நிர்வாண போட்டோஷூட் விவகாரம்..ரன்வீர் சிங்கிற்கு போலீஸ் சம்மன்..சூடு பிடிக்கும் வழக்கு !
மும்பை : நிர்வாண போட்டோஷூட் விவகாரம் தொடர்பாக ரன்வீர்சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.
ரன்வீர் சிங் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து, லூட்டேரா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், சிம்பா, கல்லி பாய், 83 உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜெயேஷ்பாய் ஜோர்தார், சர்க்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மேலும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் நாயகனாக நடிக்க உள்ளார்.

ரன்வீர் சிங்
நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், ரன்வீர் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

பெண்களை புண்படுத்திவிட்டார்
பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.

வழக்குப்பதிவு
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம், ஆனால் நீங்கள் சமூகத்தில் நிர்வாணமாக உலாவ வேண்டும் என்று அர்த்தமல்ல என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் ரன்வீர் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிக்கலில் சிக்கியுள்ளார். ஐபிசி பிரிவுகள் 292, 293, 509 ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

22 ஆம் தேதி நேரில் ஆஜர்
இந்நிலையில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர்சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது. தற்போது ரன்வீர்சிங் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார். அதனால் அவருக்கு இன்னுன் சம்மன் அனுப்பப்பட வில்லை. அவர் மும்பை திரும்பியவுடன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மும்பை காவல்துறை முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











