twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று தமிழ் சினிமாவுக்கு கம்பீரம் சேர்த்த சிவாஜி கணேசனின் 85வது பிறந்த தினம்

    By Shankar
    |

    சிவாஜி கணேசன்.... தமிழ் சினிமாவின் தவப் புதல்வன், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்மக் குரலோன், நடிகர் திலகம்... என்றெல்லாம் தமிழ் சினிமா ரசிகர்களாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டவர்.

    இன்றைக்கு அந்த மாபெரும் கலைஞனுக்கு 85 வது பிறந்த நாள்.

    அக்டோபர் 1-ம் தேதி 1928-ம் ஆண்டு விழுப்புரத்தில் பிறந்தவர் கணேசன். பின்னர்தான் அவர் சிவாஜி கணேசனானார். நடிப்பு அவருக்கு ரத்தத்தில் ஊறியது என்பதில் மிகையேதுமில்லை.

    கணேசன் சிவாஜியானார்

    கணேசன் சிவாஜியானார்

    படிக்க விருப்பமின்றி, ஏழு வயிதிலிருந்து நடிக்க ஆரம்பித்தார் கணேசன். பத்தாவது வயதில் நாடகக் கம்பெனியில் சேர்ந்து ஊர் ஊராய் நாடகங்கள் நடித்தார்.

    சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் கணேசனின் நடிப்பைப் பார்த்து, அவருக்கு சிவாஜி எனும் பட்டப் பெயர் தந்தவர் தந்தை பெரியார்.

    தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளை

    தமிழ் சினிமாவின் செல்லப் பிள்ளை

    நாடகத் துறையிலிருந்து சிவாஜி கணேசன் திரைத் துறைக்கு பிரவேசித்தது பராசக்தி படம் மூலம். அன்றைக்கு தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கலைஞர்கள். முதல் முறையாக கம்பீரக் குரலில் தங்கு தடையின்றி தமிழை உச்சரித்து, கேட்ட நெஞ்சங்களெல்லாம் பரவசப்படுத்தியது சிவாஜி கணேசனின் குரல். அன்றுமுதல் தமிழ் சினிமா அவரைக் கொண்டாட ஆரம்பித்தது.

    301 படங்கள்

    301 படங்கள்

    பராசக்தி தொடங்கி, படையப்பா வரை சிவாஜி நடித்தது மொத்தம் 301 படங்கள். இவற்றில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள் நடித்திருக்கிறார். முன்பு அவருக்குச் சொந்தமான சாந்தி திரையரங்க சுற்றுச் சுவர்களில் சிவாஜி நடித்த மொத்த படங்களையும் எழுதி வைத்திருந்தார்கள்.

    ஒரு கூட்டுக் கிளியாக

    ஒரு கூட்டுக் கிளியாக

    கூட்டுக் குடும்பத்தின் மீது அபார நம்பிக்கையும் பற்றும் கொண்டவர் சிவாஜி. தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜியின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்! தன் ரசிகர்களை பிள்ளைகள் என்றே அழைப்பார். அவரை திரையுலகினர் பெரும்பாலும் அண்ணன், அல்லது அப்பா என்றுதான் அழைத்து வந்தார்கள்.

    எம்ஜிஆருடன்

    எம்ஜிஆருடன்

    நடிப்பில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், எம்ஜிஆரும் சிவாஜியும் அண்ணன் தம்பிகளாகவே திகழ்ந்தனர். எம்ஜிஆரை அண்ணன் என்றுதான் சிவாஜி அழைப்பார். ராமாவரத்தில் தனக்காக தோட்டம் வாங்கி வீடு கட்டிய எம்ஜிஆர், அதே போன்றதொரு தோட்டத்தை அதே ராமாவரத்தில் சிவாஜியும் வாங்க உதவினார்.

    தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையை அண்ணன் எம்ஜிஆரை வைத்துத்தான் திறந்தார்.

    ரஜினி

    ரஜினி

    ரஜினி, கமல் இருவர் மீதும் சிவாஜிக்கு தனி பாசம். இருவருடனும் பல படங்களி்ல் நடித்திருக்கிறார். சிவாஜியும் ரஜினியும் இணைந்த முதல் படம் நான் வாழ வைப்பேன். பின்னர் ஜஸ்டிஸ் கோபிநாத், படிக்காதவன், விடுதலை என பல படங்கள். சிவாஜி கடைசியாக நடித்தது ரஜினியின் படையப்பாதான்.

    கமல்

    கமல்

    கமலுடன் நாம் பிறந்த மண் ஆரம்பித்து, தேவர் மகன் வரை பல படங்களில் நடித்துள்ளார் சிவாஜி. சிவாஜியின் கலை உலக வாரிசாக தன்னை அறிவித்துக் கொண்டவர் கமல்ஹாஸன். அந்த அளவு இருவருக்கும் நெருக்கம். தேவர் மகனில்தான் சிவாஜிக்கு தேசிய விருதும் கிடைத்தது.

    முதல் மரியாதை

    முதல் மரியாதை

    தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, சிவாஜியின் நடிப்பு வாழ்க்கையிலும் மறக்க முடியாத படம் பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை. 'இந்தப் படத்தில் நான் நடிக்கல. என்னை இப்படி போ.. அப்படி நட.. இங்கிட்டு உட்காருன்னு பாரதிராஜா சொன்னார். அப்படியே செஞ்சேன்.. படத்தைப் பார்த்தா பிரமிச்சுப் போயிட்டேன்' என்றார் படத்தின் வெற்றிச் சந்திப்பில் சிவாஜிகணேசன்.

    இளையராஜா

    இளையராஜா

    சிவாஜிக்கு மிக நெருக்கமான இன்னொரு கலைஞர் இளையராஜா. தீபம், தியாகம், வெற்றிக்கு ஒருவன் தொடங்கி ஏராளமான சிவாஜி படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். என்னடா சாமியார் என ஜாலியாகக் கிண்டலடிப்பார் சிவாஜி. நேரம் தவறாமைக்குப் புகழ்பெற்றவர்கள் சிவாஜியும் இளையராஜாவும். அப்படியும் ஒருமுறை தாமதமாக வந்துவிட்டாராம் இளையராஜா. என்ன ராஜா நீயே லேட்டு என்று சிவாஜி கேட்க, 'நீங்க எங்களுக்கெல்லாம் முன்னாடியே வந்துட்டீங்கண்ணே' என்று ராஜா பதில் சொல்ல, அதிலிருந்து உள்ளர்த்தம் புரிந்து தட்டிக் கொடுத்து சிரித்தாராம் சிவாஜி.

    கருணாநிதி

    கருணாநிதி

    திமுக தலைவர் கருணாநிதியுடன் கடைசி வரை நட்புறவோடு இருந்தவர் சிவாஜி. என் ஆயுளில் இரண்டு மூன்று ஆண்டுகளை அண்ணன் கலைஞருக்குத் தந்துவிடு இறைவா என தன் கடைசி காலங்களில் விழா மேடையில் உருகும் அளவுக்கு நெருக்கம்.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    ஜெயலலிதாவை அவர் அம்மு என்றுதான் அழைப்பார். ஏராளமான படங்களில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். பின்னாட்களில் அரசியல் தாண்டி இருவரும் நட்பு பேணி வந்தனர். ஜெயலலிதா தன் வளர்ப்பு மகன் என சுதாகரனை அறிவித்தபோது, அவருக்கு சிவாஜி குடும்பத்திலிருந்துதான் பெண் எடுத்தார்கள்.

    ஹாலிவுட்டிலும்

    ஹாலிவுட்டிலும்

    சிவாஜியைப் போன்ற சாதனையாளர்கள் இன்றைய சினிமாவில் யாருமில்லை. இன்றைக்கு சர்வதேச அளவில் தமிழ் சினிமா பேசப்படுகிறது என்றால் அதற்கு சிவாஜி ஒரு முன்னோடி. அறுபதுகளிலேயே அவரது படங்கள் ஹாலிவுட் வரை பேசப்பட்டன, சிவாஜியின் அற்புத நடிப்பாற்றலால்.

    சரித்திர நாயகன்

    சரித்திர நாயகன்

    தமிழ் மக்களுக்கு சிவபெருமானை சிவாஜி உருவில்தான் அதிகம் தெரியும். அதேபோல தமிழ் மக்கள் சரித்திர நாயகர்களான கட்டபொம்மன், வஉசி, கர்ணன், பாரதியார், ராஜராஜ சோழன் போன்றவர்களை சிவாஜியின் உருவில்தான் அறிந்திருக்கிறார்கள், இன்றளவும்!

    English summary
    Today is legendary actor Sivaji Ganesan's 85th birth anniversary. Here is a compilation of his achievements.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X