படத்தில் விமான பணிப்பெண் வேடத்தில் சிவாஜிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்த வாணிஸ்ரீயின் நடிப்பு பலரை வியப்பில் ஆழ்த்தியது. நடிப்பு மட்டுமில்லாமல், அந்த படத்தில் அவரின் ஆடை, ஆபரணம், ஹேர் ஸ்டைல், மேக்கப் போன்றவை பலராலும் வெகுவாக பேசப்பட்டது. வசந்த மாளிகை படத்திற்கு பின், வாணிஸ்ரீ கொண்டை, வாணிஸ்ரீ பொட்டு, வாணிஸ்ரீ வளையல்கள் பிரபலமானது.
மகனை பறிகொடுத்தார்: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த போதே, 1979 ஆம் ஆண்டு தன் குடும்ப மருத்துவரான டாக்டர் கருணாகரனை காதலித்து மணந்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகிய வாணிஸ்ரீக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்கள் இருவருமே அப்பாவை போலவே மருத்துவர்களாக இருந்தனர். அதில், வாணிஸ்ரீயின் மகன் மாரடைப்பால் காலமானார். மகன் மரணம் பற்றி கண்கலங்கிய அப்போது பேட்டி அளித்த வாணிஸ்ரீ, எங்க குடும்பத்துக்கு என்ன சாபக்கேடோ தெரியல... என் அஞ்சு வயசுல அப்பா பறிகொடுத்தேன், என்னுடைய அண்ணன் 40 வயதில் இறந்தார். இப்ப என் ஒரே மகனும் பறிகொடுத்துவிட்டேன் என கண்கலங்கி பேசி இருந்தார்.
சினிமாவை விட்டு விலகி இருந்த வாணிஸ்ரீக்கும் அவருடைய அக்காவிற்கும் இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனையால்? மனரீதியாக பாதிக்கப்பட்டார். சினிமாவில் சம்பாதித்து வாங்கிய சொத்துக்களை அவரது அக்கா கவனிக்க வந்த நிலையில், அந்த சொத்துக்கு அக்கா சொந்தம் கொண்டாடியதால், தன் சொத்துக்களை அக்காவிடம் இருந்து பெரும் போராட்டம் நடத்தி பின் அதை மீட்டெடுத்தார். இவ்வாறு மீட்டெடுத்தல் சொத்துக்களை கொண்டுவைத்து நிறுவனங்கள் தொடங்கினார். அதன் பின் சமூக சேவையிலும், அரசியலமை தன்னை ஈடுபடுத்திக் கொண்ட வாணி ஸ்ரீ, சொந்த வாழ்க்கையிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பரிமாணங்களோடு பல சிக்கல்களை மன தைரியத்தோடு கடந்து வந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











