»   »  ஹரிக்கு இது போதாத காலம்

ஹரிக்கு இது போதாத காலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவில், அருள் பட தோல்விகளால் கோடம்பாக்கத்தில் இயக்குனர் ஹரியின் மவுசு வெகுவாகவே குறைந்துவிட்டது.

இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரானார் ஹரி. பிரஷாந்தை வைத்து இவர் இயக்கிய படமான தமிழ் சுமாரான வெற்றி பெற்றாலும், படத்தில் ஹரியின் ஸ்கிரிப்ட் ஒர்க் பேசப்பட்டது. அடுத்து விக்ரமை வைத்து இவர் எடுத்த சாமி படம் வசூலில் படையப்பாவை விஞ்சி சாதனை படைத்தது.

இதனால் ஹரி நட்சத்திர இயக்குனரானார். லைம் லைட்டில் இருக்கும் இயக்குனர்களிடம் எல்லாம் கதை கேட்கும் பழக்கம் உடைய நடிகர் ரஜினி ஹரியிடமும் கதை கேட்டார்.

ரஜினியிடம் அய்யா என்ற படத்துக்கு கதையைக் கூறியிருப்பதாகவும், அது சாமியை விட நூறு மடங்கு பவர்புல் கதை என்று ஹரி பேட்டி கொடுத்தார். ஆனால் அந்தக் கதையில் நடிப்பது குறித்து ரஜினி பதிலேதும் சொல்லவில்லை.

பின்னர் சிம்பு கதாநாயகனாக நடிக்க கோவில் படத்தை இயக்கினார். படம் ஓடவில்லை. அடுத்து சாமி வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் கைகோர்த்து அருள் படத்தை இயக்கினார். விக்ரம், ஜோதிகா, வடிவேலு, பசுபதி என்று திறமையான நடிகர்கள் பலர் நடித்திருந்தும் கதையில் புதிதாக எதுவும் இல்லாததால் படம் ஓடவில்லை.

இதனையடுத்துதான் ஹரியைத் தூக்கி வைத்தவர்கள் எல்லாம் பட்டென்று கீழே போட்டுவிட்டு குறை சொல்ல ஆரம்பித்துள்ளனர். படத்தின் ஸ்கிரிப்டுக்காக ஹோம் ஒர்க் செய்வது இல்லை; அதே வேளையில் படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் அவசரம் காட்டுகிறார்; பாடல்களில் வித்தியாசம் இல்லை என்று வரிசையாக குற்றச்சாட்டுகள்.

இந்தக் குற்றசாட்டுகளின் பலன் கவிதாலயாவுக்காக இப்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் அய்யா படத்தில் எதிரொலிக்கிறது. ரஜினிக்காக செய்த கதையை சரத்குமாரை வைத்து இயக்க கவிதாலயா நிறுவனம் ஹரியை ஒப்பந்தம் செய்தது.

ஆனால், அருள் தோல்வியடைந்ததால், இப்போது அய்யா படத்தில் கவிதாலயா நிறுவனம் அநியாயத்துக்குத் தலையிடுகிறதாம். தமிழ் படத்துக்குப் பின், ஹரி எப்போதும் முழுக்கதையையும் தயாரிப்பாளரிடம் சொன்னதில்லை. ஒன்லைன் ஸ்டோரி சொல்லிவிட்டு சூட்டிங்குக்கு போய்விடுவார்.

ஆனால் அய்யா படத்தின் முழுக் கதையையும் சொல்லவேண்டும் என்று கவிதாலயா வற்புறுத்தவே, வேறு வழியின்றி கதை சொன்னாராம். இதையடுத்து நடிகர்களையும், தொழில் நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்வதிலும் கவிதாலயா அதிகமாகத் தலையிடுகிறதாம்.

வேறுவழியில்லாததால் ஹரியும் இதை சகித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று புலம்பாத குறைதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil