»   »  நிராகரித்தாரா நயனதாரா?

நிராகரித்தாரா நயனதாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிரஞ்சீவியின் 149வது படத்தில் நடிக்க நயனதாரா மறுத்ததாக ஆந்திராவில் செய்தி கிளம்பியுள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று நயனதாரா மறுத்துள்ளார்.

தமிழை விட தற்போது தெலுங்கில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார் நயனதாரா. காரணம், தமிழ் படம் என்றால் ஷூட்டிங்குக்காக சென்னை வர வேண்டும். வந்த இடத்தில் தேவையில்லாத வம்புகளை சந்திக்க நேரிடும். எதற்கு வம்பு என்றுதான் ஆந்திரா பக்கமே ஒதுங்கியிருக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் நயனதாரா.

தமிழ் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் கூட, வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு வைத்தால்தான் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

இந்த நிலையில் சிரஞ்சீவியின் 149வது படத்தில் நடிக்க நயனதாரா மறுத்து விட்டதாக ஒரு செய்தி டோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல என்கிறார் நயனதாரா.

இதுகுறித்து ஏவி.எம். ஸ்டுடியோவில் பில்லா படப்பிடிப்புக்காக வந்திருந்த நயனதாராவிடம் கேட்டோம். அப்போது நயனதாரா நமக்காக அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் கூறுகையில், சிம்புவுடன் எனக்கிருந்த நட்பு முறிந்தவுடன் ஆளாளுக்கு இஷ்டத்திற்கு என்னைப் பற்றி எழுதுகிறார்கள்.

அடிப்படையே இல்லாத பல வதந்திகளையும், கிசுகிசுக்களையும் எழுதித் தள்ளுகிறார்கள். இது சரியான ஜர்னலிசம் அல்ல. என்னிடம் ஒரு வார்த்தை கூட உறுதி செய்து கொள்ளாமல் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள்.

நான் நல்ல ஒழுக்கமுள்ள, கலாச்சாரங்களை மதிக்கக் கூடிய குடும்பத்திலிருந்து வந்த பெண். ஆனால் என்னைப் பற்றி ஏன் இப்படி தவறான செய்திளையே வெளியிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.

தெலுங்கில் நான் இன்னும் ஒரு வளரும் நடிகைதான். தெலுங்கில் எனது நிலை என்ன என்று எனக்குத் தெரியும். அதேபோல சிரஞ்சீவி போன்ற மாபெரும் நடிகர்களுக்கு இருக்கும் அந்தஸ்தும் எனக்குப் புரியும்.

அப்படி இருக்கையில் நான் எப்படி சிரஞ்சீவியுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுப்பேன்? உண்மையில் என்னிடம் அப்படி ஒரு வாய்ப்பே வரவில்லை. ஒருவேளை சிரஞ்சீவியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், மெகா ஸ்டாருடன் இணையும் அதிர்ஷ்டக்காரப் பெண்ணாக நான் இருப்பேன் என்றார் நயனதாரா.

பில்லா பக்கம் பேச்சைத் திருப்பினோம். நான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின்னர் ரஜினி சார் நடித்த பில்லாவை பார்த்தேன். அதில் ஸ்ரீபிரியாவும், பிரவீணாவும் நடித்த நடிப்பைப் பார்த்து அசந்து போய் விட்டேன்.

இப்போது அஜீத் நடிப்பில் உருவாகும் பில்லாவில் என்னுடன் நமீதாவும் நடிக்கிறார். அவர் பிரவீணா கேரக்டரில் நடிக்கிறார். நான் ஸ்ரீபிரியா வேடத்தில் நடிக்கிறேன்.

அஜீத் ஒரு சிறந்த நடிகர். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஸ்பெஷல் நடிகர் அவர். கடினமான உழைப்பாளி, தீவிரமாக செயல்படக் கூடியவர். தொழில் பக்தியும், சிறந்த நடிப்பாற்றலும் கொண்ட அஜீத் போன்றவர்களுடன் இணைந்து நடிப்பது என்னைப் போன்றவர்களுக்கு சந்தோஷமான விஷயம்.

பில்லா யூனிட்டார் என்னிடம் அன்பாக பழகுகிறார்கள். நான் பாதுகாப்பாக உணர்கிறேன். சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் நயனதாரா.

இப்போது நயனதாராவிடம் தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் உள்ளனவாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil