twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விழாவுக்கு வரச் சொல்லி மிரட்டுவதா..? அஜீத் பரபரப்பு பேச்சு!

    By Staff
    |

    Ajith Kumar
    நிகழ்ச்சிகளுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று திரையுலக அமைப்பினர் நடிகர்களை மிரட்டுகிறார்கள். இது நியாயமா என்று முதல்வர் முன்னிலையிலேயே குமுறினார் நடிகர் அஜீத்குமார்.

    அவரது பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.

    தமிழ் சினிமாக்காரர்களுக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

    இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல்வருக்கு கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், நேற்று மாலை பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் கருணாநிதி 5.10 மணிக்கு விழா அரங்கிற்கு வந்தார்.

    அவருடன், நடிகர்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன் ஆகியோர் வந்தனர். முதல்வர் கருணாநிதியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர்.

    விழாவில் நடிகர் அஜீத் பேசுகையில், "முதல்வர் கலைஞர் மீது நான் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வந்தே தீர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். ஆனால் நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால் எதிர்க்கிறார்கள்.

    ஆனால் எனக்கு அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. நடிகர்கள் யாரும் அரசியலுக்கு செல்ல வேண்டாம். நடித்து முன்னேறுங்கள். நடிகர்களுக்கு வரும் மிரட்டல்களை முதல்வர்தான் தீர்க்க வேண்டும்.

    நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும் சினிமாவையும் ஒன்று சேர்க்காதீர்கள். சினிமாவில் அரசியலை புகுத்தாதீர்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடனான பிரச்சனையை தீர்க்க அரசாங்கம் இருக்கிறது. எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள்.

    தமிழ் திரையுலகத்துக்கு கலைஞர் செய்துள்ள உதவிக்கு, நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணத்திலும், நன்றி விசுவாசத்திலும்தான் நான் இங்கு வந்துள்ளேன்" என்றார்.

    நடிகர் அஜீத்தின் இந்தப் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினார் ரஜினி.

    விசி குகநாதன் மறுப்பு!

    அஜீத் பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஃபெப்சி தலைவர் வி சி குகநாதன் உடனே எழுந்து நின்று அஜீத்தின் இந்தப் பேச்சைக் கண்டிக்கும் விதத்தில் பேசினார். நாங்கள் யாரும் அஜீத்தையோ மற்ற நடிகர் நடிகைகளை மிரட்டவில்லை என்றும் கூறினார்.

    பக்கத்து மாநிலமான ஆந்திராவில் இதுபோன்ற திரையுலகம் சார்ந்த விழா என்றால் திரைத்துறையில் இருக்கும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியைப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது.

    திரையுலகில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகத்தான் இதுபோன்ற விழாக்களில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோமே தவிர, நாங்கள் யாரையும் மிரட்டவில்லை..." என்றார்.

    கட்டாயப்படுத்தவோ மிரட்டவோ முடியாது! - சரத்

    நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பேசுகையில், "திரையுலகில் இருக்கும் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதைக் காட்டத்தான் இதுபோன்ற விழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நடிகர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் யாரையும் நிர்பந்திக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை. நடிகர்களை யாரும் மிரட்ட முடியாது. இந்த விழா கலைஞருக்கு நன்றி சொல்லும் விழா. கருத்து சொல்லுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. இந்த விழாவில் அஜீத் பேசும்போது அவருடைய சொந்த கருத்தை கூறியுள்ளார். இதை பத்திகையாளர்கள் திசை திருப்பி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் எடுக்கும் நன்றி தெரிவிப்புக் கூட்டம் இது.

    இதில் அனைத்து திரைத் துறையினரும் கலந்து கொண்டால்தான் சிறப்பாக இருக்கும் என்று வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி அனைவரும் கலந்துகொண்டதற்கு... நன்றி," என்றார்.

    நடிகர் சங்கச் செயலாளர் ராதாரவி போன்றோர் அஜீத்துக்கு ஆறுதல் கூறினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X