»   »  ரீமேக் தப்பு - வைஜெயந்தி மாலா

ரீமேக் தப்பு - வைஜெயந்தி மாலா

Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் படங்களை ரீமேக் செய்வது தவறான போக்கு. இதன் மூலம் ஒரிஜினல் படங்களில் நடித்த கலைஞர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா குமுறியுள்ளார்.


ஒரு காலத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என இந்தியத் திரையுலகையே கலக்கியவர் வைஜெயந்தி மாலா. நடிகையாக மட்டும் அல்லாமல் நடனக் கலைஞராகவும், அரசியலில் எம்.பியாகவும் இருந்து அசத்தியவர் வைஜெயந்தி மாலா.

அரசியல் மற்றும் திரையுலகிலிருந்து ரிடையர்ட் ஆகி விட்ட வைஜெயந்தி மாலாவின் மகன் சுசின் என்கிற சுசீந்திரா பாலி, முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள நினைத்தாலே படம் வெளியாகவுள்ளது.

இதையொட்டி தனது வீட்டில் பத்திரிக்கையாளர்களை அழைத்து மகனை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார் வைஜெயந்தி மாலா. சுசின் 1999ம் ஆண்டு வெளியான கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜூனுடன் இணைந்து நடித்தார்.

அப்படம் பாக்ஸ் ஆபிஸ் போண்டி ஆனது. இதையடுத்து முகவரி படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்தார். அதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதையடுத்து நடிப்புக்கு கேப் விட்டார்.

6 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது தனி ஹீரோவாக நினைத்தாலே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஸ்வாஸ் சுந்தர் தயாரித்து, இயக்கியுள்ளார். இன்று படம் ரிலீஸாகியுள்ளது.

தனது மகனின் நடிப்பார்வம் குறித்து வைஜெயந்தி மாலா கூறுகையில், எனது மகனின் நடிப்பார்வதற்கு நான் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை, மாறாக ஊக்குவித்து வந்துள்ளேன்.

சட்டத்தில் மாஸ்டர் டிகிரியை அவர் முடித்துள்ளார். வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். இருந்தாலும் சினிமா மீது அவருக்குத் தீராத காதல். நல்ல திறமையும் உள்ளது.

ஆரம்பத்தில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. ஆனால் இப்போது, சரியான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார்.

என்னைப் போன்ற நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும், இயக்குநர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். அவர்கள்தான் நமக்கு எது சரி, எது பொருத்தமாக இருக்கும் என்பது தெரியும். அதை வைத்துத்தான் நம்மை நடிக்க வைத்து பாராட்டுக்களையும், பரிசுகளையும் பெற்றுத் தருகிறார்கள் என்றார் வைஜெயந்தி.

தமிழில் சமீப காலமாக தமிழ் ரீமேக் படங்கள் அதிகம் வர ஆரம்பித்திருப்பது குறித்த கேள்விக்கு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொன்னார் வைஜெயந்தி மாலா.

இது சரியான போக்கு அல்ல. அந்தக் கால படங்களை அப்படியே விட்டு விட வேண்டும். அதுதான் சரியானது. அப்போது வந்த படங்களை ரீமேக் செய்வது என்பது அர்த்தமற்ற, தேவையில்லாத ஒன்று. இது ஒரிஜினல் படங்களில் நடித்த கலைஞர்களை அவமானப்படுத்துவது போலாகும்.

ஒரிஜினல் படங்களைப் போல ரீமேக் படங்களை உருவாக்க முடியாது. இந்தியில் வெளியான மதுமதியையோ அல்லது வஞ்சிக்கோட்டை வாலிபனையோ இப்போது ரீமேக் செய்ய முடியுமா? என்றார் ஆதங்கத்துடன்.

மறுபடியும் நடிப்பீர்களா என்று கேட்டபோது, நீண்ட காலம் நடித்து விட்டேன். இனிமேல் நடிக்கும் ஆசை இல்லை என்றார், வனப்பு போயிருந்தாலும், பழைய வசீகரம் மாறாத புன்னகையுடன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil