»   »  சிவாஜி சவுண்ட் என்ஜீனியர் சாவு:என்னதான் நடந்தது?

சிவாஜி சவுண்ட் என்ஜீனியர் சாவு:என்னதான் நடந்தது?

Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ஷங்கர் வீட்டில் நடந்த சிவாஜி பட யூனிட்டருக்கான விருந்தின்போது, நீச்சல்குளத்தில் மூழ்கி இறந்த ஒலிப்பதிவாளர் சச்சிதானந்தத்தை, பார்ட்டிக்கு வந்திருந்த சிலர், நீதானே பாட்டை திருட்டுத்தனமாக லீக் செய்தது என்று கேட்டு சண்டை போட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே உள்ள நீலாங்கரை, சின்னாண்டிக் குப்பம் பகுதியில் இயக்குநர் ஷங்கரின் பண்ணை இல்லம் உள்ளது. அருகிலேயே ரஜினியின் பண்ணை வீடும் உள்ளது.

ஷங்கரின் வீட்டில் புதன்கிழமை சிவாஜி பட யூனிட்டைச் சேர்ந்த 250 பேருக்கு பிரமாண்ட பார்ட்டி வைத்தார் ஷங்கர். இதில் ரஜினி, ஏவி.எம். சரவணன், ஷங்கர், ஷ்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடிய விடிய பார்ட்டி அமர்க்களப்பட்டது. விடிந்த பிறகு பார்த்தால் படத்தின் சவுண்ட் என்ஜீனியர் சச்சிதானந்தம் நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்தார். மிதமிஞ்சி குடிபோதையில் குளத்தில் விழுந்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தற்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சச்சிதானந்தம் சாவு தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது பார்ட்டி நடந்த அன்று, சிலர் சச்சிதானந்த்தை டீஸ் செய்துள்ளனர். அதாவது, சிவாஜி பாட்டுக்கள் இணையதளத்தில் லீக் ஆக நீதானே காரணம் என்று கேட்டுள்ளனர். இருப்பினும் இது சண்டையாக மாறவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை காவல்துறையின் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் மது விருந்துக்கு அனுமதி கிடையாது. அதிலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், சுத்தமாக அனுமதி கிடையாது.

ஆனால் ஷங்கரின் வீட்டில் மது விருந்து விடிய விடிய நடந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். இருப்பினும் போலீஸ் தரப்பில் இந்த வழக்கை கிட்டத்தட்ட மூடி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விருந்தில் மது பரிமாறப்படவில்லை என்று ஏவி.எம் நிறுவன மேலாளர் சுந்தரேசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது ஏவி.எம். நிறுவனம்தான். இதில் மது இடம் பெறவே இல்லை.

ரஜினி முதல் பார்ட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சைவ உணவுகள்தான் வழங்கப்பட்டன. அசைவ உணவு கூட வழங்கப்படவில்லை.

பார்ட்டி முடிந்ததும் அனைவரும் இரவு 10.30 மணிக்கெல்லாம் கிளம்பிப் போய் விட்டார்கள். போக்குவரத்து வசதி சரியில்லாத காரணத்தால் சில தொழில்நுட்பக் கலைஞர்கள் இரவு அங்கேயே தங்கியிருக்கக் கூடும்.

அப்போது வெளியிலிருந்து மது வாங்கிக் கொண்டு வந்து உள்ளே அமர்ந்து சாப்பிட்டிருக்கலாம். ஆனால் அதுகுறித்து எங்கள் யாருக்கும் தெரியாது. இதுதொடர்பான விசாரணையை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றார்.

இதற்கிடையே, சச்சிதானந்தம் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஷங்கர், அவரது மறைவுக்கு இழப்பீடாக ரூ. 20 லட்சம் நிதியுதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil