»   »  தாரை தப்பட்டை ஒலிக்க கதகளி ஆடி கெத்து காட்டிய ரஜினிமுருகன்கள்!

தாரை தப்பட்டை ஒலிக்க கதகளி ஆடி கெத்து காட்டிய ரஜினிமுருகன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-முத்துராமலிங்கன்

Select City
Buy Rajini Murugan (U) Tickets

Muthuramalinganஇப்போதெல்லாம் குறுக்கு வழிகளைக் கையாள்வது அனைவருக்குமே பிடித்தமானதாயிருக்கிறது. குறுக்கு வழியில் போய் என்னென்னவெல்லாமோ ஆக ஆசைப்படுகிறோம். ஆனால் ஒருநாள் ஒரு பொழுதாவது மெண்டல் ஆக ஆசைப்பட்டிருக்கிறோமா? நீங்கள் பட்டீர்களோ இல்லையோ, நான் பட்டேன். அதுவும் பொங்கல் தினத்தன்று.


யெஸ். பொங்கலன்று காலை 9.30 மணிக்குத் துவங்கி இரவு 9.30 வரை அன்றைய தினம் ரிலீஸான நான்கு படங்களையும் தொடர்ச்சியாக கண்டு கழித்தேன்.


தஞ்சையில் வரலட்சுமியையும், மதுரையில் கீர்த்தி சுரேஷையும், குமுளியில் எமி ஜாக்‌ஷனையும், சென்னை மற்றும் கடலூரில் என் செல்லம் கேத்ரினையும் கண்டு கிளம்பி, சுத்தமாய் குழம்பி, வழியெங்கும் புலம்பி வீடு போய்ச்சேர்ந்தேன்.


யாம் பெற்ற இவ்வையகம் பெறவேண்டாமா? எனவே ஒரு நண்பர் தந்த யோசனையை ஒட்டி, இந்த நான்கு படங்களையும் கலந்துகட்டி ஒரே படம் ஆக்கி, விமர்சனம் எழுதலாமா என்று ஒரு விபரீத ஆசை வந்தது. எழுதத் துவங்கிய பிறகுதான் அது வெறும் விபரீதமல்ல அதிபயங்கர விபரீதம் என்பது புரிந்தது.


நியாயமாக இப்பதிவுக்கு 'அனுபவி ராசா அனுபவி' என்றுதான் தலைப்பு வைத்திருக்கவேண்டும். காலக்கொடுமையால் மேற்படியாக மாறிவிட்டது. சரி கதைக்குப் போவோமா?


மொத்தப்படத்தின் நீஈஈஈஈளம் 8 மணி நேரம் மற்றும் 55 நிமிடங்கள்.


Pongal Movies in Muthuramalingan's view

மதுரையைச் சொந்த ஊராகக் கொண்ட ரஜினி முருகனும், கடலூரை சொந்த ஊராகக் கொண்டு, எல்லாப்படங்களிலும் போல் ஊருக்குள் எண்ட்ரி தரக் காத்திருக்கும் விஷாலும், குமுளியில் நூலகத்தில் பணிபுரியும் உதயநிதி ஸ்டாலினும் சின்ன வயசில் ஒன்றாகப் படித்தவர்கள். இதில் சிவகார்த்திகேயன் டீச்சர்களிடம் ஓவர் அழிச்சாட்டியம் செய்ததால் அஞ்சாம் கிளாஸை ஆறுமுறை படித்து லோகிளாஸிலேயே மாட்டிக்கொண்டவர். இவர்களுக்கு அதே சின்ன வயசிலிருந்தே தஞ்சை ஏரியா கரகாட்டம் என்றால் உசிரு.


Pongal Movies in Muthuramalingan's view

சமீபகாலத்தில் தஞ்சையில் ஃபேமசான கரகாட்டக்குழு என்றால் அது சசிகுமார், வரலட்சுமி வகையறாதான் என்கிற தகவலைத் திரட்டி வைத்து அவர்களை அழைக்கலாம் என்று முடிவு செய்கிறபோது ஆளுக்கு ஒரு பிரச்சினை அவரவர் ஊரில் கிளம்புகிறது.


Pongal Movies in Muthuramalingan's view

ரஜினி முருகன் தான் டாவடிக்கும் கீர்த்தி சுரேஷை அடைவதற்கு இருவரது அப்பாக்களின் பத்துப்பைசா பெறாத பழைய பகை குறுக்கே நிற்கிறது. தாத்தா ராஜ்கிரண் பாசத்தால் நெஞ்சை நக்கிக்கொண்டிருக்கும்போதே, சமுத்திரக்கனி ஒரு பக்கம் நின்றுகொண்டு வாடா வாடா என்று வாண்டட் ஆக வம்பிழுக்கிறார்.
சரி இந்த சிக்கலைத்தீர்க்க, சின்ன வயசுத்தோழன் விஷாலுக்கு போன் போட்டு ஐடியா கேக்கலாம் என்று பார்த்தால் `மச்சான் நீ கேளேன். என் பிரச்சினையை நீயாவது கேளேன். எல்லாப் படத்துலயும் டைரக்டருங்க எனக்கு மட்டும் ஏண்டா ஏழெட்டு வில்லன்களை வைக்குறாங்க. இருடா கடலூருக்கு எண்ட்ரி குடுத்துட்டு உன் பிரச்சினைக்கு வர்றேன்`` என்கிறார்.


Pongal Movies in Muthuramalingan's view

இந்த இக்கட்டான நேரத்தில், கடலூர் மீனவர் சங்கத் தலைவர் தம்பாவை யாரோ `போட்டுவிட` கொலைப்பழி விஷால் மேல் விழுகிறது. "அந்தக் கொலையை நான் செய்யலைடா மச்சான். ஆனால் தேவையில்லாம போலீஸ் துரத்துறாங்க. உங்க அப்பா சத்யராஜ் கிட்ட சொல்லி என்னைக் காப்பாத்த முடியுமா உதயநிதி", என்று விஷால் போன் போட, "அடேய் இங்க குமுளியில ஒருத்தன் நம்ம தலைமை விஞ்ஞானி அப்துல் கமாலைப் 'போட' பிளான் பண்ணியிருக்கான். அவனோட சதிய முறியடிச்சி கெத்தான ஹீரோக்கள் பட்டியல்ல சேர ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். வைடா போனை அப்புறம் பேசுறேன்" என்று கட் பண்ணினால் எதிரே `பீட்டா` புகழ் எமி ஜாக்‌ஷன் குளித்து தலை துவட்டாமல் ஒரு கன்னுக்குட்டி மாதிரி வந்து நிற்கிறார்.


Pongal Movies in Muthuramalingan's view

எமியுடனான காதலுக்கு கதையில் எந்த எதிர்ப்பும் இல்லாததால் காதலில் கரையேற முடியாமல் தவிக்கும் நண்பன் ரஜினிமுருகன் மற்றும் கீர்த்தியின் ஞாபகம் உதயநிதிக்கு வந்து போகிறது.


உடனே சிவகார்த்திகேயனுக்கு போனைப்போட்டு "மச்சான் கிளைமாக்ஸ்ல வில்லனைக் குறிவச்சுக்கிட்டிருக்கேன். ஆமா தஞ்சாவூர் கரகாட்டக்காரி வரலட்சுமியை யாரோ ஊர் பேர் தெரியாதவனுக்கு சசிக்குமார் கட்டிக்குடுத்து அல்லல் பட்டுக்கிட்டிருக்கானாமில்ல கேள்விப்பட்டியா?" என்று கேட்க, "அடேய் அந்த வில்லன் சுரேஷோட குரவளையைக் கடிச்சித் துப்பி வரலட்சுமி குழந்தையோட சசிக்குமார் நடந்து போயிக்கிட்டிருக்காப்ல. நீ கீர்த்தியை கரெக்ட் பண்ற வேலையில கவனமா இருடா," என்று போனைத் துண்டிக்கிறார்.


கட் பண்ணி கடலூருக்கு வந்தால், கேத்ரினோடு துணிக்கடையில் திருமணத்துக்கு துணி எடுக்கவந்திருக்கும் விஷாலுக்கு கடலூர் இன்ஸ்பெக்டரிடமிருந்து போன் வருகிறது. கேத்ரினிடம் பொய்சொல்லி விட்டு கடலூர் கிளம்பும் விஷால் தாரை தப்பட்டை கிழிய வில்லன்களைப் பந்தாடி முடிக்க, சரியாய் அதே நேரத்தில் உதயநிதியின் துப்பாக்கி விஞ்ஞானி அப்துல் கமாலைக் கொல்ல நெருங்கிய விக்ராந்தை சிதறிடிக்கிறது.


சர்வம் சுபம்.


இசையில் என்றும் போல் ராஜா முதலிடம் வகிக்க, 'இதுவும் இசையா?' என்று கதிகலங்க வைக்கிறார் கதகளி பண்ணிய ஹிப்ஹாப் தமிழா. 'ரஜினி முருகன்' இமானுக்கோ எப்போதுமே 'இறைவனிடம் கையேந்துங்கள்' ஃபார்மேட்தான். `அவன் டியூன் இல்லையென்று சொல்லுவதில்லை.


சசிக்குமார் நடிப்பில் ரொம்ப சுமார். நால்வரில் சிவகார்த்திகேயன் டாப்பர் என்றால் வழக்கம் போல் உதயநிதிதான் Pauper.


ஒளிப்பதிவில் சுகுமார் ஸ்கோர் பண்ண, செழியனும், பாலசுப்பிரமணியெமும் நாங்க மட்டும் சளைத்தவர்களா? என்கிறார்கள்.


இயக்குநர்களை இப்படி வரிசையில் நிறுத்தலாம். பொன்ராம், சுசீந்திரன் என்கிற பாண்டிராஜ், பாலா கடைசியாக திருக்குமரன்.


நாயகிகளைப் பொறுத்தவரை செம கலக்கு கலக்கியவர் நம்ம வரலட்சுமி. ஆனால் இடைவேளை சமயத்தில் சுரேஷ் மாதிரி எவனாவது பொண்ணு கேட்டுவருவான். கண்டிப்பாக பாலா அவனுக்கே கட்டிவைத்து விடுவார் என்பதால் கீர்த்தி சுரேஷுக்கும், கேத்ரினுக்கும் தலா ஒரு காதல் கடிதம் எழுதி வைத்திருக்கிறேன். அதை எமி ஜாக்‌ஷன் மூலமாக கொடுத்தனுப்புவதாக முடிவு.


'என்னதான் ஆச்சி... இந்த முத்துராமலிங்கனுக்கு' என்று சஞ்சலப்படுபவர்கள் மீண்டும் முதல் பாராவுக்குப் போகலாம். அல்லது ஒரே நாளில் என்னைப்போல் தொடர்ச்சியாக நாலு படங்கள் பார்த்தபிறகும் 'எப்படி இருக்க முடிகிறது இப்படி?' என்று விஷப்பரிட்சை எழுதிப்பார்க்கலாம்!


-தொடர்வேன்English summary
Film critic Muthuramalingan's special review on Pongal releases Tharai Thappattai, Gethu, Kadhakali and Rajinimurugan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X