»   »  சினிமாக்காரன் சாலை-2 : 'படம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டு... ஆனாலும் போச்சி துட்டு!'

சினிமாக்காரன் சாலை-2 : 'படம் ஹிட்டு ஹிட்டு ஹிட்டு... ஆனாலும் போச்சி துட்டு!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

'மேனேஜர் சார். பணத்தைப்பத்தி கவலைப்படாதீங்க. ரியல் எஸ்டேட் பிசினஸ்ல நமக்கு துட்டு அருவியா கொட்டுது. ஆனா ஊருக்குள்ள நடந்து போனா நாலுபயலுக நமக்கு வணக்கம் வைக்கிற ‘கெத்து' இன்னும் கிடைக்கல. அதை சம்பாதிக்கதான் படம் எடுக்க வந்துருக்கேன். நம்ம படம் ஸ்டார்ட்டிங்ல இருந்து ஃபினிஷிங் வரைக்கும் எனக்கு பக்கா பிளான் வேணும். வர்ற ஒண்ணாம் தேதி பூஜை போட்டுரலாம். மீதி ப்ளானைச் சொல்லுங்க?'

‘பூஜைன்னக்கே சாங் ரெகார்டிங் ஆரம்பிச்சிட்டு, பிப்ரவரி பத்தாம் தேதி ஷூட்டிங் சார். ஒரே ஷெட்யூல் 50 நாள். வந்து எடிட்டிங், டப்பிங், ரீரெகார்டிங் மிக்ஸிங்ன்னு,தியேட்டர் ஃபிக்ஸிங்ன்னு ஒரு மாசம். மே1ம் தேதி ரிலீஸ் பண்றோம். மே 2-ம் தேதி சக்சஸ் மீட் வைக்கிறோம்'.

‘அதென்னய்யா இன்னும் படத்தையே ஆரம்பிக்கலை. டைரக்டர் புதுசு. அவரு முழி ஞானமுழியா திருட்டுமுழியான்னு தெரியலை. படம் பத்துநாள் ஓடனும். அசலாவது தேறனும். அதுக்குள்ள, அதுவும் படம் ரிலீஸான மறுநாளே சக்சஸ் மீட்டுக்கெல்லாம் ஐடியா சொல்ற?.

‘இப்ப நம்ம ஃபீல்டுல லேட்டஸ்ட் ட்ரெண்ட் இதுதான் சார். ‘வலிக்காத மாதிரியே நடிக்கிறதும்பாங்களே அது மாதிரி. படம் பரிதாபமா புட்டுக்கிட்டாலும் ‘உள்ள அழுகுறேன். வெளிய சிரிக்கிறேன்' பாடிக்கிட்டே சக்சஸ் மீட் வச்சிருவாங்க. நீங்க மறுநாள் வைக்கிறதுக்கு யோசிக்கிறீங்க. எவ்வளவு பேர் ரிலீஸன்னைக்கே வச்சிருக்காய்ங்கன்னு லிஸ்ட் தரட்டுமா? கூச்சப்பட்டா குழந்தை பொறக்குமா? வெக்கப்பட்டா வெளம்பரம் கிடைக்குமா?'

தயாரிப்பாளர் தஞ்சை தர்ம ராஜாவுக்கும், புரடக்‌ஷன் மேனேஜர் 'உள்குத்து' பொன்னுச்சாமிக்கும் இடையே நடந்த மேற்படி உரையாடலை, தமிழ்சினிமாவின் தற்போதைய போக்கை கூர்ந்து கவனிப்பவர்கள், கற்பனை என்று சொல்ல மாட்டார்கள். கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் படம் துவங்கும் சமயத்திலேயே நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக ‘சக்சஸ் மீட்டும்' சர்வசாதாரணமாக இடம்பெற்று விடுகிறது. படம் வரும் பின்னே சக்சஸ் மீட் வரும் முன்னே!

Cinemakkaran Saalai - Episode 2

இன்னும் சொல்லப் போனால் சமீப தினங்களில் பூஜைகள் கூட குறைந்துவிட்டன. யாருக்கும் சொல்லாமல் செய்யாமல் படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டு, ஆடியோ ரிலீஸை ஒட்டித்தான் ‘ஆஜர் ஐயா' என்கிறார்கள். ஆனால் முக்கால்வாசிப்பேர் சக்சஸ் மீட் வைக்கத் தவறுவதில்லை.

ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் நடிகர் நடிகைகள், பத்திரிகையாளர்கள், படத்தில் பணியாற்றியவர்கள், மற்றும் சில நண்பர்கள் என்று பல லட்சங்கள் செலவாகும் இந்த ‘ச்ச்சக்சஸ்ஸு மீட்டுக்கு. சிலசமயங்களில் இவை குடிவெறி பார்ட்டிகளாகவும் நிகழ்வதுண்டு.

'கரகாட்டக்காரன்' படத்தில் தன்னை ‘தில்லானா மோகனாம்பாள்' சிவாஜி மாதிரியும் கோவை சரளாவை பத்மினி மாதிரியும் இருப்பதாக சொல்லச்சொல்லி ஆள் செட்டப் பண்ணி, கடைசியில் கவுண்டரிடம் மாட்டி ‘ அண்ணே ஒரு வெளம்பரம்' என்று சொல்லி செந்தில் தலையைச் சொறிவாரே அந்தக்காட்சிதான் எனக்கு ஞாபகம் வரும் இந்த சக்சஸ் மீட்டுகளைப் பார்க்கும்போது.

‘மன்னார்குடியில ஹவுஸ்ஃபுல்னு சொன்னாக.... மதுரையில மாட்னி ஷோவை மூணு ஷோவா மாத்தியிருக்காக...கோயமுத்தூர்ல கூட்டம் குவியுதுன்னாக...' என்று அந்த சக்சஸ் மீட்டில் விடப்படும் ‘ஹிட்டு...ஹிட்டு...ஹிட்டு...' டயலாக்குகளெல்லாம் மேற்படி கோவை சரளா தனக்கு எத்தனை ஊரில் மாப்பிள்ளைகள் கியூவில் நிற்கிறார்கள் என்று ரீல் விட்டாரோ 'தட் ஷேம் ஸ்டோரி'தான்.

Cinemakkaran Saalai - Episode 2

‘யோவ் படம் எடுக்க வர்றதே சொந்த ஊர்ல பெருமை பீத்திக்கத்தான். என் காசுல சக்சஸ் மீட் வைக்கிறேன்... இல்ல ஃப்ளாப் மீட் கூட வச்சிக்கிறேன். வந்துட்டாரு கருத்துச் சொல்ல? என்று தோன்றினால்... நீங்கள் சொல்வதும் சரிதான் என்று பாதம் பணிந்து ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் குட்டியாய் ஒரே ஒரு யோசனை மட்டும் சொல்கிறேன். விளம்பரத்துக்காக மேலும் மேலும் செலவழிப்பது உங்கள் உரிமைதான்.

ஒரு தட்டு உணவு ஆயிரத்துச் சொச்ச ரூபாய் என்று செலவாகும் ஸ்டார் ஹோட்டல்களைத் தவிர்த்துவிட்டு, அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து இதே சக்சஸ் மீட்டுகளை கொண்டாடுங்களேன். படம் தோற்றிருந்தாலும் இந்த ஒரு செயலுக்காகவே மனதில் மாபெரும் வெற்றிக் கொந்தளிப்பு ஏற்படும்!

(தொடர்வேன்...)

English summary
Muthuramalingam analysis the new trend of success meets in Kollywood in his Cinemakkaran Saalai series.
Please Wait while comments are loading...