»   »  தங்கர் படத்தில் விஜய்?

தங்கர் படத்தில் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
தங்கர் பச்சான் இயக்க, அதில் விஜய் நடித்தால் எப்படி இருக்கும்?விரைவில் இது நடக்கப் போவது போலத் தெரிகிறது. தங்கர் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக விஜய் கூறியுள்ளார். கண்டிப்பாக விஜய்யை இயக்குவேன் என்று தங்கரும் கூறியுள்ளார்.

தங்கர் பச்சான் இயக்கத்தில், சத்யராஜ் படு சிறப்பாக நடித்துள்ள ஒன்பது ரூபாய் நோட்டு என்ற படம் உருவாகியுள்ளது. தங்கர் எழுதிய ஒன்பது ரூபாய் நோட்டு கதைதான் திரைப்படமாகியுள்ளது. சத்யராஜுக்கு ஜோடியாக அர்ச்சனா நடித்துள்ளார். நாசர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தீபாவளிக்கு இந்தப் படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நல்ல தியேட்டர் கிடைக்காததால் தள்ளிப் போய் விட்டது. இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் உள்ள கர்நாடக சபாவில் நடந்தது.

பெரும் நட்சத்திரக் கூட்டம் இந்த விழாவில் கலந்து கொண்டது. பாரதிராஜா, மணிரத்னம், கலைப்புலி தாணு, விஜய், சத்யராஜ், அர்ச்சனா, பரத்வாஜ், வைரமுத்து உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். விஜய் சிடியை வெளியிட மற்றவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர்.

பாரதிராஜா பேசுகையில், தமிழ் கிராமங்ங்களின் தொலைந்து போன அடையாளங்களை தங்கர் பச்சான் மீண்டும் கொண்டு வந்துள்ளார். கிராம மக்களின் வாழ்க்கையையும், கிராம மக்களின் முகங்களையும் அவர் மீண்டும் சினிமாவில் பிரபலப்படுத்தி விட்டார் என்றார்.

மணிரத்னம் பேசுகையில், முன்பு ஒரு பாரதிராஜா அல்லது பாலச்சந்தர் மட்டுமே இருந்தனர். ஆனால் இன்று 10 அல்லது 15 இளம் படைப்பாளிகள் தமிழ் சினிமாவைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். இது மனசுக்கு இதமாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் இன்றைய நிலை எனக்கு பரம திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் பேசுகையில், ரஜினி சார், சத்யராஜ் ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாகும். தங்கர் சாரின் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தின் பாடல்களைக் கேட்டபின்னர், அவருடைய இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வந்து விட்டது.

எனக்காக இல்லாமல், அவருடைய பாணியிலேயே ஒரு கதையைத் தயார் செய்து, ரசிகர்களுக்காக சில கமர்ஷியல் விஷயங்களையும் கலந்து என்னை நடிக்கக் கூப்பிட்டால் கண்டிப்பாக நான் நடிக்கத் தயார் என்றார்.

பின்னர் தங்கர் பேசுகையில், நிச்சயமாக, விஜய்க்குப் பொருத்தமான கதையை உருவாக்கி அவரை நடிக்க வைப்பேன் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், நல்ல தமிழ்ப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் மறுத்தால், அவர்களை நாம் உதைக்க வேண்டும். நல்ல படங்களைப் பார்க்குமாறு அவர்களை நாம் வற்புறுத்த வேண்டும். இது நமது கடமை. இதை யாராலும் தடுக்க முடியாது.

நாம் இந்த மண்ணின் மக்கள். நமது அடையாளங்களை வெளிகொணரும் பணி நமக்கு உள்ளது. நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

இங்கு எதையுமே கட்டாயப்படுத்தித்தான் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக நான் அவமானப்படுகிறேன். நல்ல தமிழ்ப் படங்களை நமது மக்கள் பார்க்கச் செய்வதற்காக இயக்கத்தைத் தொடங்கப் போகிறேன்.

நான், சீமான் போன்ற இயக்குநர்கள் இயக்கும் நல்ல படங்களை பார்க்க மக்கள் மறுத்தால் அவர்களை உதைக்கப் போகிறோம்.

என்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு பாரதிராஜாதான் குரு, முன்னோடி. அவர் ஆரம்பித்து வைத்த நல்ல விஷயங்களைத்தான் நாங்கள் இன்று பின்பற்றி வருகிறோம்.

ஆனால் பின்னாளில் நான் பாரதிராஜா படங்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். காரணம், சமீபகாலமாக அவரும் கூட தனது படங்களில் தமிழ்க் கலாச்சாரத்தைக் காட்டாமல் விட்டு விட்டார். அவரும் கூட நவீன கலாச்சாரத்திற்குக் கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டார் என்றார். தங்கரின் பேச்சை முகத்தில் சலனமின்றி அமைதியாக கேட்டபடி இருந்தார் பாரதிராஜா.

Read more about: thankar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil