»   »  சினிமாக்காரன் சாலை 15: சங்கராபரணம் எனும் காவிய தரிசனம்...

சினிமாக்காரன் சாலை 15: சங்கராபரணம் எனும் காவிய தரிசனம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

சரியாய் முப்பத்தைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு நேற்று மீண்டும் ‘சங்கராபரணம்' படம் பார்த்தேன்.

படம் என்றா சொன்னேன்? மன்னியுங்கள் திருத்திக் கொண்டு இனி காவியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்.

'உங்களுக்கென்னய்யா பத்திரிகையாளர் காட்சிகளில் இலவசமாக சொகுசாக படம் பார்க்கிறீர்கள்?' என்று சீண்டும் நண்பர்கள் சிலர் எனக்குண்டு. கடந்த வாரம் எட்டுப் படம், இந்த வாரம் பதினோரு படம் என்று வருஷத்துக்கு சுமார் இருநூறு படங்கள் பார்ப்பதை, 'சொகுசாக' என்று சொல்பவர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்கள், நரகத்திற்குத்தான் போவார்கள்.

ஏனெனில் அந்த இருநூறு படங்களில் எண்பத்தைந்து சதவிகிதப்படங்கள் எங்களை அடித்துத் துவைத்து துவம்சம் பண்ணி கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி அழcவைப்பவை. 'இப்படத்தில் மிருகங்கள் எவையும் துன்புறுத்தப்படவில்லை' என்கிற உத்தரவாத அறிவிப்பு ஏனோ எப்போதும் மனிதர்களாகிய எங்களுக்கில்லை!

அவ்வகையான படங்களைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, பிரிவியூ தியேட்டரின் வாசலில் நிற்கும் இயக்குநர், நட்சத்திரங்களிடமிருந்து தப்பி பின்னங்கால் பிடறியில் பட ஓடும் அவஸ்தையை நீங்கள் என்றாவது அனுபவித்திருப்பீர்களா?' அதனால்தான் கண்டிப்பாக நீங்கள் நரகத்திற்குத்தான் செல்வீர்கள் என்று சொல்கிறேன்.

Cinemakkaran Saalai - 15: Sankarabaranam.. a real epic in cinema

காலம் எப்போதும் அப்படி கருணையற்றே இருப்பதில்லை என்பது போல நேற்று ‘சங்கராபரணம்' என்னும் காவியம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. 80-ல் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுமையும் தெலுங்கிலேயே ரிலீஸாகி திரையிட்ட இடங்களில் எல்லாம் ஓராண்டு காலம் ஓடிய படம் இது என்பது இன்றைய தலைமுறையினருக்கான செய்தி.

'என் வாழ்நாளில் நான் பாடி புண்ணியம் கட்டிக்கொண்ட படங்களின் பட்டியலில் முதன்மையான படம் என்று ‘சங்கராபரணம்' படத்தையே சொல்வேன்' என்பார் எஸ்.பி.பி. தற்போது மீண்டும் அத்தனை பாடல்களையும் எஸ்.பி.பியை பாடவைத்து, தமிழில் டப் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்.

படத்திரையிடலுக்கு முன்பாக...

'படத்தின் நீளத்தைக் கண்டிப்பாக குறைத்திருப்பார்கள்'

‘அப்ப ரசிச்ச படத்தை இப்ப ரசிக்க முடியுமா சார்?'

‘மியூசிக் ட்ரெண்ட் எங்கேயோ போயிருச்சி. கர்நாடக சங்கீதம், அதுவும் டஜனுக்கும் மேல பாட்டு....க்கூம் என்னத்தைச் சொல்ல?'

இப்படி சில ஆலாபனைகள் படம் பார்க்க வந்தவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்தன.

ஆனால் துவங்கிய இரண்டாவது நிமிடமே என்னை சங்கர சாஸ்திரிகளிடம் இழுத்துக் கொண்டு போய் கட்டிப் போட்டார் இயக்குநர் கே.விஸ்வநாத். படம் ஓடிய 2 மணிநேரம் 23 நிமிடங்களும், நான் வாட்ஸ் அப் உலகின் மனிதன் என்ற நினைவு தப்பி, நான் 80 ஆம் ஆண்டு குட்டிப் பையனாய்த்தான் மாறிப் போனேன்.

Cinemakkaran Saalai - 15: Sankarabaranam.. a real epic in cinema

படத்தின் நடுவில் ஒரு கணம் குனிந்து பார்த்தபோது நான் என் ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்தேன். எனது பக்கத்து சீட்களில், பத்து ஆண்டுகளுக்கு முன்பே தவறிப்போன, எனது அம்மாவும் அப்பாவும் படம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த அனுபவம் அலாதியானது அபூர்வமானது. இதை நீங்கள் நம்பவேண்டும் என்றோ புரிந்துகொள்ள வேண்டும் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை.

படத்தின் கதை குறித்து எழுதுவது அவசியம் என்று தோன்றவில்லை. அது ஒரு ஜீவநதியின் ஓட்டம் போலவே இருந்தது என்று மட்டும் சொல்லலாம்.

‘ஆச்சாரமாவது அனுஷ்டானமாவது' என்றபடி தேவதாசிப்பெண்ணான மஞ்சு பார்கவியை அக்ரஹாரத்துக்குள் அழைத்து வந்து சாஸ்திரிகள் சமைத்துப்போடச் சொல்லும்போது, தியேட்டரில் கரகோஷங்கள் உணர்ச்சிகரமாய்க் குவிந்தன. நேற்று படம் பார்க்க வந்திருந்தவர்கள் அனைவருமே எண்பதுகளின் மனிதர்கள். என்னைப்போலவே எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாகவே படம் பார்த்துக் கொண்டதை அப்பட்டமாய் உணரமுடிந்தது.

நானெல்லாம் கல்நெஞ்சுக்காரன். ஆனால் நேற்று அடக்கvமாட்டாமல் பொங்கிவந்த கண்ணீரைத் துடைக்க கர்சீப்பை எடுத்தவன் படம் முடியும் வரை பாக்கெட்டில் வைக்கவே முடியவில்லை.

சாஸ்திரிகளுக்கும் மஞ்சு பார்கவிக்குமான உறவுதான் படமென்றாலும், கதையின் உயிர் மஞ்சு பார்கவியின் வாரிசான துளசிப் பையனிடம்தான் இருந்தது. ஒரு ஜமீன்தாரின் வன்புணர்ச்சிக்குப் பிறந்த அந்தக் குழந்தையை, அது பிறந்த விதத்தை ஒரே காட்சியில் மறக்கடித்து விட்டு, தேவதூதன் போல் அவனைச் சித்திரிக்க முடிந்த வித்தையே இந்தப்படத்தை காவியமாக்கியது என்று சொல்வேன்.

Cinemakkaran Saalai - 15: Sankarabaranam.. a real epic in cinema

சோமாயஜுலுவும், மஞ்சு பார்கவியும், ராஜலக்‌ஷுமியும் குறிப்பாக பொடியனாக நடித்த துளசியும் என்னமாய் வாழ்ந்திருக்கிறார்கள். பொடியனாக படம் பார்த்தபோது இந்த உணர்வு தோன்றவில்லை. நேற்று பார்க்கையில் காலத்தை ஒரு 35 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துப்போய், பேரழகி மஞ்சுபார்கவியின் காலடியில் விழுந்துகிடக்கத் தோன்றுகிறது.

கே.வி.மகா......தேவன்.

இயக்குநர் கே,விஸ்வநாத்தை மறுபடியும் மனசுக்குள் வணங்கிவிட்டு படம் முடிந்ததும், இதனை தமிழில் வெளியிடும் திரு.ரத்னம் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினேன். டெல்லியில், ஜனாதிபதி விருதுக்கு அனுப்பட்டு, மறந்துபோன ஒரே ஒரு பிரிண்டை தேடிக் கண்டுபிடித்து, 'சங்கராபரணம்' எனும் பொக்கிஷத்தை மீண்டும் கண்டெடுத்த அனுபவத்தைச் சொன்னார்.

இன்றைய காலகட்டத்தில் தியேட்டரில் ஜனங்கள் குவிந்து வசூல் ஈட்டி லாபம் கொட்டப்போகும் எதிர்ப்பார்ப்பில் அவர் இப்படத்தை வெளியிடவில்லை என்பது அவரிடம் பேசியபோது தெரிந்தது.

Cinemakkaran Saalai - 15: Sankarabaranam.. a real epic in cinema

‘நீங்க எவ்வளவு செலவு பண்ணி இதை ரிலீஸ் பண்றீங்கன்னு தெரியாது. அந்தப் பணம் திரும்ப உங்களுக்கு வராமலே போகலாம். ஆனா என்னைப் போல சில ஆயிரம் பேர்களாவது உங்கள இருந்த இடத்துலருந்தே மனசார வாழ்த்துவாங்க சார்' என்றேன்.

பதிலுக்குப் புன்னகைத்தார். ‘அது போதும் சார். வேறென்ன வேணும்?' என்று அவர் சொன்னதாக அந்த புன்னகையை எடுத்துக்கொண்டேன்.

(தொடர்வேன்...)

English summary
Muthuramalaingan shares his experience of watching Sankarabaranam after the gap of 35 years in Cinemakkaran Saalai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil