ஆஸ்கர் வரை சென்ற 'ஜல்லிக்கட்டு' திரைப்படத்துக்கு தேசிய விருது!
சென்னை: மலையாள மொழியில் வெளியான ஜல்லிக்கட்டு திரைப்படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதை பெற்றுள்ளது.
லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில், மலையாள மொழியில் வெளியான படம் ஜல்லிக்கட்டு.
இந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நல்ல வரவேற்பு
ஹரீஷ்.எஸ் எழுதியிருந்த 'மாவோயிஸ்ட்' என்கிற சிறுகதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்த திரைப்படம் இது. 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிறந்த இயக்குநர்
2019 செப்டம்பர் மாதம் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கெடுத்த 'ஜல்லிக்கட்டு' அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், அந்த ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் இயக்குநர் பெல்லிச்சேரி சிறந்த இயக்குநர் விருதை வென்றார்.

ஜல்லிக்கட்டுக்கு தேசிய விருது
இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு ஜல்லிக்கட்டு திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அந்தப் படம் இறுதிவரை செல்லவில்லை. இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருது பெற்ற படங்களின் பட்டியலில் ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

சிறந்த ஒளிப்பதிவு
சிறந்த ஒளிப்பதிவுக்கான பிரிவில் ஜல்லிக்கட்டு திரைப்படம் விருது பெற்றுள்ளது. இறைச்சிக்காக வெட்டப்படும் இடத்தில் இருந்து ஒரு எருமை தப்பிப்பதும் கடைசியில் என்னவாகும் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











