கரீனா கபூர் பிகினில நடிச்சா என்னாகும் தெரியுமா...?
மும்பை: எது தனக்கு மகிழ்ச்சி, மன அமைதி போன்றவற்றைத் தருகிறதோ அதனைத் தனது ராசியாகச் சிலர் கொள்வதுண்டு. மனிதருக்கு மனிதர் இது போன்ற நம்பிக்கைகள் மாறுபடுவதுண்டு.
சில நம்பிக்கைகள் ‘காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த' கதையாக வேடிக்கையாகக் கூட இருப்பதுண்டு.
அந்தவகையில், சில பிரபல பாலிவுட் நட்சத்திரங்களின் மூட நம்பிக்கைகள் இதோ...

பிபாசா பாசு:
பிபாஷா பாசு தனது புதிய பட வெளியீட்டு விழா ஒன்றுக்கு வந்த அனைவருக்கும் எலுமிச்சை பழமும், மிளகாயும் கொடுத்தாராம். காரணம் ‘இது திருஷ்டி மற்றவர்களின் பொறாமையை போக்குவதற்கு' என்று விளக்கமும் அளித்தாராம்.

ஈஷா குப்தா:
கைகளில் விதவிதமான தாயத்துகளுடன் தன் பட விழாவிற்கு வந்திருந்தார் நடிகை ஈஷா குப்தா. தாயத்து தொடர்பாக கேள்வி எழுப்பியவர்களிடம், ‘படத்தின் வெற்றிக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட தாயத்து' எனப் பதிலளித்தாராம் ஈஷா.

ஏக்தா கபூர்:
வெற்றிப்படத் தயாரிப்பாளரான ஏக்தா கபூர், தனது ‘டர்ட்டி பிக்சர்' பட வெற்றிக்கு, பட ரிலீசுக்கு முன் சில புனித ஸ்தலங்களுக்கு தான் சென்று வந்ததுதான் காரணம் என்று அடித்து சொல்கிறாராம். இதனால், அடுத்து அவர் தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளிவர உள்ள நிலையில் மீண்டும் ஒரு புனித ஸ்தல பயணத்திற்கு ரெடியாகிக்கொண்டிருக்கிறாராம்.

குறிப்பிட்ட படவிழா...
அதேபோல், இவர் குறிப்பிட்ட நாடு ஒன்றில் நடக்கும் பட விழாவிற்கு மட்டும் தன் படங்களை அனுப்புவதில்லை. காரணம் அவ்வாறு அனுப்பப்படும் படங்கள் சரியாக திரையரங்குகளில் ஓடாது என்பது இவரது நம்பிக்கை.

கரீனா கபூர்:
பிரபல நடிகை கரீனா கபூரின் நம்பிக்கை விசித்திரமானது. பொதுவாக ரசிகர்களைத் திருப்தி படுத்தும் வகையில், பிகினி உள்ளிட்ட ஆடைகளை அணிந்து நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், தான் பிகினி அணிந்து நடித்தால் அப்படம் நிச்சயம் தோல்வியடையும் என நம்புகிறாராம் கரீனாகபூர்.

பரேஷ் ராவல்:
‘ஓ மை காட்' படத்தில் நாத்திகராக நடித்த பரேஷ் ராவல், நிஜ வாழ்க்கையில் முரட்டுத்தனமான மூட நம்பிக்கை உடையவராம். தனது படத்தின் படப்பிடிப்பு நடந்த இடத்தை முன்னதாக தான் பார்த்தால், அப்படம் நிச்சயம் பிளாப் என கருதுகிறாராம் பரேஷ். இதனாலேயே இவரை அவரது நண்பர்கள், ‘லொகேஷன் ராவல்' என்று கிண்டலடிக்கிறார்களாம்.

கோவிந்தா:
தன்னுடைய ஜோசியக்காரர் சொன்ன தேதியில் படப்பிடிப்பை வைத்துக் கொள்ள மறுக்கப்பட்டதால், தன் மகள் நர்மதாவை இன்னும் நடிகையாக்காமல் வைத்திருக்கிறாராம் நடிகர் கோவிந்தா. இதனால், சல்மான் கானுடன் ஜோடியாக நடிக்க கிடைத்த வாய்ப்புக் கூட நர்மதாவுக்கு கை நழுவிப் போனதாம்.

அபிஷேக் பச்சன் :
கிரிக்கெட் போட்டிகளை மைதானத்திற்கே சென்று ரசிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர் நடிகர் அபிஷேக்பச்சன். ஆனால், தவிர்க்க இயலாத காரணத்தால், ஒரு முறை வீட்டில் அமர்ந்து டிவியில் கிரிக்கெட்டைப் பார்த்துள்ளார். அம்முறை இந்தியா வென்று விட, அன்றிலிருந்து கிரிக்கெட்டை டி.வி.யிலேயே பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். தான் நேரடியாக மைதானத்திற்குப் போனால் இந்தியா தோற்று விடும் என இவர் நம்புகிறாராம்.

பர்ஹான் அக்தர் :
இயக்குநர் பர்ஹான் அக்தரின் நம்பிக்கை வித்தியாசமானது. வீட்டில் அமர்ந்தபடி டிவியில் கிரிக்கெட் பார்க்கும் இவருக்கு முன்னாள், டீபாயில் ஒரு டம்ளர் தண்ணீர் வைக்கப் பட்டிருக்கும். இதன் மூலம் இந்தியா ஜெயிக்கும் என அவர் நம்புகிறாராம். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அந்த டம்ளரில் உள்ள தண்ணீர் கீழே சிந்தி விட்டாளோ அல்லது யாராவது எடுத்துக் குடித்து விட்டாலோ அவ்வளவு தான் இந்தியா நிச்சயம் தோற்றுவிடும் என அப்செட் ஆகிவிடுவாராம்.

அங்கயே இருங்க....
அதேபோல், தன்னுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் யாராவது இடையில் எழுந்து சமையலறைக்கு போகும்போது விக்கெட் விழுந்துவிட்டால் அவ்வளவுதான். அவர்கள் ஆட்டம் முடியும் வரை சமையலறையிலேயே தான் இருக்க வேண்டும். திரும்பி வர அனுமதிக்க மாட்டாராம் பர்ஹான்.


Click it and Unblock the Notifications











