பிரபல நடிகையை இரும்பு ராடால் தாக்கிய கும்பல்.. ஆசிட் வீச்சில் இருந்து தப்பியதாக பரபரப்பு வீடியோ!
மும்பை: இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தினார் என பரபரப்பை கிளப்பிய பாலிவுட் நடிகை பாயல் கோஷை சமீபத்தில் மர்ம கும்பல் ஒன்று ஆக்ரோஷமாக தாக்கி உள்ளனர்.
இரும்பு ராடால் தனது தலையை பதம் பார்க்க அவர்கள் நினைத்த நிலையில், அதனை தடுக்க முயற்சித்தபோது தனது இடது கரத்தில் பலமான அடி விழுந்ததாக அவர் அடிபட்ட கையோடு இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும், தன்னை தாக்க வந்த நபர்களில் ஒருவரின் கையில் ஆசிட் போன்ற ஒரு பொருள் இருந்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார் நடிகை பாயல் கோஷ்.

பாயல் கோஷ்
பிரயாணம், ஊசரவெலி, மிஸ்டர் ராஸ்கல் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் பட்டேல் கி பஞ்சாபி ஷாதி, கொய் ஜானே நா உள்ளிட்ட இந்தி படங்களிலும் நடித்துள்ள நடிகை பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பரபரப்பான வீடியோ பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மர்ம நபர்கள்
சமீபத்தில் மும்பையில் காரில் சென்று கொண்டிருந்த நடிகை பாயல் கோஷை சில மர்ம நபர்கள் சுற்றி வளைத்து தாக்க முற்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிக்க பொதுமக்களின் உதவியை நாட நடிகை பாயல் கோஷ் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இரும்பு ராடால் அடித்தனர்
மர்ம நபர்களில் ஒருவன் இரும்பு ராடு கொண்டு தனது தலையை பதம் பார்க்க நினைத்த நிலையில், எனது கூச்சல் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூட ஆரம்பித்தனர். உடனடியாக அடிக்க ராடை ஓங்கிய நிலையில், என் கையை வைத்து தடுக்க முயன்றதில் வலது கரத்தில் பலத்த அடி விழுந்தது என அடிபட்ட கையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார் நடிகை பாயல் கோஷ்.

ஆசிட் வீச்சு
மேலும், மர்ம நபர்களில் ஒருவன் கையில் பாட்டிலில் ஏதோ ஒரு திராவகம் போன்ற பொருள் இருந்தது. அது ஆசிட்டாக இருக்குமோ என்கிற அச்சமும் எனக்கு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தது பெரிய அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். என் வாழ்வில் இதுவரை இப்படியொரு தாக்குதலை சந்தித்ததில்லை. இனியும் சந்திக்கக் கூடாது என விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

போலீசில் புகார்
மர்ம நபர்கள் குறித்த அடையாளம் தனக்கு தெரியவில்லை என்றாலும், இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப் போவதாக நடிகை பாயல் கோஷ் தனது வீடியோவில் கூறியுள்ளார். மேலும், எதற்காக என்னை தாக்க வந்தனர் என்பதும் இது யாருடைய செயல் என்றும் தெரியவில்லை என்றும் கூறினார்.

பலாத்கார புகார்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தினார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருந்தார் நடிகை பாயல் கோஷ். ஆனால், நடிகை பாயல் கோஷின் புகாரை அனுராக் காஷ்யப் மறுத்து இருந்தார். நடிகை டாப்சி உள்ளிட்ட பிரபலங்கள் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக பேசினர். இந்நிலையில், தற்போது நடிகை பாயல் கோஷ் அடுத்த பரபரப்பை கிளப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











