»   »  உருவாகிறது மேக்கிங் ஆஃப் சிவாஜி

உருவாகிறது மேக்கிங் ஆஃப் சிவாஜி

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள சிவாஜி படம் குறித்த ஒரு குறும்படத்தை தயாரிக்க ஏவி.எம் திட்டமிட்டுள்ளது. சிவாஜி பட படப்பிடிப்பு குறித்த பல தகவல்கள் இதில் இடம்பெறவுள்ளன.

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு பரபரப்பு வேறு எந்தப் படத்திற்கும் இருந்ததாக தெரியவில்லை. அந்த அளவுக்கு சிவாஜி படம் குறித்து பெரிய அளவில் கூவித் தள்ளி விட்டார்கள்.

ஒரு வழியாக பாடல்கள் வெளியாகி விட்டன. அடுத்து படம் வர வேண்டியதுதான் பாக்கி, அதாவது விடிஞ்சா கல்யாணம் என்பது மாதிரி.

ஏவி.எம். சரவணனுக்கு இந்தப் படம் மறக்க முடியாத படம். காரணம் ஏவி. எம். நிறுவனத்துக்கு இது 70வது ஆண்டு. அந்த ஆண்டில் மிகப் பெரும் பொருட் செலவில் ரஜினி படம் வரவிருப்பது அந்த நிறுவனத்திற்கு பத்து தீபாவளியை மொத்தமாக கொண்டாடுவதைப் போல.

ரஜினியும், ஏவி.எம். சரவணனும் இதற்கு முன்பு 8 படங்களில் இணைந்து பணியார்றியுள்ளனர். ஆனால் எந்தப் படத்திலும் இல்லாத அளவுக்கு இந்தப் படத்தின்போதுதான் சரவணன் படு திரில்லாக (சில நேரங்களில் திகிலாகவும்) இருந்தார்.

ஏவி.எம். நிறுவனத்தின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்திற்கு சிவாஜி ஒரு புது அத்தியாயத்தைதத் தொடங்கிக் கொடுத்துள்ளது. காரணம் சிவாஜி படம் அறிவிக்கப்படுவற்கு முன்புதான் ஏவி.எம். நிறுவனத்தின் சொத்துக்கள் நான்கு பாகமாக பிரிக்கப்பட்டன.

இதில் சரவணனுக்கு ஏவி.எம். ஸ்டுடியேவில் ஒரு பகுதிதான் கிடைத்தது. அத்தோடு ஏவி.எம் நிறுவன படங்கள் அனைத்தின் உரிமையையும் தனது தம்பி ஏவி.எம். பாலசுப்ரமணியத்துக்கே கொடுத்து விட்டார் சரவணன்.

அடுத்து ஏதாவது பெரிய அளவில் படம் பண்ணினால் மட்டுமே திரைத் துறையில் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலை. அந்த சமயத்தில்தான் கை கொடுத்தார் சிவாஜி ராவ், சிவாஜிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.

ஷங்கரை வைத்துப் படம் செய்யலாம் என்று அவர் கூறிய யோசனையை உடனே ஏற்றுக் கொண்டார் சரவணன். அதன் பிறகு தொடங்கியது சிவாஜி.

படம் தொடங்கியது முதல் சிவாஜி குறித்த தகவல்கள் தினசரி வெளியாகி வந்தன. ஷூட்டிங் குறித்த தகவல்களை நீ முந்தி, நான் முந்தி என பத்திரிக்கைகளும், இணைய தளங்களும் மாறி மாறி வெளியிட்டன.

பின்னர் சிவாஜி பட ஷூட்டிங் ஸ்டில்ஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் படத்தின் பாடல்கள் இன்டர்நெட்டில் வெளியாகி கலக்கின.

இப்படி பயமுறுத்தி வந்த சிவாஜி ஒரு வழியாக மே மாதம் வெளியாகப் போகிறது. இந்த நிலையில் சிவாஜி படம் உருவானது எப்படி என்ற பெயரில் மேக்கிங் ஆஃப் சிவாஜி என்ற சிறிய படத்தை உருவாக்குமாறு ஷங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளாராம் சரவணன்.

இதில் படத்தில் நடித்த பெரும்பாலான கலைஞர்கள் கலந்து கொண்டு பேசவுள்ளனர். தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய அளவில் தயாரிக்கப்படவுள்ள இந்தப் படத்துக்கு மேக்கிங் ஆஃப் சிவாஜி - தி பாஸ் என பெயரிடப்படவுள்ளது.

சிடி, டிவிடி வடிவில் இது தயாரிக்கப்பட்டு, சிவாஜி பட சிறப்பு காட்சியின்போது பத்திரிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாம். இதை விற்பனைக்கும் விட சரவணன் முடிவு செய்துள்ளாராம். ஆனால் படம் வெளியான சில நாட்கள் கழித்து இது விற்பனைக்கு வருமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil