»   »  பெருமையுறுவது நானல்ல; மொழிதான்!- கவிஞர் வைரமுத்து

பெருமையுறுவது நானல்ல; மொழிதான்!- கவிஞர் வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏழாவது முறையாக தேசிய விருது பெறுவதன் மூலம் பெருமையுறுவது நானல்ல, மொழிதான் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

64 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை:

இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன்.

Poet Vairamuthu speaks on his 7th National Awar

அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே.

தர்மதுரை படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, இசையமைத்த யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடித்த விஜய் சேதுபதி - தமன்னா, தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், குரல் கொடுத்த பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதில் நாகரிகம் அடைகிறேன்.

இந்தப் பாடல் தற்கொலைக்கு முயன்றவனைத் தாங்கிப் பிடிக்கும் பாடலாகும்.

தற்கொலை என்பது தேசத்தின் நோயாகப் பெருகிவருகிறது. காதல் தோல்வி - மன அழுத்தம்- அச்சம்- வறுமை என்ற காரணங்களே மனிதர்களைத் தற்கொலைக்கு தள்ளுகின்றன. எந்த ஒரு தோல்வியிலும் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. தோல்வி என்பது அடுத்த வாசலுக்கான கதவு என்று உணர்த்தவேண்டும். அதைத்தான் இந்தப்பாடலை பாடும் நாயகி நாயகனுக்கு நினைவுறுத்துகிறாள்.

"எந்தப் பக்கம் காணும் போதும்
வானம் ஒன்று - நீ
எந்தப் பாதை ஏகும் போதும்
ஊர்கள் உண்டு

ஒரு காதல் தோல்வி காணும் போதும்
காதல் உண்டு - சிறு
கரப்பான் பூச்சி தலைபோனாலும்
வாழ்வதுண்டு

உன் சுவாசப் பையை மாற்று - அதில்
சுத்தக் காற்றை ஏற்று - நீ
இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில்
வாழ்ந்துவிடு"

-என்று பாடுகிறாள்.

பொழுதுபோக்கு மட்டுமே நோக்கமல்ல. தன் முனைப்பும் தன்னெழுச்சியும் தன்னம்பிக்கையும் ஊட்டுவதே கலையின் நோக்கம். இதைச் சொல்லும் படங்களும் பாடல்களும் களிப்பூட்டுவதோடு மக்களுக்குக் கற்பிக்கவும் செய்கின்றன. நல்ல சிந்தனைக்கும் மொழி வளத்துக்கும் இடமளிக்கிற பாடல்கள் எல்லாப் படங்களிலும் இடம் பெறுவது நிகழ்காலக் கலையின் கடமையாகிறது.

இந்த விருது என் எதிர்காலப் பொறுப்பையே அதிகமாக்குகிறது. புதிய பொறுப்போடும் விருப்போடும் என் பயணத்தைத் தொடரத் தமிழ் மக்களின் வாழ்த்துக்களையே வரமாய்க் கேட்கிறேன்," என்றார்.

கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்ற படங்கள்:

ஆண்டு படம்
1986 முதல் மரியாதை
1993 ரோஜா
1995 கருத்தம்மா மற்றும் பவித்ரா
2000 சங்கமம்
2003 கன்னத்தில் முத்தமிட்டால்
2011 தென்மேற்குப் பருவக்காற்று
2017 தர்மதுரை

English summary
7th time National award winner Poet Vairamuithu statement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil