»   »  கமல்ஹாசனுக்கு வாழும் லிஜென்ட் விருது

கமல்ஹாசனுக்கு வாழும் லிஜென்ட் விருது

Subscribe to Oneindia Tamil

மும்பையைச் சேர்ந்த எப்.ஐ.சி.சி.ஐ. பிரேம்ஸ் நிறுவனமும், மோசர்பியர் என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து மும்பையில் நடத்திய விழாவில் கமல்ஹாசன் மற்றும் இந்தி நடிகை ரேகா ஆகியோருக்கு வாழும் லெஜன்ட் விருது வழங்கப்பட்டது.

இந்திய சினிமாத் துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வாழும் லெஜன்ட் விருது வழங்கி வருகின்றன இந்த இரு நிறுவனங்களும். இந்த ஆண்டுக்கான விருதுகள் கமலுக்கும், ரேகாவுக்கும் வழங்கப்பட்டது.

இதற்கான விழா மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது. விருதினை கமலும், ரேகாவும் நேரில் வந்து பெற்றுக் கொண்டனர். சூட், கோட்டில் ஜம்மென்று வந்திருந்தார் கமல். வயதை மறைக்கும் இளமைப் பொலிவுடன் ரேகாவும் புன்னகை பூக்க விருதைப் பெற்றுக் கொண்டார்.

கமல்ஹாசனும், ரேகாவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்திப்பதால் இருவரும் பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், என்னை ஊக்குவிக்க, திரைத் துறையில் மேலும் ஏதாவது சாதனை செய்ய இந்த விருது இன்னும் ஒரு வினையூக்கி என்றார். ரேகாவும் நிகழ்ச்சியில் பேசினார்.

கமல்ஹாசனுக்கு விருதுகள் புதிதல்ல. 3 முறை தேசிய விருதினை வாங்கி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டவர். பலமுறை மாநில அரசின் விருதுகளை அள்ளியவர். 16 முறை பிலிம்பேர் விருதினை வாங்கிக் குவித்தவர், இனிமேல் எனக்கு விருது கொடுக்காதீங்க, இளம் தலைமுறையினருக்குக் கொடுங்க என்று பெருந்தன்மையாக சொல்லியவர்.

மத்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். ஆஸ்கர் மட்டும்தான் கமலுக்கு இன்னும் கை கூடாமல் உள்ளது. ஆனால்,ஆஸ்கர் நமக்கான விருதே அல்ல, எனவே அதை நினைத்து நாம் வருத்தப்படக் கூடாது என்று கமலே கூறி விட்டார். எப்படியாவது அந்த ஆஸ்கரும் கமலிடம் ஒரு நாள் வந்து சேரும் - ஏதாவது ஒரு ரூபத்தில் என்று நம்புவோம்.

நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராக, இயக்குநராக, கதாசிரியராக, பாடலாசிரியராக, பாடகராக பலமுகம் கொண்டு பலாவதாரம் புரிந்து வரும் கமலுக்கு இந்த விருது இன்னும் ஒரு சத்து டானிக்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil