»   »  ஷில்பாவுக்கு ராஜீவ் விருது

ஷில்பாவுக்கு ராஜீவ் விருது

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டத்தைத் தொடர்ந்து தற்போது இன்னொரு விருது ஷில்பா ஷெட்டியைத் தேடி வந்துள்ளது.

பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வென்றதற்குப் பிறகு ஷில்பாவின் பாப்புலாரிட்டி படு வேகமாக வளர்ந்து கொண்டுள்ளது. குட்டி குட்டியாக பல விருதுகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளார் ஷில்பா. பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கலக்க ஆரம்பித்துள்ளார்.

முத்தாய்ப்பாக சமீபத்தில் இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம், ஷில்பாவுக்கு கெளரவ டாக்டர் பட்டத்தைக் கொடுத்து கெளரவித்தது. திரைத்துறைக்கு ஷில்பா ஆற்றிய சேவைக்காக இந்த பட்டத்தைக் கொடுத்தனர்.

இந்த நிலையில் ஷில்பாவுக்கு இன்னொரு விருதும் கிடைத்துள்ளது. அது, ராஜீவ் காந்தி தேசிய தர விருதாகும். இதுகுறித்து ஷில்பாவின் செய்தித் தொடர்பாளர் டேல் பக்வாகர் கூறுகையில், மும்பை, தேசிய பெர்பார்மிங் ஆர்ட்ஸ் மையத்தில் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ஷில்பாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்த இளம் வயதில் உலக அளவில் சாதனை நிகழ்த்தியுள்ளார் ஷில்பா. அந்த வகையில், ஷில்பாவுக்குக் கிடைத்துள்ள இந்த விருது மிகச் சிறப்பானது. ராஜீவ் காந்தி தர விருதுக்கு தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து ஷில்பா மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்றார் அவர்.

கடந்த 1991ம் ஆண்டு இந்திய தரக் கட்டுப்பாட்டு மையம், மத்திய அரசின் ஒப்புதலுடன் இந்த விருதினை ஏற்படுத்தியது. தரமான சேவையைத் தரும் இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தரக் கட்டுப்பாடு குறித்த இயக்கத்தை உத்வேகத்துடன் ராஜீவ் காந்தி அமல்படுத்தியதால் அவரது பெயரில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது.

இந்த விருதினை இதற்கு முன்பு சுனில் மிட்டல், முகேஷ் அம்பானி, குமார மங்களம் பிர்லா, ஆதி கோத்ரேஜ், கிரண் மசூம்தார் ஷா, ஷாருக் கான், தருண் தேஜ்பால், சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்ஸா, ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil