For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அஜீத் பிறந்த நாள்!

  By Staff
  |

  Ajith and Shalini
  அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் அன்புடன் போற்றப்படும் அஜீத்குமார் உழைப்பாளர் தினமான இன்று தனது 37வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

  கடும் உழைப்பு, விடா முயற்சிக்குச் சொந்தக்காரரான அஜீத் மே-1, 1971-ம் ஆண்டு பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பிராமண தந்தைக்கும், தஞ்சை சௌராஷ்ட்ரிய தாய்க்கும் மகனாகப் பிறந்தார். வாரிசுகள் மட்டுமே கொடிகட்டிப் பறந்த தமிழ் சினிமாவில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், வெறும் ஆர்வத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு களமிறங்கினார்.

  1992-ல் பிரேம புஸ்தகம் எனும் தெலுங்குப் (அஜீத் நடித்த ஒரே தெலுங்குப் படம்) படத்தில் தனது திரை உலகப் பயணத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வராவிட்டாலும், சோழா பொன்னுரங்கம் உருவில் தமிழ் வாய்ப்பு தேடிவந்தது. அந்தப் படம்தான் அமராவதி.

  தொடர்ந்து சின்னச்சின்ன படங்களாகச் செய்துகொண்டிருந்த அஜீத்துக்கு பெரிய பிரேக் கொடுத்த படம் அகத்தியனின் காதல்கோட்டை.

  அதன்பிறகுதான் அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்து அவருக்குக் கிடைத்தது. அழகான, சாப்டான, ரொமான்டிக் வேடங்களா... அஜீத்தான் பொருத்தமானவர் எனும் நிலை உருவானது.

  ஆனால் அதில் திருப்தியடையாத அஜீத் புதுப்புது முயற்சிகளில் இறங்கினார். அவரது நண்பரான நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியை தயாராரிப்பாளராகக் கொண்டு எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் வெளியான வாலி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

  குறிப்பாக இரட்டை வேடக் காட்சிகளில் வித்தியாசம் காட்டுவதற்காக விதவிதமான உத்திகளை எல்லாரும் கையாண்டு கொண்டிருந்த நேரத்தில், அஜீத் வெறும் பார்வையாலேயே அந்த வித்தியாசத்தைக் காட்டி மிரட்டிய படம் அது. வசூலில் சக்கைப் போடு போட்டது. இந்தப் படத்துக்காக 1999-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றார் அஜீத்.

  தொடர்ந்து, சில தோல்விப் படங்களுக்குப் பிறகு மீண்டும் சிட்டிசன் படத்தில் ஐந்து வித்தியாசமான செட்டப்புகளில் தோன்றி தனது நடிப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தினார் அஜீத்.

  2002-ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு இரட்டை வேடப் படத்தில் அசத்தினார். அதுதான் வில்லன். பெயர்தான் வில்லனே தவிர, தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என அனைவருக்கும் அந்த ஆண்டு நல்ல லாபத்தைக் கொடுத்த ஹீரோ அந்தப் படம்.

  அந்தப் படத்துக்குப் பிறகு வந்த மூன்றாண்டுகள் அஜீத்துக்கு இருண்டகாலம் போன்றவை. ஆஞ்சநேயா, ஜனா என வரிசையாக தோல்விகள், கார் ரேஸில் கவனம் என ஒரு நிலையற்ற தன்மை அவரது கேரியரில். அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வந்தது வரலாறு. இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் அசத்திய அஜீத், மிகப் பெரிய வசூல் நாயகனாகவும் மாறினார்.

  கடந்த ஆண்டு கிரீடம், பில்லா என இரண்டு படங்கள் கொடுத்தார். இதில் பழைய பில்லாவின் ரீமேக்கான புதிய பில்லா பெரும் வெற்றிப்படமானது.

  இப்போது ஏகன், சிவாஜி பிலிம்ஸின் புதிய படம், கே.எஸ்.ரவிக்குமாருக்காக ஒரு படம் என தன் ரசிகர்களுக்கு பெரிய திரை விருந்து தரத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வருகிறார் அஜீத்.

  அஜீத்துக்கு இன்றைய பிறந்த நாள் பெரும் விசேஷமானது. காரணம், மகளுடன் கொண்டாடும் முதல் பிறந்த நாள் என்பதால்.

  தல பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X