»   »  புதிய மரியாதையை ஏற்படுத்திய டிகாப்ரியோவின் ஆஸ்கர் விருது ஏற்புரை!

புதிய மரியாதையை ஏற்படுத்திய டிகாப்ரியோவின் ஆஸ்கர் விருது ஏற்புரை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சர்வதேச அளவில் சினிமாவுக்கான மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதினை முதல் முறையாக வென்றுள்ளார் லியனார்டோ டிகாப்ரியோ.

இதற்கு முன் 5 முறை அவர் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், விருது வென்றிருப்பது இதுதான் முதல் முறை.

Leonardo Dicaprio's Oscar acceptance speech

ஆனால் விருதினைப் பெற்றுக் கொண்டதும் மற்றவர்களைப் போல மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழவோ, நன்றி மேலீட்டால் மிகையாகப் பேசவோ முயலவில்லை.

தனக்கான பொறுப்பு என்ன... இந்த நேரத்தில் இந்த உலகம் செய்ய வேண்டியது என்ன என்பதைப் பற்றி தீர்க்கமாகப் பேசினார்.

அந்த ஏற்புரையைப் பார்த்து உலகமே லியானர்டோ டிகாப்ரியோவை புதிய மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்துள்ளது.

அவரது பேச்சு:

"நன்றி... அகாடமிக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நம்பமுடியாத நடிப்புத் திறனை அவர்கள் காட்டியிருந்தார்கள்.

அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலனே 'தி ரெவனன்ட்'. முதலில் எனது சகோதரனைப் போன்ற டாம் ஹார்டியை (படத்தின் பிரதான வில்லன்) குறிப்பிட விரும்புகிறேன்.

டாம்... திரையில் உனது அசாத்தியமான ஆளுமையை மிஞ்சுவது, திரைக்கு அப்பால் நீ இனரிட்டுவிடம் பாராட்டும் நட்பே. இந்த இரண்டு வருடங்களில் நீ சினிமா வரலாற்றில் உனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாய். நீ அபாரமான திறமைசாலி. அற்புதமான சினிமா அனுபவத்தைத் தந்த உனக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் லுபெஸ்கிக்கும் நன்றி. ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும், ரீஜென்சி நிறுவனத்துக்கும் நன்றி. எனது மொத்த அணிக்கும் நன்றி.

இந்தத் துறையில் எனது ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்த கேடன் ஜோன்ஸுக்கு நன்றி, சினிமா என்ற கலையைப் பற்றி எனக்கு நிறையக் கற்றுத் தந்த ஸ்கார்சிஸிக்கு நன்றி, இந்தத் துறையில் நான் நிலைத்திருக்க உதவிய ரிக் யோர்னுக்கு நன்றி, எனது பெற்றோருக்கு நன்றி, அவர்கள் இல்லையெனில் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது. எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த இயற்கை உலகுடனான மனிதர்களின் உறவே ரெவனன்ட் திரைப்படம்.

அதிக வெப்பமயமான ஆண்டாக 2015-ல் பதிவான இந்த உலகத்தில், (ரெவனன்ட்) படப்பிடிப்புக்காக, பனியைத் தேடி, உலகின் தெற்கு மூலைக்குச் சென்றோம். காலநிலை மாற்றம் என்பது நிஜம். அது இப்போது நடந்து கொண்டிக்கிறது. மனித இனமே தற்போது எதிர்கொண்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் அது. எந்த நடவடிக்கையையும் தள்ளிப் போடாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்காக உழைக்க வேண்டிய நேரம் இது.

உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக, காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக, அரசியலாலும் பேராசையாலும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

இந்த அற்புதமான விருதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. நாம் நமக்குக் கிடைத்த இந்த உலகை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நான் விருது பெற்ற இன்றைய இரவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவில்லை."

English summary
Oscar Award winner Leonardo Dicaprio used his acceptance speech to warn about the effects of global warming, saying "Let us not take this planet for granted. I do not take this night for granted"

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil