வசூலில் சாதனை படைத்த 'பூல் புலையா 2'..மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
டெல்லி : கார்த்திக் ஆரியன் நடிப்பில் வெளியான 'பூல் புலையா 2' 260 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கார்த்திக் ஆர்யன், தபு, கியாரா அத்வானி, ராஜ்பால் யாதவ் உட்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான இந்தி படம், 'பூல் புலையா 2' (Bhool Bhulaiyaa 2). அனிஸ் பாஸ்மி இயக்கிய இந்தப் படத்துக்கு மனு ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
டி.சீரிஸ் நிறுவனம் சார்பில் பூஷன் குமார் தயாரித்த இந்தப் படம், மே மாதம் 20ந் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இத்திரைப்படம் ஓடிடியிலும் தோல்வியடையாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மணிசித்திரத்தாலு
மலையாளத்தில் மணிசித்திரத்தாலு, கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலிவுட்டில் அக்ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் 'பூல் புலையா' என்ற பெயரில் இத்திரைப்படம் ரீ மேக் செய்யப்பட்டது. இப்படத்தை மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். மற்ற மொழிகளைப் போலவே பாலிவுட்டிலும் இப்படம் ஹிட்டடித்தது.

'பூல் புலையா 2'
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியான பூல் புலையா இரண்டாவது பாகம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 'பூல் புலையா 2' இந்தியாவில் ரூ. 218.14 கோடி வசூலையும், வெளிநாட்டில் ரூ. 42.61 கோடி வசூலையும், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் ரூ. 260.75 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

McLaren GT கார் பரிசு
'பூல் புலையா 2' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, தயாரிப்பாளர் பூஷன் குமார், நடிகர் கார்த்திக் ஆர்யனுக்கு ஸ்பெஷல் கிஃப்டாக மெக்லேரன் ஜி.டி (McLaren GT) காரை பரிசாக அளித்துள்ளார். புத்தம் புதிய காருடன் தயாரிப்பாளர் பூஷன் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் கார்த்திக் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தார். இதன் மதிப்பு 4.7 கோடி ஆகும்.

கைவசம் உள்ள படங்கள்
நடிகர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' என்ற படம் வெளியானது. இந்த படத்தை பூஷன்குமாரே தயாரித்திருந்தார். முதல் இரண்டு படங்களும் ஹிட்டானதை அடுத்து அவருக்கு இந்த பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மூன்றாவதாக 'ஷேஷ்தா' (Shehzada) என்ற படத்திலும் இணைய உள்ளனர். மேலும் ஷேஜாதா திரைப்படத்தை தொடர்ந்து கேப்டன் இந்தியா, எஃப்'ரெட்டி மற்றும் சஜித் நதியத்வாலாவின் பெயரிடப்படாத படம் ஒன்றிலும் கார்த்திக் ஆர்யன் கமிட்டாகி நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











