»   »  மணிரத்னத்துடன் இணைகிறாரா ரஜினி?

மணிரத்னத்துடன் இணைகிறாரா ரஜினி?

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை மணிரத்னம் இயக்கக் கூடும் என செய்தி பரவியுள்ளது. ஆனால் இது உண்மையில்லை என்று மணிரத்தினத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, மிகப் பெரும் வசூலை அள்ளிய படமாக ரஜினியின் சிவாஜி சமீபத்தில் சாதனை படைத்தது.

இதையடுத்து ரஜினி நடிக்கப் போகும் அடுத்தப் படத்தை இயக்கப் போவது யார், தயாரிக்கப் போவது யார், அவரது அடுத்த ஜோடி யார் என்ற பேச்சுக்கள் சிவாஜி படம் ரிலீஸாவதற்கு முன்பே கிளம்பத் தொடங்கியது.

கே.எஸ்.ரவிக்குமார்தான் அடுத்த படத்தை இயக்குவார், கே.பாலச்சந்தர், பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் இணைந்து தயாரிப்பார்கள் என கடைசியாக கிளம்பிய வதந்தி கூறியது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மணிரத்னத்துடன் ரஜினி இணையவுள்ளதாக புதுச் செய்தி வெளியானது.

மணிரத்னத்தை அவரது அலுவலகத்திற்குப் போய் ரஜினி சந்தித்ததாகவும், இருவரும் இணைந்து அடுத்த படத்தைக் கொடுக்கப் போவதாகவும் செய்திகள் கிளம்பின. இதனால் திரையுலகில் பரபரப்பு எழுந்தது. உண்மையிலேயே ரஜினியும், மணியும் சந்தித்தார்களா, பேசினார்களா, அடுத்த படத்தில் இணைகிறார்களா என்பதை அறிய களத்தில் இறங்கினோம்.

மணிரத்னம் தரப்பில் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் மணிரத்னத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் முருகனை தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டபோது, இது 100 சதவீதம் வடி கட்டிய பொய் செய்தி. இதில் உண்மை இல்லை. ரஜினி சாரும், மணி ரத்னம் சாரும் சந்திக்கவே இல்லை. எனவே இருவரும் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

யாருக்குத் தெரியும்? ரஜினி நினைத்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil