»   »  விக்ரமுக்கு மூன்று முகம்?

விக்ரமுக்கு மூன்று முகம்?

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் அசத்திய மூன்று முகம் படத்தின் ரீமேக்கில் விக்ரம் நடிக்கக் கூடும் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாக்காரர்களிடம் ஒரு விசேஷம் உண்டு. ஏதாவது ஒரு விஷயம் கிளிக் ஆகி விட்டால் அதையே பிடித்துக் கொண்டு சில காலத்திற்கு அதே டைப்பிலான படங்களை எடுத்துத் தள்ளுவார்கள்.

ஒரு காலத்தில் கிராமக் கதைகளைப் பின்னணியாகக் கொண்ட படங்களாக வந்து கொண்டிருந்தன. பிறகு இளைய தலைமுறையினர் நடிக்க வந்ததைத் தொடர்ந்து யூத் சப்ஜெக்ட் படங்களாக வந்தன. அப்புறம் வந்தது குத்துப் பாட்டு.

இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு வகையான படங்கள் வரும். அந்த வரிசையில் தற்போது ரீமேக் காலம் வந்துள்ளது. அதாவது தமிழில் சூப்பர் ஹிட் ஆன பழைய தமிழ்ப் படங்களையே உல்டா செய்து இப்போது ரீமேக் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இந்த ரீதியில், முதலாவதாக வந்த நான் அவனில்லை பெரும் வெற்றி பெற்றதால் ரீமேக் படங்கள் மீது தமிழ்த் திரையுலகினருக்கு பெரும் மோகம் பிறந்துள்ளது.

அஜீத் நடிக்க பில்லா ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது. மேலும் சில நடிகர்கள் ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். இயக்குநர்கள் சிலரும் ரீமேக் படங்களை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்காதவன் படத்தில் நடிக்க பரத் ஆசையாக உள்ளார். முரட்டுக்காளையில் நடிக்க விஜய்க்கு விருப்பம் உள்ளது. இப்படி இளம் தலைமுறையினர் ஆளுக்கு ஒரு பழைய படத்தை தங்களது ஹிட் லிஸ்ட்டில் வைத்துக் கொண்டுள்ளனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூன்று முகம் படத்தில் விக்ரம் நடிக்கக் கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. சத்யா மூவிஸ் தயாரிப்புதான் மூன்று முகம். அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் என மூன்று விதமான வேடங்களில் பின்னி எடுத்திருருப்பார் இப்படத்தில் ரஜினி. குறிப்பாக டி.எஸ்.பி. அலெக்ஸ் பாண்டியன் கேரக்டர் இன்றளவும் பேசப்படுகிறது.

பெரும் ஹிட் படமான மூன்று முகத்தில் நடிக்க விக்ரம் படு விருப்பமாக உள்ளாராம். தற்போது நடிக்கவுள்ள கந்தசாமி படத்தை முடித்து விட்டு மூன்று முகம் ரீமேக்கில் விக்ரம் நடிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தை ஹரி இயக்கக் கூடும் என்கிறார்கள். ஏற்கனவே சாமி, அருள் என இரு படங்களை விக்ரமை வைத்து இயக்கியுள்ளார் ஹரி. இதெல்லாம் நிஜமா சீயான் என்று விக்ரமிடமே கேட்டோம். அதற்கு விக்ரம், இதுவரை எதுவும் இறுதியாகவில்லை. ஹரியுடன் எனது அடுத்த படம் குறித்து விவாதித்தது உண்மைதான்.

ஆனால் என்ன பேசினோம் என்பதை இப்போது கூறுவதற்கில்லை என்று நழுவினார். ஆனால் அதுகுறித்துத்தான் பேசியிருப்பார்கள் என்று கோலிவுட்டில் பலமாக பேச்சு அடிபடுகிறது.

அலெக்ஸ் பாண்டியன் வேடத்தில் விக்ரம் நடித்தால் அசத்தலாகத்தான் இருக்கும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil