விசாரணைக்கு ஆஜராகாத ஆர்யான் கான்... காரணம் இது தானா ?
மும்பை : பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் அக்டோபர் 03 ம் தேதி, சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆர்யான் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பலமுறை முயற்சித்தும் ஆர்யானுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டது. 25 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு ஒரு வழியாக ஆர்யானுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட். கிட்டதட்ட 14 கட்டுப்பாடுகளுடன் தான் ஆர்யானுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
ஆர்யான் மீடியாக்களை சந்திக்கக் கூடாது. மற்ற குற்றவாளிகளை சந்திக்க கூடாது என்பது உள்ளிட்ட பல விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்பதாக கூறி வீட்டிலேயே இருந்து வருகிறார் ஆர்யான் கான். மகனுக்கு ஜாமின் கிடைத்து விட்டதால் வழக்கமான பணிகளுக்கு திரும்பி வருகிறார் ஷாருக்கான்.
ஜாமின் கிடைத்தாலும் தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடத்தி வருகின்றனர். என்சிபி.,ஆல் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, போதை பொருள் வழக்கில் விசாரணையை தொடர, குற்றவாளிகள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்களிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
மற்றவர்கள் ஆஜரான நிலையில், ஆர்யான் கான் மட்டும் சம்மனை பொருட்படுத்தாமல், விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது பற்றி விசாரித்த போது, ஆர்யான் கானுக்கு லேசான காய்ச்சல் உள்ளதாம். அவர் விசாரணைக்கு ஆஜராகாததற்கு இது தான் காரணமாம். ஓரிரு நாளில் ஆர்யான் கான் சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 13 ம் தேதி ஆர்யான் கானின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இவரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட பிறகே மீண்டும் ஷுட்டிங்கை துவக்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார். அதுவும் மும்பையில் நடக்கும் ஷுட்டிங்கிலேயே முதலில் கலந்து கொள்ள போகிறாராம். ஆர்யான் இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக வெளியே வந்த பிறகே வெளிநாட்டு ஷுட்டிங்கிற்கு செல்ல போகிறாராம் ஷாருக்கான்.
ஆனால் கோர்ட் விதித்துள்ள விதிகளின்படி, தொடர்ந்து ஆர்யான் கான் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தால் அவரின் ஜாமின் ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











