»   »  படியாத பூமிகா

படியாத பூமிகா

Subscribe to Oneindia Tamil

தமிழில் மார்க்கெட் சுத்தமாகி விட்டதால், இந்தியிலும், தெலுங்கிலும் உலா வந்து கொண்டுள்ள பூமிகாவை ஒத்தப் பாட்டுக்கு ஆட வைக்க முயன்று அணுகிய பலரும் அவர் கேட்கும் பெத்த சம்பளத்தால் பின் வாங்கி வேறு நடிகைகள் பக்கம் பார்வையைத் திருப்பி வருகின்றனராம்.

ரோஜாக் கூட்டம், சில்லுன்னு ஒரு காதல் என சில ஜிலீர் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை குளிர்வித்தவர் பூமிகா. பூவினும் மெல்லிய தேகம், புயலையும் மீறும் காதல் பார்வை, வீணையையும் விஞ்சும் குரல் நாதம் என ரோஜாக் கூட்டத்திலும், சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் பூமிகா.

இடையில் விஜய்யுடன் இணைந்து நடித்த பத்ரியில் அவரது பவித்ரமான காதலை வெளிப்படுத்தும் பாந்தமான நடிப்பு நல்ல நடிகை பூமிகா என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது.

தமிழில் இப்படி அன்ன நடை போட்டு வந்த பூமிகா, இந்தியிலும், தெலுங்கிலும் கிளாமர் கோதாவில் குதித்தார். குறிப்பாக இந்தியில் பூமிகா சாவ்லா என்கிற தனது ஒரிஜினல் பெயரில் ஒய்யாரமாக களம் கண்ட பூமிகா, அங்கு கிளாமரில் பட்டையைக் கிளப்பினார்.

அதைப் பார்த்த கோலிவுட்டார், அடடா, குத்துப் பாட்டுக்கு தோதான உடல் வாகு பூமிகாவுக்கு இருக்கப்பா என்று புளகாங்கிதமடைந்து, ஆட வர்ரீங்களா என்று அணுகியுள்ளனர். நே இஷ்யூஸ் என்று கூறிய பூமிகா தனது சம்பளத்தைக் கூறவே அரண்டு போனார்களாம் கோலிவுட் தயாரிப்பாளர்கள்.

ஒத்தப் பாட்டுக்கு ஆட 9 லட்சம் கேட்கிறாராம் பூமிகா. அதுதவிர வந்து போகும் செலவு, கேரவன் வசதி இத்யாதி, இத்யாதி என அவர் பட்டியலை நீட்டவே, ஒத்தப் பாட்டுக்கு இம்புட்டா என்று மலைத்துப் போன அவர்கள் திரும்பி வந்து விட்டார்களாம்.

மொத்தப் படத்துக்கு ஒரு நாயகிக்கு கொடுக்கும் தொகையை ஒத்தப் பாட்டுக்கு பூமிகா கேட்பது நியாயமா வாத்யாரே என்று தங்களுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார்களாம், அணுகி தோல்வி அடைந்த தயாரிப்பாளர்கள்.

ஆனால் இதுகுறித்துக் கவலைப்படாமல் இப்போது தெலுங்கில் பின்னி எடுத்து வருகிறாராம் பூமிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil