»   »  'பில்லா'வுக்கு கேரளாவில் சிக்கல்!

'பில்லா'வுக்கு கேரளாவில் சிக்கல்!

Subscribe to Oneindia Tamil
Ajith

தமிழ்ப் படங்களுக்கு எதிரான மாநிலங்களின் வரிசையில் புதிதாக கேரளாவும் சேர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரம் முதல் பாலக்காடு ரயில் கோட்டப் பிரச்சினை வரை தமிழகத்திற்கு எதிரான நிலையை எடுத்தது கேரளா. பாலக்காடு கோட்டப் பிரச்சினையாவது எப்படியோ முடிந்து விட்டது. முல்லைப் பெரியாறு பிரச்சினை இழுத்துக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், சினிமா பக்கமும் கேரளத்தினர் தமிழுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத் திரையுலகினர் ஒரு முடிவை எடுத்தனர். அதாவது தமிழகத்தில் வெளியாகும் தமிழ்ப் படங்கள் சில வாரங்கள் கழித்தே கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்கப்படும். ஒரே நேரத்தில் இரு மாநிலங்களிலும் அவற்றைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர்.

இதே போன்ற முடிவை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கேரள விநியோகஸ்தர்கள் எடுத்தனர். தமிழகத்தில் வெளியாகும் புதுப் படங்களை அதே நேரத்தில் கேரளாவிலும் ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவுதான் அது. தமிழகத்தில் வெளியான 2 வாரங்கள் கழித்தே கேரளாவில் திரையிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

மலையாளத் திரைப்படங்களின் நலனைக் கருதி இந்த முடிவு எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விஜய்யின் போக்கிரி, அழகிய தமிழ் மகன், ரஜினியின் சிவாஜி ஆகிய படங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளித்து ஒரே நேரத்தில் திரையிட அனுமதித்தனர்.

ஆனால் இப்போது மீண்டும் தங்களது முடிவை தீவிரமாக அமல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் அஜீத் நடித்துள்ள பில்லா படத்தை தமிழகத்திலும், கேரளாவிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மலையாளப் படங்களை விட ஒருபடி அதிகமாகவே அங்கு தமிழ்ப் படங்கள் வெற்றி பெறுகின்றன. வசூலிலும் அள்ளி எடுக்கின்றன. குறிப்பாக ரஜினி, கமல், விஜய் ஆகியோரது படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் உள்ளது.

இதன் காரணமாக மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யாமல் தடுத்தால், திருட்டு விசிடிக்கள் புழக்கத்தில் வந்து விடும், தமிழ்ப் படங்களுக்கு வசூல் கிடைக்காது, பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பது கேரளத்தினரின் கணக்கு.

தற்போது எழுந்துள்ள இந்தப் பிரச்சினையை தீர்த்து, தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் அதே நாளில் கேரளாவிலும் ரிலீஸ் செய்ய, பில்லா படத் தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷ், கேரள விநியோகஸ்தர்களுடன் பேச்சு நடத்தி வருகிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil