»   »  சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

சினிமாக்காரன் சாலை-3: நேனு... நீனு... கடைசியில தாணு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

Muthuramalingan

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு 48 மணி நேரங்கள் ஆனபிறகுதான் இந்தக் கட்டுரையை எழுதவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு காத்திருந்தேன்.

அனைத்து தினசரிகள், முன்னணி இணையங்கள் தொடங்கி குசும்பர்களின் கிசுகிசு.காம்கள் வரை அனைத்திலும் தோண்டித் துருவிப் பார்த்துவிட்டேன். தேர்தல் தொடர்பாக கைகலப்புகளோ, கோர்ட்டில் மறுதேர்தல் கேட்டு மல்லுக்கட்டுகளோ இல்லை. இதற்கு மேல் யாரும் 'கிளம்பி' வரமாட்டார்கள் என்று திடமாக நம்புவோம்.

காரணம் அடிதடிகளில் ஈடுபட்டவர்களும் கோர்ட் கேஸ் என்று தடை வாங்கியவர்களும் ஒன்று, அளவுக்கு மீறி டயர்டாகி விட்டார்கள். அடுத்தது, அதில் முக்கால்வாசிப்பேர் பதவிக்கு வந்துவிட்டார்கள்!

இந்த அடிதடிகள் எப்போது துவங்கின என்று சின்னதாக ஒரு ஃப்ளாஷ்பேக் பார்ப்போம்.

2011 மே திமுக ஆட்சி அஸ்தமனமாகி மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது, அப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவராக 'அமரர்' ராமநாராயணன் இருந்தார். பெரும் பதவியில் இருந்தாலும் அவரளவுக்கு ஒரு எளிமையான மனிதரை பார்ப்பது அரிது. யாரும் தங்கள் பிரச்சினைகள் குறித்துப் பேச, ஒரே ஒரு போன் காலில் அவரை சந்தித்துவிட முடியும். அரசியலில் திமுக சார்புடயவராக இருந்தாலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக அரசியல் சார்பற்றே நடந்துகொண்டார்.

Muthuramalingan's Cinemakkaran Saalai -3

அதிமுக ஆட்சியைப் பிடித்தபோது, அவரது தலைவர் பதவிக்காலம் முடிய மேலும் ஒரு வருடம் இருந்தது. எனினும் தான் தலைமைப் பதவியில் இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய உதவிகள் சரியாக வந்து சேராது என்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து உடனே தேர்தல் வைப்பது சரிப்படாது என்ற முடிவில், அதிமுக

ஆதரவாளர் என்று கருதப்பட்ட எஸ்.ஏ. சந்திரசேகரன் தற்காலிக தலைவராக்கப்பட, அன்று யூனியனுக்குள் சனியன் புகுந்தது. 'எஸ்.ஏ. சி சங்கத்துக்காக எதையும் செய்ய மாட்டார். அம்மாவின் உண்மையான விசுவாசி நான்தான்' என்று கே. ஆர் கள்ளாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். சுமார் ஆறுமாத காலம் நல்ல நல்ல கெட்ட வார்த்தைகளில் சண்டை போட்டு ஒரு தேர்தல் நடத்தினார்கள். அந்தத் தேர்தலில் எஸ்.ஏ.சியிடம் 13 ஓட்டுக்களில் தோற்றுப்போன கே. ஆர் மீண்டும் போங்காட்டம் ஆட ஆரம்பிக்க, கவுன்சில் தெருச் சண்டை நடக்கும் இடமாக ஆக ஆரம்பித்தது. இவர்களது சண்டையானது குழாயடிச் சண்டைகளுக்கு கொஞ்சமும் குறைச்சல் இல்லாமல் இருந்தது.

Muthuramalingan's Cinemakkaran Saalai -3

விதவிதமாக, வெரைட்டியாக அடித்துக் கொண்டார்கள். காலையில் கேயார் அணியில் இருந்து தாணுவிடம் சண்டை போட்டவர், மதிய லஞ்சை எஸ்.ஏ.சியிடம் சாப்பிட்டுவிட்டு, இரவு டின்னருக்கு மீண்டும் தாணுவிடமே தஞ்சமடைந்து கேயாரைக் கன்னாபின்னாவென்று கேள்விகள் கேட்ட அந்தர்பல்டிகள் அடிக்கடி அரங்கேறின. நேனு, நீனு கடைசியா தாணு என்று ஆட்டங்கள் நடந்தன.

அடுத்து வரிசையாக மறுதேர்தல்களும் நம்பிக்கை இல்லாத் தீர்மானங்களுமாக கவுன்சில் அல்லுசில் ஆகி கடந்த ஞாயிறன்றுதான் 'ஐயாம் நவ் நார்மல்' என்று ஆகியிருக்கிறது.

நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் நடந்த அந்தத் தேர்தலில் சின்னப்புள்ளத்தனமான பஞ்சாயத்துக்கள் ஏதுமின்றி பேல்லட் பேப்பரில் ஓட்டுப்போட்டு வந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

Muthuramalingan's Cinemakkaran Saalai -3

முன்னர் நடந்த பல பஞ்சாயத்துக்களின் காரணகர்த்தா தாணுவையே சிலபல உள்நோக்குகளுடன் ‘ஒரு வாட்டி அவரும் என்னதான் பண்றாருன்னு விட்டுக் குடுத்து பாப்பமேப்பா' என்ற எண்ணத்தில் தலைவராக்கி இருக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற சில முக்கிய தலை'களுக்கும் இது பொருந்தும்.

ஏனெனில் கடந்த நான்கு வருடங்களாக நடந்த வெட்டுக் குத்துக்களால் தயாரிப்பாளர் சங்கம் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கிறது. இனி ஒரு மறுதேர்தலோ, நம்பிக்கையில்லா தீர்மானமோ வந்தால் கவுன்சிலை தூக்கிக்கொண்டு போய் கண்ணம்மா பேட்டையில் அடக்கம் பண்ணவேண்டிய நிலை.

2008- திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட சிறுபட்ஜெட் படங்களுக்கான மானியம் கடந்த ஏழு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

FROM ADDRESS.....TO ADDRESS இரண்டுமே இல்லாத அனாதைக் கடிதம் போல, சுமார் இரண்டாயிரம் உறுப்பினர்கள் இருக்கும் சங்கத்தின் பிரச்சினைகள் குறித்து யார் யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாத நிலை மேற்படி சிலவருடங்களாகவே நீடித்து வருகிறது.

இதனாலேயே ஃபிலிம் தின்று படம் போட்ட ஏ.வி.எம், சூப்பர்குட், சிவாஜி பிலிம்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கி நின்று திரையுலகில் நடப்பனவற்றை சினிமா பார்ப்பதுபோல் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.

தேங்கிக் கிடக்கும் படங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்க, விவரமில்லாமல் அல்லது தக்க வழிகாட்டுதல் இன்றி படமெடுக்க வந்தவர்களின் எண்ணிக்கை ஒரிஜினல் பாம்புகளின் படையெடுப்பு போல் ஆனது.
பதில்களற்ற கேள்விகள் கவுன்சில் முழுக்க, ஐந்து வருடங்களாக பெருக்கப்படாத குப்பைகள் போல் குவிந்து கிடக்கின்றன.

என்ன செய்யப்போகிறார்கள் தாணுவும் அவரது சகாக்களும் என்று அறிந்துகொள்ள புதிய அணியின் செயற்குழு உறுப்பினரும், கடந்த ஏழு ஆண்டுகாலமும் தொடர்ந்து செயற்குழு உறுப்பினராய் இருந்து வருபவருமான தயாரிப்பாளர் விஜயமுரளி அவர்களைச் சந்தித்தேன்.

பொதுவாக பேசிவிட்டு ‘புதுப்படம் எடுக்கவரும் தயாரிப்பாளர்கள் குறித்து ஒரு கதை சொன்னார் பாருங்கள்.. ‘அப்படியே நான் ஷாக்காயிட்டேன்....'


(இதை மட்டும் நாளையே தொடர்வேன்)

English summary
The third episode of Muthuramalingan's Cinemakkaran Saalai discusses about the clashes and election results of Tamil film producer council.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil