twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாய்மீராவிடம் ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு கமல் வழக்கு!

    |

    Kamal Haasan
    ரூ.11 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிரமிட் சாய்மீரா பட நிறுவனம் மீது நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பிரமிட் சாய்மீரா படநிறுவனம் சார்பில் அதன் இயக்குனர் நாராயணன் என்பவர் ஏற்கனவே வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

    அதில், ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து 'மர்ம யோகி' படத்தை தமிழ் மற்றும் இந்தியில் தயாரிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்து தராமல், அவரது நிறுவனம் சார்பில் தயாரித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் நடித்துள்ளார் என்றும், எங்களுக்கு சேரவேண்டிய ரூ.7 கோடியே 82 லட்சத்து 47 ஆயிரத்தை தர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

    அதுவரை இந்த படத்தின் பிரிண்டுகளை பிரசாத் லேப்பிலிருந்து வெளியில் கொண்டுவர அனுமதிக்க கூடாது என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ராஜசூரியா விசாரணை செய்து, கடந்த மாதம் 14ம் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். அதில் தற்போதைய நிலை அப்படியே நீடிக்கும் என்று கூறியிருந்தார்.

    ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் படநிறுவனத்தின் பங்குதாரரும் கமல்ஹாசனின் சகோதரருமான சந்திரஹாசன், இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

    அதில், சாய்மீரா நிறுவனம் கொடுத்த பணத்தை 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்காக நாங்கள் செலவு செய்யவில்லை. இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பாக பணத்தை திருப்பி தருகிறோம் என்றும் நாங்கள் தெரிவிக்கவில்லை.

    ரூ.40 கோடி செலவில் எடுக்கப்பட்ட 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு தடை விதித்தால் பாதிப்பை ஏற்படுத்தும். எங்களுக்கு இடையூறு செய்து, நிர்ப்பந்தம் செய்து பணம் பெறுவதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 'உன்னைப்போல் ஒருவன்' படத்தை திட்டமிட்டப்படி செப்டம்பர் 18ம் தேதி வெளியிடலாம். ராஜ்கமல் பிலிம் நிறுவனம் சார்பில் வழக்கு தொகை பாதியை செப்டம்பர் 30ம் தேதிக்குள் வங்கி உத்தரவாதமாகவோ, அசையா சொத்துக்களின் உத்தரவாதமாகவோ அல்லது பணமாகவோ டெபாசிட் செய்யலாம். தவறினால் அக்டோபர் 1ம் தேதி முதல் படத்தை திரையிட தடை விதிக்கும் உத்தரவு அமலுக்கு வரும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    இந்த உத்தரவைத் தொடர்ந்து படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

    ரூ.4 கோடிக்கு வங்கி உத்தரவாதம்:

    இந்த வழக்கு நேற்று நீதிபதி ராஜசூரியா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜ்கமல் பிலிம் நிறுவனம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், ரூ.3 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 834க்கு கனரா வங்கி உத்தரவாதம் அளித்துள்ளோம். இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த உத்தரவாதம் வழங்குவதால் அப்பீல் செய்யும் உரிமை எங்களுக்கு பாதிக்கக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    சாய்மீரா பட நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் ஒரு ஆண்டுக்கு மட்டுமே வங்கி உத்தரவாதம் அளித்திருப்பதாக தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, இந்த வங்கி உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

    ரூ.11 கோடி நஷ்ட ஈடு:

    இந் நிலையில், கமல்ஹாசன், சாய்மீரா படநிறுவனம் மீது ரூ.11 கோடி நஷ்டஈடு கேட்டு புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

    'மர்ம யோகி' படம் தொடர்பாக சாய்மீரா நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு 2 படங்களில் முக்கியமான வேடத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ரமேஷ் சிப்பி நிறுவனம் ரூ.10 கோடி தருவதாகவும், தங்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. 'மர்ம யோகி' படம் ஒப்பந்தம் காரணமாக நான் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டேன்.

    அடுத்து, 'வால்ட் டிஸ்னி' நிறுவனம் படத்தில் நடிக்க அழைத்தது. ரூ.10 கோடி தருவதாகவும், பின்னர் ரூ.20 கோடியாக உயர்த்திld தருவதாகவும் வேண்டுகோள் விடுத்தது. இதிலும் நான் ஏற்க மறுத்துவிட்டேன். 'மர்ம யோகி' படம் ஒப்பந்தம் இல்லாவிட்டால், நான் ரூ.30 கோடி சம்பாதித்திருப்பேன். 'மர்ம யோகி' படம் காரணமாக நான் ஒரு ஆண்டாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

    மர்ம யோகி' படத்துக்காக ஒப்பந்தம் செய்யும்போது சாய்மீரா படநிறுவனத்தின் நிதி நிலைமை எனக்குத் தெரியாது. ரூ.1.5 கோடி 'செக்' தந்தனர். அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. முழுமையான நிதி நிலைமையை அந்த நிறுவனம் எனக்கு தெரிவிக்கவில்லை.

    மேலும், என்னையும் பிற படத்தில் நடிக்க விடாமல் தடுத்ததால் எனக்கு ரூ. 40 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக ரூ.11 கோடியை 10 சதவீத வட்டியுடன் வழங்குமாறு உத்தரவிட வேண்டும், என்று கூறியுள்ளார்.

    இந்த மனுவையும் நீதிபதி ராஜசூரியா நேற்று விசாரித்தார். வழக்கு விசாரணையை வரும் 9ம்ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். அதற்குள் பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு சாய்மீரா நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X